
சினிமாத்துறையில் சேர்ந்த நடிகர், நடிகை, திரைப்படம், இயக்குநர், இசையமைப்பாளர், திரைக்கதை, ஒளிப்பதிவாளர் என அனைத்து கலைஞர்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு தேசிய விருது வழங்கி கவுரவித்து வருகிறது. இந்திய சினிமாத்துறையை சேர்ந்தவர்களுக்கு வழங்கும் இந்த விருதானது மிகவும் உயரிய விருதாக கருதப்படுகிறது. அந்த வகையில் மத்திய அரசு, 2023-ம் ஆண்டுக்கான (71வது) தேசிய திரைப்பட விருதுகளை தற்போது அறிவித்துள்ளது. விரைவில் இந்த தேசிய விருதுகளை குடியரசுத் தலைவர் டெல்லியில் வழங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழ் சினிமாவைப் பொறுத்த வரை ஒரே படத்திற்கு மட்டும் 3 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், எம். எஸ். பாஸ்கர், இந்துஜா ரவிச்சந்திரன், ராம ராஜேந்திரன் மற்றும் இளவரசு உள்பட பல பிரபலங்கள் நடிப்பில் கடந்த 2023-ம் ஆண்டு திரைக்கு வந்த ‘பார்க்கிங்’ திரைப்படம் 3 தேசிய விருதுகளை வென்றுள்ளது.
அந்த வகையில் இந்த படம் சிறந்த திரைப்படம், சிறந்த திரைக்கதை, சிறந்த துணை நடிகர் என்ற பிரிவுகளின் கீழ் 3 விருதுகளை தட்டித்தூக்கியது. இந்தப் படம் சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான விருதை வென்றது. நடிகர் எம்.எஸ். பாஸ்கர் தனது நடிப்பிற்காக சிறந்த துணை நடிகருக்கான விருதைப் பெற்றுள்ளார். அதே நேரத்தில் இந்தப் படம் சிறந்த திரைக்கதைக்கான விருதையும் வென்றுள்ளது. ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு இந்த முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் சோல்சர்ஸ் பேக்டரி நிறுவனங்கள் இணைந்து தயாரித்த இந்த படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்திருந்தார். இந்தப் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை எதிர்கொண்ட போதிலும் வணிக ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றது என்றே சொல்லலாம். தமிழில் வெளியான இந்தப் படம் தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.
வாடகை வீட்டில் குடியிருக்கும் இருவருக்கு இடையில் காரை பார்க் செய்வது தொடர்பாக எழும் மோதல்களே இந்த படத்தின் கதை. அதாவது ‘பார்க்கிங்’ போன்ற சாதாரண பிரச்சினைகள்தான் மனிதர்களின் மனங்களில் அடி ஆழத்தில் இருக்கும் அகம்பாவத்தையும் சிறுமைகளையும் கீழ்மைகளையும் தோண்டி எடுத்து விஸ்வரூபமாக வெளிப்பட வைக்கின்றன என்பதைக் கச்சிதமாக ஒவ்வொரு காட்சியிலும் செலுக்கி இருப்பார் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன்.
‘பார்க்கிங்’ திரைப்படம் 3 தேசிய விருதுகளை வென்றுள்ளதால் படக்குழு உற்சாகமடைந்துள்ளனர். விருதை வென்றவர்களுக்கு பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.