பாகுபலி படத்திற்குப் பிறகு தான் இந்திய சினிமாவில் பான் இந்தியப் படங்களின் வருகை அதிகரித்தது. சமீப காலமாக மாதத்திற்கு குறைந்தது ஒரு படமாவது பான் இந்திய ரிலீஸாக வெளிவருகிறது. அவ்வகையில் வருகின்ற ஜூன் மாதத்தில் மட்டும் தமிழில் 2 மற்றும் தெலுங்கில் 2 என 4 பான் இந்தியப் படங்கள் ரிலீஸாக உள்ளன. இப்படங்கள் குறித்த விவரங்களை இப்போது பார்ப்போம்.
தமிழ்ப் படங்கள் இன்னும் ரூ.1,000 கோடி வசூலை எட்டாத நிலையில், அந்த ஏக்கத்தைத் தீர்த்து வைக்க ஜூன் 5 இல் ரிலீஸாகிறது தக் லைஃப் திரைப்படம். மணிரத்னம் இயக்கத்தில், உலக நாயகன் கமல்ஹாசன், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா மற்றும் நாசர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருக்கிறார். மிகப்பெரும் எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்திற்கும் அதே அளவு வரவேற்பு கிடைக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் நடிக்கும் 'ஹரிஹர வீரமல்லு' திரைப்படம் ஜூன் 12 இல் வெளியாகிறது. தமிழில் 'கேடி', 'எனக்கு 20 உனக்கு 18’ போன்ற படங்களை இயக்கிய ஜோதி கிருஷ்ணா தான் இப்படத்தையும் இயக்கி இருக்கிறார். பவன் கல்யாண் ஆந்திர துணை முதல்வர் ஆனதால், பல மாதங்கள் படப்பிடிப்பு தடைபட்டது. பிறகு ஒருவழியாக படப்பிடிப்பு முடிவடைந்து திரைக்கு வர இருக்கிறது. துணை முதல்வரின் படத்தைக் காண ரசிகர்கள் ஆர்வமுடன் இருக்கின்றனர். அதேசமயம், ஆந்திராவில் கிடைக்கும் வரவேற்பு மற்ற மாநிலங்களில் கிடைக்குமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
தமிழில் முன்னணி கதாநாயகராக திகழும் நடிகர் தனுஷ் மற்றும் தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் ஜூன் 20-ல் வெளியாக இருக்கிறது குபேரா திரைப்படம். இப்படத்தில் நாகார்ஜூனா மற்றும் ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 'வேலையில்லா பட்டதாரி' மற்றும் 'வாத்தி' ஆகிய படங்கள் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. அவ்வகையில் குபேரா படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ், தெலுங்கு தவிர்த்து ஹிந்தியிலும் இப்படம் வசூலை ஈட்டும் என நம்பிக்கையாக இருக்கிறது படக்குழு. ஏனெனில் பிரபலமான பாலிவுட் நடிகர்களும் இப்படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகுபலி படத்திற்குப் பிறகு தெலுங்கில் உருவாகி இருக்கும் சரித்திரத் திரைப்படம் கண்ணப்பா. 63 நாயன்மார்களில் ஒருவராக இருக்கும் கண்ணப்ப நாயனாரின் வாழ்க்கையைப் பற்றிய படம் இது என்பதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. நடிகர் மோகன் பாபு, கண்ணப்பா படத்தைத் தயாரிக்க, அவரது மகன் விஷ்ணு மஞ்சு கதையை எழுதியதுடன், நடித்தும் இருக்கிறார். சரத்குமார், ஐஸ்வர்யா பாஸ்கரன் மற்றும் ப்ரீத்தி முகுந்தன் ஆகியோர் நடிக்க பிரபாஸ், அக்ஷய் குமார் உள்ளிட்ட சிலர் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளனர். நீண்ட நாட்கள் கழித்து ஒரு சரித்திரப் படம் வெளியாக இருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
ஜூன் மாதத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு இருக்கும் என்பதால், படம் பார்க்க குடும்பத்துடன் வருபவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் என்றே தெரிகிறது. இருப்பினும், ரசிகர்கள் படத்தைக் கொண்டாடுவார்கள் என்று எதிர்பார்ப்போம்.