
தமிழ் சினிமாவில் பாடலாசிரியர், கவிஞர், நடிகர், அரசியல்வாதி, பேச்சாளர் என பன்மக திறமை கொண்டவர் சினேகன். இவர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். ‘பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை’, ‘ஞாபகம் வருதே’, ‘ஆராரிராரோ நான் இங்கே பாட’, ‘அவரவர் வாழ்க்கையில்’, ‘தோழா தோழா’ போன்ற பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவை. இவர் எழுதிய பல பாடல்கள் ரசிகர்கள் கொண்டாடிய பாடல்களாக தான் இருக்கும். சினேகள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வரை இவர் தான் ஹிட் பாடல்களை கொடுத்தார் என்பது நிறைய ரசிகர்களுக்கு தெரியாது. பிக்பாஸில் கலந்து கொண்டதற்கு பிறகு தான் சினேகனின் பாடல்கள் வெளியில் தெரியவே ஆரம்பித்தது என்று சொல்லலாம்.
இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்த இவர் 2000-ம் ஆண்டு முதல் பாடல் எழுதத் தொடங்கினார். இவர் கவிஞர் வைரமுத்துவிடம் உதவியாளராகப் பணியாற்றிய பின்னர் புத்தம் புது பூவே திரைப்படத்தில் பாடலாசிரியராக அறிமுகம் ஆனார். 2009-ம் ஆண்டில் யோகி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார்.
இவர், கடந்த 2021-ம் ஆண்டு 7 ஆண்டுகளாக காதலித்த சீரியல் நடிகை கன்னிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கன்னிகாவும் சினேகனும் காதலித்ததை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வைத்திருந்து திடீரென காதலை அறிவித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் கமல்ஹாசன் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். இதைத்தொடர்ந்து அனைவரின் மனம் கவர்ந்த காதல் ஜோடியாக வலம் வந்த இவர்கள், கடந்த வருடம் கன்னிகா கர்ப்பமாக இருக்கும் செய்தியை அறிவித்த நிலையில் ஜனவரி 25ந் தேதி இவர்களுக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தது.
இதைத்தொடர்ந்து, கமல்ஹாசன், சினேகனின் இரட்டை பெண் குழந்தைகளுக்கு ‘காதல்’, ‘கவிதை’ என அழகான தமிழ் பெயர்களை வைத்து, குழந்தைகளுக்கு தங்க வளையல் அணிவித்து ஆசிர்வதித்தார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சினேகன் மற்றும் கன்னிகா அவர்களுடைய மகள்கள் பிறந்தது முதல் அவர்களுக்கு பெயர் வைத்தது வரை தன்னுடைய குழந்தைகள் செய்யும் சின்னச்சின்ன செயல்களையும் கூட சமூகவலைதளங்களில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், காதல் மற்றும் கவிதை பிறந்து 100 நாட்கள் கடந்து விட்டதால் அதனை மனைவி மட்டும் குடும்பத்துடன் சினேகன் எளிமையாக கொண்டாடி இருக்கிறார். தன்னுடைய இரண்டு குழந்தைகளுக்கும், மனைவிக்கும் வெள்ளி கொலுசு வாங்கி பரிசாக கொடுத்திருக்கிறார். வாங்கி கொடுத்தது மட்டுமில்லாமல் அதை அவர்கள் காலிலும் அணிவித்து அழகு பார்த்துள்ளார். இந்த வீடியோவை சினேகனின் மனைவி கன்னிகா தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்து இருக்கிறார். இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் இதனை பார்த்த இணையவாசிகள் குடும்பத்தினருக்கு தங்களின் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.