ஆஸ்கரின் இறுதிப் பட்டியலில் இருந்து வெளியேறியது 2018 திரைப்படம்.
திரை உலகின் தலைசிறந்த விருதாக கருதப்படுவது ஆஸ்கர். இவ்விருதை பெற உலகம் முழுவதும் நடிகர்கள், இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் என்று திரைத்துறையில் உள்ள பல்வேறு தரப்பினருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும். இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சி வரும் மார்ச் மாதம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ளது. இதற்காக உலகம் முழுவதும் உள்ள தலைசிறந்த திரைப்படங்களை தேர்வு செய்யும் பணியில் ஆஸ்கர் விருது குழுவினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் நடப்பாண்டில் மலையாளத்தில் வெளியான 2018 படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய இந்திய திரைப்படமாக மாறி இருக்கிறது. பல்வேறு தரப்பினரிடம் இருந்து பாராட்டுக்களை குவித்தது. 2018 ஆம் ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளையும் மற்றும் அப்பொழுது நிகழ்ந்த உண்மை சம்பவங்களையும் கதையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இத்திரைப்படம், நடப்பாண்டு வெளியான சிறந்த படங்கள் ஒன்றாக உள்ளது.
இந்த நிலையில் 2018 திரைப்படம் தற்போது ஆஸ்கர் விருதுக்காக தேர்வு செய்யப்பட்ட உலகின் தலைசிறந்த 88 திரைப்படங்கள் கொண்ட பட்டியலில் இடம் பெற்றிருந்தது. தற்போது இறுதியாக வெளியிடப்பட்டுள்ள 15 படங்கள் கொண்ட இறுதிப்பட்டியில் இருந்து வெளியேறி உள்ளது.
இதுகுறித்து படத்தின் இயக்குனர் ஜூட் அந்தனி ஜோசப் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளது, ஆஸ்கர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட கடைசி பட்டியலான 15 படங்கள் கொண்ட பட்டியலில் 2018 இடம்பெறவில்லை. இதற்காக எனது நண்பர்கள், ரசிகர்கள் என்ற அனைவரிடமும் மன்னிப்பு கேட்கிறேன். ஆஸ்கர் விருது பெறும் பட்டியலில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துவதே எனது பயணம்.
இப்படி ஒரு அற்புதமான சூழ்நிலை ஏற்படுத்திய கடவுளுக்கு நன்றி. உடன் நின்ற அனைவருக்கும் நன்றி. பட்டியில் இடம்பெற்றுள்ள மற்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள். இன்று முதல் அதுவே லட்சியம். நானும் விரைவில் கலந்து கொள்வேன். சந்திப்போம் ஆஸ்கர் என்று பதிவிட்டுள்ளார்.