
1. ராஜபுத்திரன்: நல்ல கதை, சிறந்த நடிப்பு - ஓகே பார்க்கலாம் - ரேட்டிங் - 3/5
பிரபு, வெற்றி இணைந்து நடித்து வெளிவந்துள்ள படம் ராஜபுத்திரன். மஹா கந்தன் இப்படத்தை இயக்கி உள்ளார். ராமநாதபுரம் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் வாழ்ந்து வருகிறார் செல்லையா (பிரபு) தன் மகன் பட்டா முத்து (வெற்றி) மீது அளவுகடந்த அன்பு கொண்டுள்ளதால் மகனை வேலைக்கு அனுப்ப மறுக்கிறார். வீட்டின் பொருளாதார சூழ்நிலையின் காரணமாக அப்பாவுக்கு தெரியாமல், நிதி குற்றங்கள் புரியும் ஒரு லோக்கல் தாதா விடம் வேலைக்கு சேர்க்கிறார் வெற்றி. அங்கே வெற்றிக்கு பிரச்சனை வருகிறது அந்த பிரச்சனையில் அப்பா செல்லையா எப்படி ரியாக்ட் செய்கிறார் என்று இந்த ராஜபுத்திரன் சொல்கிறது.
படத்தின் டைட்டில் ஹீரோ வெற்றியை மனதில் வைத்து டைரக்டர் வைத்திருந்தாலும், தனது நடிப்பாலும், திரையின் மீது செலுத்தும் ஆளுமையாலும் பிரபு தான் படத்தில் ராஜகுமாரனை போல் வருகிறார். பிரபு ஹீரோவாக நடித்த காலகட்டங்களை விட இப்போது குணசித்திர வேடத்தில் இன்னும் சிறப்பாக நடிக்கிறார். மகனிடம் பாசம் காட்டும் போதும், கிளைமாக்ஸ் காட்சியில் மகனை நினைத்து, ஒரு குழந்தை போல் ஓடும் போதும் பிரபுவின் நடிப்பு மாஸாக இருக்கிறது. இது வரை தான் நடித்த படங்களை விட இந்த படத்தில் ஓரளவு நடிக்க முயற்சி செய்திருக்கிறார் வெற்றி. ஹீரோயின் கிருஷ்ண பிரியா தென் மாவட்டத்தை சேர்ந்த ஒரு இளம் பெண்ணை போல் உடல் மொழியை நடிப்பில் கொண்டு வந்து விட்டார்.
நவ்வால் ராஜாவின் இசையில் பாடல்களில் இளையராஜாவின் சாயல் இருக்கிறது. ஆலிவரின் ஒளிப்பதிவில் ராமநாதபுரம் மாவட்டத்தின் கரிசல் பூமியின் வெப்பம் சரியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. படத்தில் சிறு குறைகள் இருந்தாலும் பிரபுவின் நடிப்பிற்காகவும், அப்பா-மகன் செண்டிமெண்ட்ற்காகவும் இந்த படத்தை பார்க்கலாம்.
2. ஜின் - தி பெட்: குழந்தைகளுக்கு கூட பிடிக்குமா? சந்தேகமே... - ரேட்டிங் - 2/5
"நான் உங்கள் அடிமை" என்று பூதம் மண்டியிட்டு சேவகம் செய்யும் கதையை பட்டணத்தில் பூதம் படத்திலேயே பார்த்து விட்டோம். இதே போன்று ஒன் லைனுடன் நல்லது செய்யும் பேய், பூதம் என்ற பெயரில் வந்துள்ளது 'ஜின் - தி பெட்' திரைப்படம்.
இந்த படத்தை TR பாலா தயாரித்து இயக்கி உள்ளார். மலேசியாவில் இருந்து சென்னை வீட்டுக்கு வரும் ஹீரோ முகின் ராவ், ஜின் என்ற ஆமானுஷ்யம் நிறைந்த ஒரு பெட்டியை கொண்டு வருகிறார். அந்த பெட்டி வந்த பிறகு ஹீரோ வாழ்க்கையில் பல நல்ல விஷயங்கள் நடக்கிறது. இருந்தாலும் ஹீரோ வீட்டினருக்கு ஜின் பெட்டியை பிடிக்க வில்லை. ஹீரோ - ஹீரோயினுக்கு பிரச்சனை வரும் போது அந்த ஜின் பெட்டிக்குள் இருந்து ஒரு உருவம் வெளிப்பட்டு ஹீரோ ஹீரோயினுக்கு உதவி செய்கிறது.
ஒரு ஹைதர் காலத்து கதையில் எந்த வித சுவாரசியத்தையும் வைக்காமல் மிக சுமாரான படமாக தந்துள்ளார் டைரக்டர். படத்தில் உதவி செய்யும் ஜின் என்ற பெயரில் ஒரு பெரிய உருவம் வருகிறது. இதை பார்த்தால் குழந்தைகள் பயப்படவும் மாட்டார்கள், சிரிக்கவும் மாட்டார்கள் காரணம் இதை விட பெரிய உருவங்கள் எல்லாம் குழந்தைகள் கார்டூனில் பார்த்து விடுகிறார்கள்.
நடிப்பை பற்றி என்னத்த சொல்ல... வழக்கம் போல் படத்தில் வடிவுக்கரசி மட்டும் சிறப்பாக நடித்திருக்கிறார். ஜின் - தி பெட் குழந்தைகளுக்கு கூட பிடிப்பது சந்தேகமே.
3. மனிதர்கள்: என்னதான் பட்ஜெட் கம்மியா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா? - ரேட்டிங் - 2/5
நண்பர்கள் குழுவாக சேர்ந்து crowdfunding என்ற முறையில் மனிதர்கள் படத்தை தயாரித்துள்ளனர். ராம் இந்திரா இந்த படத்தை இயக்கி உள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு மலை பகுதியில் ஆறு நண்பர்கள் சேர்ந்து குடிக்கிறார்கள்.
அங்கே ஏற்படும் தகராறில் நண்பர்களில் ஒருவர் கொலை செய்யப்பட்டு விடுகிறார். மற்ற நண்பர்கள் கொலை செய்யப்பட்ட நபரின் உடலை கார் டிக்கியில் வைத்து கொண்டு சிறு மலையை நோக்கி நகர்கிறார்கள். இந்த பயணத்தில் நடைபெறும் சம்பவங்கள் தான் படம்.
கார் டிக்கியில் கொலை செய்யப்பட்ட சடலம் என்ற ஒன்லைனில் ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் வகையாக வந்திருக்க வேண்டிய படம் துரதிஷ்டவசமாக அப்படி வரவில்லை. என்னதான் லோ பட்ஜெட் படமாக இருந்தாலும் படத்திற்கு தேவையான காட்சிகள் வேண்டாமா? செலவுகள் அதிகமாகும் என்பதால் காட்சிகளை அதிகம் வைக்கவில்லை டைரக்டர். இதற்கு பதிலாக ஐந்து பேருக்கும் டைட் க்ளோசப் அதிகம் வைத்திருக்கிறார். இந்த ஐந்து பேரும் வாய் சண்டை போட்டு கொண்டு இருக்கிறார்கள். இது சற்று அயற்சியை தருகிறது. ஒரு த்ரில்லர் படத்திற்கான பரபரப்பு, சுவாரசியம் எதுவும் படத்தில் இல்லை. இரவில் நடக்கும் கதையில் ஒரு மாறுபட்ட ஒளிப்பதிவு செய்து ஒளிப்பதிவாளர் அஜய் ஆபிரகாம் மட்டும் மனதில் நிற்கிறார்.