இந்தியத் திரையுலகில் தனக்கென தனியிடத்தைப் பிடித்து முன்னேறி வருகிறது மலையாள சினிமா. கடந்த சில ஆண்டுகளாக இதன் வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது. அவ்வகையில் மலையாள சினிமாவின் வளர்ச்சியை ஆராய்கிறது இந்தக் கட்டுரை.
மலையாள சினிமா கேரளாவை விட்டு தாண்டாத நிலையில், இப்போது இந்தியத் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. இதற்கெல்லாம் முக்கிய காரணம் மலையாளப் படங்களில் காண்பிக்கப்படும் எதார்த்தமான கதைக்களம் தான். இந்தக் கதைக்களங்கள் இன்றைய வாழ்வியலோடு ஒத்துப் போவது தான் மலையாள இயக்குநர்களின் வெற்றிப் பயணத்திற்கு காரணமாக அமைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, குறிப்பாக கொரோனா காலகட்டத்திற்கு பிறகு பல மலையாளப் படங்கள் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடித்து வருகின்றன . இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் இவை அனைத்துமே சிறு பட்ஜெட் படங்கள் தான்.
முன்பெல்லாம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்திப் படங்களுக்கு கேரளாவில் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைக்கும். ஆனால், இப்போது டிரென்ட் மாறி விட்டது. மலையாளப் படங்களுக்குத் தான் இந்தியா முழுக்க ரசிகர்கள் அதிகரித்துள்ளனர். குறிப்பாக தமிழ்நாட்டில், தமிழ்ப் படங்களுக்கு இணையாக மலையாளப் படங்களுக்கும் அதிக தியேட்டர்களை ஒதுக்கி வருகின்றனர். இதற்கு சான்றாக மஞ்சுமெல் பாய்ஸ் படத்தைக் கூறலாம். சுற்றுலா செல்லும் நண்பர்கள் அங்கு மாட்டிக் கொண்டுத் தவிக்கும் காட்சிகளை எதார்த்தமான கதைக்களத்துடன் படமாக்கியது, இந்தியா முழுக்க வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸில் வசூலைக் குவித்தது.
இளம் நடிகர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுவதும் மலையாள சினிமாவின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. சமூக வலைதளங்களில் பிரபலமாகி வரும் புதுமுகங்களை சினிமா களத்தில் இறக்கி விடுவது, மலையாள சினிமாவின் இன்றைய வளர்ச்சியை மட்டுமன்றி, நாளைய வளர்ச்சியையும் குறிக்கிறது.
மலையாளப் படங்களில் புகைப்பிடிக்கும் மற்றும் மதுக் குடிக்கும் காட்சிகள் அதிகமாக காட்டப்படுகின்றன. ஆனால் கேரளாவில் பீடி, சிகரெட் மற்றும் மது போன்ற போதைப் பொருள்கள் அவ்வளவு எளிதாகக் கிடைக்காது. இருப்பினும் கேரள மக்கள் ஒழுக்கத்தோடு இருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது. இதற்கெல்லாம் முக்கிய காரணம், இவர்கள் நல்லது கேட்டது அறிந்து, படத்தைப் படமாக மட்டுமே பார்த்து கொண்டாடுகின்றனர். இந்தக் கலாச்சாரத்தை நாம் நிச்சயமாக பாராட்ட வேண்டும்.
ஒரு காலத்தில், கேரளாவில் வசூல் ஈட்டுவதற்கே திண்டாடி வந்த மலையாளப் படங்கள், இன்று கேரளா மட்டுமின்றி, அண்டை மாநிலங்களிலும் வசூலைக் வாரிக் குவித்து வருகின்றன.
இதற்கெல்லாம் விதை போட்டது கடந்த ஆண்டு வெளியான '2018' என்ற திரைப்படம் தான். கேரளாவில் வெள்ளம் வருவதை மிக எதார்த்தமான காட்சிகளோடு படமாக்கியதால் இப்படத்தின் வெற்றி இப்போது வரை பேசப்படுகிறது. இதேபோல் சிறு பட்ஜெட்டில் எதார்த்தமான கதைக்களத்துடன், இன்றைய வாழ்வியலை பேசும் கதைகளை இயக்குநர்கள் கையில் எடுத்ததும் மலையாள சினிமா ராக்கெட் வேகத்தில் முன்னேற ஊகாரணமாக அமைந்தது.
நடப்பாண்டில் கடந்த 5 மாதங்களில் மட்டும் உலக அளவில் ரூ.1000 கோடி பாக்ஸ் ஆஃபீஸ் வசூலைக் குவித்துள்ளது மலையாள சினிமா. இதில் மஞ்சுமேல் பாய்ஸ் ரூ.240.94 கோடி வரையிலும், ஆடுஜீவிதம் ரூ.157.44 கோடி வரையிலும் மற்றும் ஆவேஷம் ரூ.153.52 கோடி வரையிலும் வசூலித்து முதல் 3 இடங்களைப் பிடித்துள்ளது. ரூ.1,000 கோடி வசூலில் இந்த மூன்று படங்களும் சேர்ந்து சுமார் ரூ.551 கோடியை வசூலித்துள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டில் மொத்தமாகவே ரூ.500 கோடி வசூலைத் தான் குவித்தது மலையாள சினிமா. ஆனால் நடப்பாண்டில் வெறும் 5 மாதங்களிலேயே ரூ.1,000 கோடி வசூலைக் குவித்திருப்பது, ரசிகர்களிடையே மலையாள சினிமா எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை உணர முடிகிறது.