தமிழ் சினிமாவில் வெள்ளிக்கிழமை என்றாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். அதற்கு காரணம் வித்தியாசமான கதைகளில் ஒவ்வொரு வாரமும் புதிய புதிய திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அந்தவகையில் கடந்த வாரம் (மே 23-ம்தேதி) 8 படங்கள் வெளியான நிலையில் இன்று (மே 30-ந் தேதி) 6 புதிய படங்கள் வெளியாக உள்ளது. இன்று வெளியாகும் தமிழ் படங்களுடன் ஜாக்கிசானின் ‘கராத்தே கிட்: லெஜண்ட்ஸ்’ படமும் போட்டி போட வருகிறது என்பதால் ரசிகர்களுக்கு இந்த வாரம் கொண்டாட்டம் தான். ஜாக்கிசானுக்கு எப்பொழுதுமே உலகெங்கிலும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அந்த வகையில் இந்த போட்டியில் வெல்லப்போவது யார் என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்து விடும். அந்தவகையில் இன்று (மே 30-ந் தேதி) திரையரங்குகளில் எந்தெந்த திரைப்படங்கள் வெளியாக உள்ளன என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
ஜோனாதன் என்ட்விஸ்டல் இயக்கிய, கராத்தே கிட்: லெஜெண்ட்ஸ் படத்தில் ஜாக்கி சான் மற்றும் ரால்ப் மச்சியோ, பென் வாங் லி பாங், ஜோசுவா ஜாக்சன், சாடி ஸ்டான்லி மற்றும் மிங்-நா வென் ஆகியோர் நடித்துள்ளனர்.
இதில் ஜாக்கி சான், கராத்தே கிட் படத்தில் நடித்த ஹான் என்ற அதே கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தியாவில் ஹாலிவுட் மற்றும் ஜாக்கி சான் படங்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருப்பதால், இந்த படம் ஆங்கிலத்தில் மட்டுமல்ல, இந்தி, தெலுங்கு, தமிழிலும் இன்று வெளியாக உள்ளது. குரு மற்றும் சீடன் இடையிலான உறவை மையமாகக் கொண்டதே கராத்தே கிட்: லெஜண்ட்ஸ் படத்தின் கதை.
கொலையும் கொலை சார்ந்த புலனாய்வுக் கதையுமாக உருவாகியுள்ள 'தி வெர்டிக்ட்' திரைப்படத்தை அறிமுக இயக்குநரான கிருஷ்ணா சங்கர் இயக்கியுள்ளார். முழுக்க முழுக்க அமெரிக்காவில் தயாராகியுள்ள இந்த படத்தில் சுஹாசினி மணிரத்னம், வரலக்ஷ்மி சரத்குமார், ஸ்ருதி ஹரிஹரன், வித்யுலேகா ராமன், பிரகாஷ் மோகன்தாஸ் ஆகியோருடன் அமெரிக்கக் கலைஞர்களும் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு ஒளிப்பதிவை அரவிந்த் கிருஷ்ணாவும், எடிட்டிங்கை சதீஷ் சூர்யாவும் செய்துள்ளனர். பாடகர் ஆதித்யா ராவ் இசையமைத்துள்ளார்.
வில்லியம் பிரதர்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் வி.வில்லி திருக்கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'ஆண்டவன்'. இந்த படத்தில் கே.பாக்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, யூடியூப்பர் மகேஷ் கதாநாயகனாகவும், அவருக்கு ஜோடியாக வைஷ்ணவி நடித்துள்ளனர்.
இவர்களுடன் கஞ்சா கருப்பு, முத்துக்காளை, ஹலோ கந்தசாமி, ஆதிரா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படம் விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. டி.மகிபாலன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்தின் பாடல்களுக்கு கபிலேஷ் இசையமைக்க, சார்லஸ் தனா பின்னணி இசையமைத்திருக்கிறார். லட்சுமணன் படத்தொகுப்பையும், சரவெடி சரவணன் சண்டைக்காட்சிகளையும் வடிவமைத்துள்ளனர்.
டி.ஆர்.பாலா எழுதி இயக்கியுள்ள தமிழ் ஹாரர் திரில்லர் திரைப்படம் ஜின் - தி பெட். இந்த படத்தில் 'வேலன்' படத்தில் நடித்த முகேன் ராவ் கதாநாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக பவ்யா திரிகா நடிக்கிறார். இவர்களுடன் பால சரவணன், இமான் அண்ணாச்சி, விஜய் ஜார்ஜ், வடிவுக்கரசி, வினோதினி, நந்து ஆனந்த், ரித்விக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அர்ஜுன்ராஜா ஒளிப்பதிவும், தீபக் படத்தொகுப்பும், கணேஷ் சந்திரசேகரன் இசையமைத்தும் உள்ளனர். உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் மலேசியாவை பின்னணியாகக் கொண்டு திகில், ஆக்சன், நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகியுள்ளது இந்த படம்.
கிரசென்ட் சினி கிரியேஷன்ஸ் சார்பில் கே.எம்.சபி தயாரிப்பில், மகா கந்தன் எழுதி இயக்கியுள்ள படம் 'ராஜபுத்திரன்'. இந்த படத்தில் பிரபு மற்றும் வெற்றி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இவர்களுடன் கோமல் குமார், கிருஷ்ண பிரியா, மன்சூர் அலிகான், இமான் அண்ணாச்சி, லிவிங்ஸ்டன், தங்கதுரை, ஆர்.வி. உதயகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆலிவர் டெனி ஒளிப்பதிவு செய்துள்ளார். பாடல்களை வைரமுத்து மற்றும் மோகன் ராஜன் எழுத மவுஃபுல் ராஜா இசையமைத்துள்ளார். கிராமத்துக் கதையில் நகைச்சுவையை கலந்து குடும்ப பொழுதுபோக்கு படமாக இந்த படம் உருவாகி இருக்கிறது.
அறிமுக இயக்குனர் ராம் இந்திரா இயக்கத்தில் புது முகங்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மனிதர்கள்'. ஸ்டூடியோ மூவிங் டர்டில் மற்றும் ஸ்ரீ கிரிஷ் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஓர் இரவில் நடக்கும் சம்பவங்களை வைத்து, வித்தியாசமான களத்தில் புதுமையான திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.
இந்த படத்தில் பெண் கதாபாத்திரமே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் கடந்த 23-ம்தேதி வெளியாக இருந்து பல காரணங்களால் தள்ளி வைக்கப்பட்ட நிலையில் இன்று வெளியாகிறது.