ஒரே ஆண்டில் 39 படங்கள்: உலக சாதனைப் படைத்த இந்திய நடிகர் யார் தெரியுமா?

Prem Naseer
Malayalam Actor
Published on

சினிமா துறை நன்றாக வளர்ச்சியடைந்த இன்றைய காலத்தில், ஒரு நடிகர் ஒரு ஆண்டிற்கு 2 படங்கள் நடிப்பதே அரிதான விஷயம். ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒரே ஆண்டில் 30 படங்களுக்கும் மேல் நடித்து உலக சாதனை படைத்துள்ளார் ஒரு மலையாள நடிகர். அதுவும் இரண்டு முறை இச்சாதனையை செய்துள்ளார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் இதுதான் உண்மை. இதுமட்டுமல்ல இதுவரை அதிக வெற்றிப் படங்களைக் கொடுத்த இந்திய நடிகரும் இவர் தான். யார் அந்த பழம்பெரும் நடிகர்? வாங்க தெரிந்து கொள்வோம்.

இந்திய சினிமாவைப் பொறுத்தவரை இன்றைய காலகட்டத்தில் மிகப்பெரிய நடிகர் என்றால் ஷாருக்கான், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், ரஜினிகாந்த், பிரபாஸ் போன்ற சில நடிகர்கள் தான் உடனே நினைவுக்கு வருவார்கள். இவர்களின் சில படங்கள் பாக்ஸ் ஆபிஸில் வெற்றியைப் பெற்றிருந்தாலும், அதே அளவிற்கு தோல்விப் படங்களையும் கொடுத்துள்ளனர். ஆனால், இந்திய அளவில் அதிக வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் என்றால், அவர் தான் மலையாள நடிகரான பிரேம் நசீர்.

கேரளாவின் திருவனந்தபுரத்தில், 1926 ஆம் ஆண்டு பிறந்த பிரேம் நசீர், 1952ல் 'மருமகள்' என்ற திரைப்படத்தின் மூலம் மலையாளத் திரையுலகில் தடம் பதித்தார். இவரின் இயற்பெயர் அப்துல் காதர். 1979 ஆம் ஆண்டில் மட்டும் 39 படங்களில் நடித்து உலக சாதனைப் படைத்தார். மேலும் இவர் தனது சினிமா பயணத்தில் 34 முறை இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். ஒரே ஆண்டில் இரண்டு முறை 30 படங்களுக்கும் மேல் மற்றும் பல முறை 20 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார்.

பிரேம் நசீர் ஹீரோவாக நடித்த 350 முதல் 500 படங்கள் வரை பாக்ஸ் ஆபிஸில் வெற்றியைப் பதிவு செய்துள்ளன. இதில் 50-க்கும் மேற்பட்ட படங்கள் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்துள்ளன. வெற்றிப் படங்களே 500-ஐத் தொடுகிறது என்றால், இவர் நடித்த மொத்தப் படங்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்குமல்லவா!

ஆம், இவர் நடித்த மொத்த படங்களின் எண்ணிக்கை 700-க்கும் மேல். உலகில் அதிக திரைப்படங்களில் நடித்த ஹீரோ என்ற சாதனைக்குச் சொந்தக்காரரே இவர் தான். இந்தச் சாதனை கின்னஸ் புத்தகத்திலும் இடம் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மலையாளம் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிப் படங்களிலும் நடித்துள்ளார் பிரேம் நசீர். அன்றைய காலத்தில் பெரிய பட்ஜெட் படம் என்று எதுவும் இல்லை. ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்துக் கொண்டிருந்த காலம் அது. அதனால் தான் பிரேம் நசீரால் இத்தனைப் படங்களில் நடிக்க முடிந்திருக்கிறது. பாலிவுட்டில் நடிகர் அமிதாப் பச்சன், கோலிவுட்டில் ரஜினிகாந்த் மற்றும் டோலிவுட்டில் சிரஞ்சீவி உள்பட எவராலும் இவரது சாதனையைத் தொடக் கூட முடியாது.

World Record
Malayalam Cinema
இதையும் படியுங்கள்:
முன்னேற்றப் பாதையில் மலையாள சினிமா!
Prem Naseer

திரைத்துறையில் இவர் செய்த சாதனைகளுக்காக மத்திய அரசின் பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷன் ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார். இவரைக் கௌரவப்படுத்தும் விதமாக மத்திய அரசு கடந்த 2013 ஆம் ஆண்டு, பிரேம் நசீர் உருவம் பொறித்த 500 பைசா மதிப்புள்ள தபால் தலையை வெளியிட்டது.

சினிமா உலகில் பல்வேறு சாதனைகளைப் புரிந்த பிரேம் நசீர், கடைசியாக நடித்து வெளிவந்த திரைப்படம் 'கடதநாடன் அம்பாடி' ஆகும். திரைத்துறையின் சாதனை நாயகன் பிரேம் நசீர் கடந்த 1989 ஆம் ஆண்டு இறைவனடி சேர்ந்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com