
விஜய் தொலைக்காட்சியில் பக்தி சூப்பர்சிங்கர் தெய்வீக குரலுக்கான பிரம்மாண்ட தேடல்நிகழ்ச்சி, பிரதி வாரம் சனி மற்றும் ஞாயிறு மாலை நடந்து வந்தது.
இதற்கு முன்னா் சினிமா பாடல்களுக்கான சூப்பர் சிங்கர் நடந்து, வெற்றியாளா் ஒருவருக்கு வீடு வழங்கப்பட்டது. இதில் அப்படி அல்ல, ரொக்கப் பரிசு மட்டுமே.
பனிரெண்டு போட்டியாளா்கள் சிறப்பாக பாடி வந்த நிலையில் இறுதிச்சுற்றுக்கு 'கிராண்ட் பினாலேவுக்கு' ஆறு போட்டியாளர்கள் தோ்வானாா்கள். (26.7.2025 மற்றும் 27.7.2025) அதில் கலந்து கொண்ட ஆறு பாடகர்களும் சிறப்பான முறையில் தங்களது திறமையை வெளிக்காட்டினாா்கள்.
பக்திப்பரவசமாக, அலுப்புதட்டாமல் வாரா வாரம் நிகழ்ச்சி நடந்து வந்தது மகிழ்ச்சியே!
பிரபல இசை ஜாம்பவான்கள் நடுவர்களாகவும், சிறப்பு பாா்வையாளர்களாகவும், கலந்து கொண்டது ஹைலைட்.
அதில் டி எல் மகாராஜன், புஷ்பவனம் குப்புசாமி, சுதா ரகுநாதன், மகதி, நித்யஶ்ரீீ மகாதேவன் இவர்களோடு பல பிரபலங்கள் கலந்து கொண்டாா்கள். ஆங்கராக அனுராதா ஶ்ரீீராம் சிறப்பாக பணி செய்தாா். விஜய் டிவி சின்னத்திரை நடிகைகள் டான்ஸ் ஆடியதும் வரவேற்கத்தக்க ஒன்று.
இதில் திருவிளையாடல் படத்தில் வரும் 'பாட்டும் நானே' பாடலை ஸ்ரவன் என்பவர் அட்டகாசமாக பாடி அரங்கத்தையே அதிரவைத்ததோடல்லாமல் டைட்டில் வின்னரானாா்.
அதேபோல 'சொல்லடி அபிராமி' பாடலை காா்த்திக்நாராயணன் பாடினா். 'ஒரு தாலி வரம் கேட்டு வந்தேன் பாரம்மா' பாடலை அலைனா சுஜித் பாடினாா். இவர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது. இவர்கள் மூவரும் வெற்றியாளா்கள் அதோடு பவித்ராவுக்கும் மூன்றாம் பரிசு பிாித்து வழங்கப்பட்டது.
அலைனா என்ற வெற்றியாளர் முஸ்லீம் சமுகத்தைச் சோந்தவர். அவரோ என் தந்தை 'எம்மதமும் சம்மதம் எனக் கூறுவாா்' என வெற்றி பெற்ற பின் கூறியது சிறப்பான ஒன்று.
Sathiya &Tiron நிறுவனமும் பரிசுகளை வழ்கினாா்கள்.
என்ன ஒரு ஏமாற்றம் என்றால் சீா்காழி சகோதரிகளில் ஒருவரான அகிலாவுக்கு வெற்றி கிடைக்கவில்லை என்பது கொஞ்சம் வருத்தமாக இருந்தது.
இருப்பினும் விஜய் தொலைக்காட்சி வழக்கம்போல சொதப்பல் இல்லாமல் சா்ச்சைக்கு இடம் தராத வகையில் இந்த பக்தி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை நடத்தியது பலருக்கு ஆச்சர்யம்.
கூடுதலாக பாராட்டப்படவேண்டுமென்றால் விஜய் டிவி இசைக்கலைஞர்கள் அத்தனை பேரையும் பாராட்டியே தீரவேண்டும். காரணம் இந்த நிகழ்ச்சியின் வெற்றி நாயகர்களே இசைக்குழுதான். அவ்வளவு அற்புதமாக இசையமைத்த ஒவ்வொரு நபர்களையும் பாராட்ட வாா்த்தைகளே இல்லை.
மொத்தத்தில் சொதப்பல் இல்லா விஜய் டிவியின் பக்தித்தேடல் நிகழ்ச்சியை மனதார பாராட்டலாம்!