3 படங்கள்... ரூ.500 கோடி வசூல்... சாதனை படைத்த ராஷ்மிகா மந்தனா!
2016-ம் ஆண்டு கிரிக் பார்ட்டி என்ற கன்னடத் திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார் ராஷ்மிகா மந்தனா, அடுத்து விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்த கீதா கோவிந்தம் திரைப்படம் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது மட்டுமில்லாமல் அவருக்கு தனி ரசிகர்கள் கூட்டமே உருவானது.
தனது வசீகரம், நடிப்புத் திறன், கவர்ச்சி மற்றும் தொற்றுப் புன்னகையால் உலகளவில் மில்லியன் கணக்கான ரசிகர்களைப் பெற்றுள்ள நடிகை ராஷ்மிகா மந்தனா, 'நேஷனல் க்ரஷ் ஆஃப் இந்தியா' என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுகிறார்.
இந்நிலையில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக சுல்தான் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாக இவர் சமீபத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்திலும் நடித்திருந்தார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்த ராஷ்மிகா மந்தனா பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக அனிமல் படத்தில் நடித்ததன் மூலம் 'பான் இந்தியா' நடிகையாவும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார்.
அதனை தொடர்ந்து தெலுங்கில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக புஷ்பா படத்தில் கிராமத்து பெண்ணாக இவர் ஏற்று நடித்த ஸ்ரீவள்ளி கதாபாத்திரம் தேசிய அளவில் பாராட்டைப் பெற்றது. அதன்பிறகு தான் இவருக்கு ஜாக்பாட் அடித்தது என்று சொல்லலாம்.
இவர் கடைசியாக மராத்திய பேரரசர் சத்ரபதி சிவாஜி - சாயிபாய் தம்பதியின் மூத்த மகனான சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள 'சாவா' திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் சம்பாஜி மகராஜாவாக பிரபல பாலிவுட் நடிகர் விக்கி கவுசலும், சம்பாஜியின் மனைவியான மகாராணி ஏசுபாய் கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனாவும் நடித்திருந்தனர்.
கடந்த பிப்ரவரி 14-ம்தேதி வெளியான இந்த படம் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல் இவரது நடிப்பு பெரியளவில் பேசப்பட்டது. இந்த படம் அனைத்து சாதனைகளையும் உடைத்து உலகளவில் ரூ.727 கோடியும், இந்தியாவில் மட்டும் ரூ. 550 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டியுள்ளது. இதன் மூலம் புதிய வரலாற்று சாதனை படைத்திருக்கிறார் ராஷ்மிகா மந்தனா.
அதாவது இவர் இதற்கு முன் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்த ’புஷ்பா 2’ இந்தி பதிப்பில் ரூ.800 கோடியும், ரன்பீர் கபூருக்கு ஜோடியாக நடித்த ‘அனிமல்’ திரைப்படம் ரூ.555 கோடியும், விக்கி கவுசலுடன் ஜோடியாக நடித்த சாவா திரைப்படம் ரூ.727 கோடியும் வசூலித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் இந்தியில் தொடர்ந்து மூன்று ரூ.500 கோடி வசூல் செய்த படங்களை கொடுத்த ஒரே நடிகை என்ற பெருமையை ராஷ்மிகா மந்தனா பெற்றுள்ளார்.
ஒரு தென்னிந்தியா நடிகையின் திரைப்படம் ரூ.500 கோடி வசூல் செய்து பாலிவுட்டில் சாதனை படைத்திருப்பதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
பாலிவுட் தயாரிப்பாளர்களும் ராஷ்மிகாவின் திரைபடங்கள் தொடர்ந்து வெற்றிப்படமாக மட்டுமில்லாமல், வசூலிலும் சாதனை படைத்து வருவதால் அவரை தங்களது படங்களில் புக் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.