
பாடலாசிரியர் சினேகன் மற்றும் நடிகை கன்னிகாவுக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ள தகவலை, அவர்களே புகைப்படம் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.
பிரபல பாடலாசிரியரான சினேகன் தமிழ் சினிமாவில் பல பாடல்களை எழுதியுள்ளார். இதுவரை இவர் சுமார் 70-க்கும் மேற்பட்ட படங்களில் பாடல்களை எழுதியுள்ளார். கவிஞரான இவர் பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்று தமிழக மக்களிடையே அதிக புகழ் பெற்றார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பாக விளையாடி, ரன்னராக வந்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார். பிறகு பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் அவர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்துள்ளார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு டெபாசிட் இழந்தார். இவர் நடிகை கன்னிகாவை நீண்ட காலமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. கன்னிகா சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கல்யாண வீடு எனும் சீரியலில் நடித்துள்ளார். அதுபோல் வெள்ளித்திரையிலும் கன்னிகா தேவராட்டம், அடுத்த சாட்டை போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
முதலில் இவர்களது வயது வித்தியாசம் குறித்து அதிகம் விமர்சிக்கப்பட்டது. ஆனாலும் அதையெல்லாம் உடைத்தெறிந்துவிட்டு வெற்றிகரமான தம்பதியாக வலம் வந்தனர். கடந்த வருடம் கன்னிகா, தான் கர்ப்பமாக இருந்ததை அறிவித்ததை தொடர்ந்து பல வீடியோக்கள் வெளியாகி ட்ரெண்டாகி வந்தன.
இந்த நிலையில் தற்போது இவர்களுக்கு 2 தேவதைகள் பிறந்ததாக சினேகன் உருக்கமாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள பதிவில், "இறைவா நீ ஆணையிடு தாயே எந்தன் மகளாய் மாற "... என்ற எனது அன்பின் கோரிக்கை இரட்டிப்பாய் நிறைவேறியது... தாயே எந்தன் மகளாகவும்... மகளே எந்தன் தாயாகவும் ... இரு தேவதைகள் பிறந்திருக்கிறார்கள் ... இதயமும், மனமும் மகிழ்ச்சியில் நெகிழ்ந்து நிரம்பி வழிகிறது ... உங்களின் தூய அன்பினால் எங்கள் வாரிசுகளை வாழ்த்துங்கள்" என குறிப்பிட்டுள்ளார். இதை தொடர்ந்து ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.