
7ஜி ரெயின்போ காலனி 2 எப்போது வரும் என காத்து கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது.
தனது படத்தின் மூலம் அனைவரையும் வேறு உலகத்திற்கு கொண்டு செல்பவர் இயக்குனர் செல்வராகவன். அப்படி அனைவரையும் தூக்கி சென்ற முக்கிய படங்களில் ஒன்றுதான் 7ஜி ரெயின்போ காலனி. இந்த படம் கடந்த 2004ஆம் ஆண்டில் வெளிவந்தது. ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால் நடிப்பில் வெளியான இந்த படம் மெஹா ஹிட் ஆனது. மேலும் இப்படத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து பாடல்களும் இன்று வரை இளைஞர்களின் முக்கிய ப்ளே லிஸ்டாகும். அப்படி இந்த பாடல்களுக்கு உயிர் கொடுத்தவர் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. தொடர்ந்து இந்த படத்திற்கும் அவரே இசையமைக்கிறார் என்பது ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை அளித்துள்ளது.
காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படம், ரசிகர்களின் மனதிற்குள் ஊடுறுவியது என்றே சொல்லலாம். இன்றைக்கும் 7ஜி ரெயின்போ காலனி என்றால் ரசிகர்களுக்கு ஒரு சிலிர்ப்பு இருக்க தான் செய்யும். பாடல், காட்சி, வசனம் என அனைத்துமே ஒவ்வொருவரின் வாழ்க்கையில் ஒத்து போயிருப்பதாக அமைந்திருக்கும்.
க்ளைமேக்ஸில் கதாநாயகி இறந்த நிலையில், இரண்டாம் பாகத்தில் மற்றொரு கதாநாயகி நடிக்கவுள்ளார். ஒவ்வொரு 90ஸ் கிட்ஸ் இளைஞர்களும், காதலை சொல்ல முடியாமல் தவித்த நாட்களில் இந்த படம் அவர்களுக்கு வரபிரசாதமாக அமைந்தது என்றே சொல்லலாம். அதனாலேயே இந்த படம் அதிகமாக கொண்டாடப்பட்டது. செல்வராகவனின் மாஸ்டர் பீஸ் என்ற பெயரை பெற்றுகொடுத்தது இந்த படம்.
இந்த நிலையில், 19 ஆண்டுகளுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குனர் செல்வராகவன் இயக்குவதாக தகவல் வெளியானது. அதுமட்டுமல்லாமல் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இந்த பாகம் இயக்கவுள்ளதாகவும் இதில், ஹீரோவாக ரவி கிருஷ்ணாவும் ஹீரோயினாக அனஸ்வர ராஜனும் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த படம் தொடர்பாக எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகாமல் இருந்த நிலையில், முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. படத்தின் புதிய போஸ்டரை தனது எக்ஸ் தளப் பக்கத்தில் இயக்குநர் செல்வராகவன் பகிர்ந்துள்ளார். அதில் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் போஸ்டரைப் பொறுத்தவரை நட்சத்திரங்கள் ஒளிரும் பின்னிரவில் இருவர் நடந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ரசிகர்களைக் கவர்ந்துள்ள போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.