ஓடிடி தளங்களின் பார்வை கன்னடத்தின் பக்கம் திரும்புமா?

Kannada movies
Kannada movies
Published on

ஓடிடி தளங்கள் பல மொழித் திரைப்படங்களையும் ஆதரித்து வரும் நிலையில், கன்னட திரைப்படங்கள் மட்டும் ஓரங்கட்டப்படுவதாக ரிஷப் ஷெட்டி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவல்களை இப்போது காண்போம்.

இந்திய சினிமாவில் பல மொழிகளில் இருந்தும் ஆண்டுதோறும் பல படங்கள் திரைக்கு வருகின்றன. இதில் பல படங்கள் மெகா ஹிட் அடித்து வசூலில் சாதனைப் படைக்கின்றன. சில படங்கள் தோல்வியையும் சந்திக்கின்றன. இருப்பினும் திரையில் வசூலிக்காவிடினும், ஓடிடி தளங்கள் தான் சில படங்களை காப்பாற்றி வருகின்றன.

கொரோனா காலகட்டத்திற்கு பிறகு ஓடிடி தளங்களின் எண்ணிக்கையும், பார்வையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன. அதற்கு முன்பே கூட சில ஓடிடி தளங்கள் இருந்திருந்தாலும், கொரோனா வைரஸ் வருகைக்குப் பின் தான், இவை முன்னேற்றப் பாதையில் செல்லத் தொடங்கின. அவ்வகையில் திரைக்கு வந்த படங்கள், சில நாட்கள் கழித்து ஓடிடி தளங்களில் வெளியாவது வழக்கமாகி விட்டன. மேலும் சில படங்கள் நேரடி ஓடிடி ரிலீஸாகவும் வெளிவருகின்றன. இதன்மூலம் படத்தின் தயாரிப்பாளருக்கு கூடுதல் இலாபமும் கிடைக்கிறது. அதோடு தியேட்டருக்குச் செல்வதை விரும்பாதவர்களுக்கு ஓடிடி தளங்கள் நல்ல தேர்வாக இருக்கின்றன.

கடந்த 2022 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளிவந்த காந்தாரா திரைப்படம் மெகா ஹிட் அடித்தது. கன்னடத்தில் வெற்றி பெற்ற இப்படத்தை தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியிட்டனர். பான் இந்திய அளவில் வெற்றி பெற்ற காந்தாரா திரைப்படத்தை இயக்கி நடித்தவர் ரிஷப் ஷெட்டி. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது.

சமீபத்தில் இந்திய மொழித் திரைப்படங்களுக்கு வழங்கப்படும் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டன. இதில் கன்னடத்தில் சிறந்த நடிகர் விருதை காந்தாரா திரைப்படத்திற்காக ரிஷப் ஷெட்டி வென்றார். மேலும் சிறந்த பொழுதுபோக்கு திரைப்படத்திற்கான விருது காந்தாரா படத்திற்கு வழங்கப்பட்டது. விருது வழங்கும் விழாவில் ரிஷப் ஷெட்டி கூறிய கருத்து சினிமா வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்:
சிறு பட்ஜெட் படங்களைக் காப்பாற்றுமா ஓடிடி பிளஸ்?
Kannada movies

நடிகர் ரிஷப் ஷெட்டி கூறுகையில், “கன்னட மொழித் திரைப்படங்களை வாங்குவதற்கு ஓடிடி தளங்கள் முன்வருவதில்லை. எங்கள் மொழித் திரைப்படங்கள் விழாக்களில் திரையிடப்படும் அளவிற்கு கொண்டாடப்படுகின்றன. அதேசமயம் பல விருதுகளையும் வெல்கின்றன. இப்படி இருக்கையில் ஏன் ஓடிடி தளங்கள் கன்னட திரைப்படங்களை புறக்கணிக்கிறார்கள் என்பது தெரியவில்லை. இதன் காரணமாக எங்கள் படங்களை யூடியூபில் வெளியிட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறோம்” என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

கேஜிஎஃப் மற்றும் காந்தாரா போன்ற படங்கள் பான் இந்திய அளவில் நல்ல வரவேற்பை பெற்று, பாக்ஸ் ஆபிஸையும் அதிரச் செய்தன. இப்படங்களின் அடுத்தடுத்த பாகங்கள் வெளிவர இருக்கும் நிலையில், இனியாவது ஓடிடி தளங்கள் கன்னட திரைப்படங்களை ஆதரிக்குமா என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com