தமிழ் சினிமா உலகில் 100 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட திரை வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும்படியான பல பிரம்மாண்ட திரைப்படங்களை தயாரித்த நிறுவனம் ஜெமினி ஸ்டுடியோஸ். இதன் நிறுவனர்
எஸ் எஸ் வாசன். மோஷன் பிக்சர்ஸ் என்ற பெயரில் இருந்த திரை நிறுவனத்தை விலைக்கு வாங்கி, மனைவி பட்டம்மாளின் (ஆங்கில) ராசி ஜெமினி என்பதால் ஸ்டுடியோவிற்கு ஜெமினி என பெயர் வைத்ததாக ஒரு தகவலை நடிகர் மனோபாலா காணொளிப் பேட்டியில் பகிர்ந்துள்ளார். மேலும், இரு குழந்தைகள் ஜட்டி மட்டும் போட்டுக்கொண்டு நாதஸ்வரத்தை அழகாக ஊதும் இன்ட்ரோ காட்சியின் ஆடியோ - வீடியோவானது இன்று பார்த்தாலும் வசீகரிக்கிறது.
ஜெமினி பிக்சர்ஸ் தயாரித்த படங்கள் என்றாலே மக்களுக்குப் பெருத்த ஆர்வமும் ஆச்சரியமும் இருக்கும். ஏனெனில் எந்தவித டெக்னாலஜி அறிவியல் முன்னேற்றமும் இல்லாத அந்தக் காலத்திலேயே அனைவரும் வியக்கும் வண்ணம் காட்சிகளை எடுத்து, பிரம்மாண்ட வெற்றிகளைப் பெற்ற நிறுவனம் ஜெமினி நிறுவனம் மட்டுமே! இந்த நிறுவனம் தயாரித்த 21 படங்களில் வெற்றிப் படங்கள் சிலவற்றை இங்கு பார்ப்போம்.
அந்தக் காலத்தில் நினைக்க முடியாத அளவு பெரும் பொருட்செலவில் இந்நிறுவனம் தயாரித்த ‘சந்திரலேகா’ படம் அகில இந்திய அளவில் வெளியாகி பெரும் வரவேற்பையும் வசூலையும் வாரிக் குவித்தது.
ரஞ்சன், டி.ஆர்.ராஜகுமாரி, எம்.கே.ராதா, என்.எஸ்.கே., டி.ஏ.மதுரம் உள்பட துணை நடிகர்கள் ஆயிரக்கணக்கானோர் நடித்த இந்தப் படத்திற்கான கதை எழுதியவர்களில் ஒருவர் பிரபல எழுத்தாளர் கொத்தமங்கலம் சுப்பு. எஸ்.ராஜேஸ்வரராவின் இசையும் ராம்நாத்தின் ஒளிப்பதிவும் படத்திற்குப் பக்கபலம். இதன் கதாநாயகி டி ஆர் ராஜகுமாரி அன்றைய கனவுக்கன்னியாகப் புகழ்பெற்றார்.
இதில் வருகிற முரசு நடனம் இன்றும் பேசப்படுகிறது. பெரிய முரசுகளைப் போன்ற செட் அமைத்து, சுமார் 400 நடனக் கலைஞர்களைக் கொண்டு, ஆறு மாத காலங்கள் இடைவிடாத ஒத்திகைகள் பார்க்கப்பட்டு படம் பிடிக்கப்பட்ட இந்த முரசு நடனத்தின் பிரம்மாண்டம் பிரமிக்க வைக்கும்.
1954ல் நிப்பான் சினிமா கார்ப்பரேஷன் அதாவது என்சிசி எனும் நிறுவனம் மூலம் ஜப்பானில் வெளியிடப்பட்டது ‘சந்திரலேகா!’ இது ஜப்பானிய மொழியில் டப் செய்யப்பட்ட முதல் திரைப்படம் என்ற பெருமை பெறுகிறது. மேலும், ஜப்பானில் வெளியான இரண்டாவது இந்திய திரைப்படம் என்கின்ற அந்தஸ்தையும் பெறுகிறது ‘சந்திரலேகா.’
‘சந்திரலேகா’ ஒரே நேரத்தில் தென்னிந்தியா முழுவதும் 40 திரையரங்குகளில் வெளியிடப்பட்டது ஒரு சாதனையாகும்.
1950களில் ‘சந்திரலேகா’ என்னும் தலைப்பை சுருக்கி ‘சந்திரா’ என்கின்ற பெயரில் ஆங்கில மொழி பதிப்பாக அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இப்படம் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பக்திப் படத்திலும் சளைக்காமல் திறமை காட்டியது ஜெமினி நிறுவனம். ஆகஸ்ட் 15, 1953ல் வெளியான பிரம்மாண்டமான பக்திப் படமான ‘அவ்வையார்’ தமிழ் மொழியின் சிறப்பு பேசிய படம் என்பதால் வரவேற்பு அதிகம் இருந்தது. இப்படத்தில் கே.பி.சுந்தராம்பாள் அவ்வையாராக தத்ரூபமாக நடித்து அசத்தியிருப்பார். இன்றும் அவ்வையார் என்றால் இவரே நம் கண் முன் வருவார்.
பிரம்மாண்ட வரலாற்றுக் காட்சிகளைக்கொண்ட இந்தப்படத்தின் இடி, மின்னல், புயல், நீர் பாய்தல், யானைகளின் படையெடுப்பு மற்றும் பெரும் கோட்டைகள் விழுவது போன்ற ‘ட்ரிக் ஷாட்’ காட்சிகள் மக்களை அன்று வெகுவாகக் கவர்ந்தது.
படத்தில் மொத்தம் இருந்த 48 பாடல்களில் சுந்தராம்பாள் 30 பாடல்களைத் தனது கணீர்க் குரலால் பாடி அசத்தி இருந்தார். இவற்றில் 'பொறுமை யென்னும் நகையணிந்து', 'கன்னித் தமிழ்நாட்டிலே - வெண்ணிலாவே' போன்ற பாடல்கள் பிரசித்தமானவை. இத் திரைப்படத்திற்காகவே ரூபாய் ஒரு லட்சம் ஊதியம் பெற்ற நடிகை எனும் சிறப்பு பெற்றார் சுந்தராம்பாள்.
‘அவ்வையார்’ படம் வெளிநாட்டிலும் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜே.இ. டி லா ஹார்ப், வாசனுக்கு "எனக்கு தமிழ் ஒரு வார்த்தை தெரியாது என்றாலும், நான் படத்தை மிகவும் ரசித்தேன்" என எழுதிய நீண்ட பாராட்டுக் கடிதமே இதற்குச் சான்று.
1958ல் வெளியான பிரம்மாண்டமான காதல் படம்தான் ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்.’ ஜெமினிகணேசன், வைஜெயந்திமாலா, பத்மினி ஆகியோர் படத்தில் போட்டி போட்டுக்கொண்டு நடித்து இருப்பார்கள். எஸ்.எஸ்.வாசன் இயக்கத்தில் வெளியாகி பெரும் வசூலைக் குவித்தது இப்படம்.
சி.ராமச்சந்திரா இசையில் ‘கண்ணும் கண்ணும் கலந்து’, ‘ராஜா மகள்’ உள்பட பல பாடல்கள் ரசிகர்களை மகிழ்வித்தன. லீலா, ஜிக்கி இருவரின் தேன்மதுரக் குரலில் பத்மினி, வைஜெயந்திமாலா என்ற நடனசிகாமணிகள் போட்டி போட்டு நடனமாடிய ‘கண்ணும் கண்ணும் கலந்து’ பாடல் இன்றும் வைத்த விழி மூடாமல் பார்க்கத் தோன்றும்.
Apoorva Sagodharargal 19491949 இல் வெளிவந்த ‘அபூர்வ சகோதரர்கள்’ எனும் திரைப்படம் அலெக்சாண்டர் டுமாவின் ‘தி கோர்சிகன் பிரதர்ஸ்’ எனும் நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது. ஆங்கிலத்தில் இரட்டையர்கள் நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற படத்தை வாசன். தமிழில் தயாரிக்க விரும்பி அதை வெற்றிகரமாக நிகழ்த்தியும் காட்டினார்
எவ்வித டெக்னாலஜியும் இன்றி வியக்க வைக்கும் கேமரா தொழில் நுட்பத்தால் எம்கே ராதா தாங்கிய இரட்டை வேடம் தத்ரூபமாக காட்சிகளானது. அனைவராலும் பாராட்டப்பட்டது. மற்றும் இப்படத்தில் நடித்த பானுமதி, நாகேந்திர ராவ் போன்றவர்கள் இப்படத்தின் மூலம் பெறும் புகழ் பெற்றனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் (அன்றே ‘பான் இந்தியா’ அளவில்!) தயாரிக்கப்பட்டு, 3 மொழிகளிலும் சக்கை போடு போட்டது. இப்படத்தில் இடம்பெற்ற ‘மனமோகனமே வனவாசமே...’ ‘ஆஹா ஆடுவேனே கீதம் பாடுவேனே...’ உள்பட அனைத்து பாடல்களும் பிரசித்தி பெற்றவை. எனினும் பானுமதி பாடிய ‘லட்டு லட்டு மிட்டாய் வேணுமா’ எனும் பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது.
மேற்குறிப்பிட்ட 4 படங்களும் ‘பிரம்மாண்டம்’ என்ற அளவில் முதல் 4 இடங்களில் இருந்தாலும், ஜெமினி ஸ்டூடியோஸ் சாதனைகள் பலப்பல.
1948ல் காதல் மன்னன் ஜெமினி அறிமுகமான ‘மிஸ் மாலினி’, வாணிஸ்ரீ இரட்டை வேடத்தில் நடித்த ‘இருளும் ஒளியும்’, நடிகர் திலகத்தின் ‘மோட்டார் சுந்தரம் பிள்ளை’, ஜெமினி - தேவிகா நடித்து கவியரசர் கண்ணதாசன் பாடல்களால் பெரும் வெற்றி பெற்ற ‘வாழ்க்கை படகு’ உள்ளிட்ட ஜெமினி ஸ்டுடியோஸ் படங்கள் ஒவ்வொன்றும் தனித்தனி சிறப்புடன் இன்றும் பேசப்படுகின்றன!