
தமிழ் சினிமாவை அப்படியே திரும்பிப் பார்த்தால், முந்தைய காலங்களில் எதார்த்தமான திரைப்படங்கள் அதிகளவில் திரைக்கு வந்திருப்பதை காண முடியும். மேலும், சமூகத்தில் நடக்கும் அவலங்களை பாமர மக்களுக்கு எளிதாக எடுத்துரைக்கும் இயக்குநர்களும், படங்களும் அநேகம். இந்த வரிசையில் உருவான படம் தான் வெற்றிக் கொடி கட்டு. இத்திரைப்படத்தின் கதை உருவாக வெறும் 15 நாட்களே ஆனது என்றால் நம்ப முடிகிறதா! இத்திரைப்படத்தின் கதை உருவான சுவாரஸ்யமான சம்பவத்தை இப்போது பார்ப்போம்!
கடந்த 2000 இல் திரைக்கு வந்து மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் வெற்றிக் கொடி கட்டு. இப்படத்தில் முரளி, பார்த்திபன், மீனா மற்றும் மாளவிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். ஒவ்வொரு திரைப்படமும் உருவாவதற்கு முதல் முக்கிய காரணம் கதை. பல நாட்கள் சிந்தித்து, அருமையான கதையை எழுதி, தயாரிப்பாளர் கிடைத்தால் தான் படத்தின் அடுத்த கட்டத்தை பற்றியே யோசிக்க முடியும். ஆனால், வெற்றிக் கொடி கட்டு படத்தின் கதையானது, நடிகர் பார்த்திபனின் கட்டாயத்தால் தான் உருவானது.
வாய்மையே வெல்லும், நீ வருவாய் என, ஜேம்ஸ் பாண்டு, வெற்றிக் கொடி கட்டு, ஆயிரத்தில் ஒருவன் மற்றும் பொன்னியின் செல்வன் போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் பார்த்திபன். இவர் நடித்து வெளியான வெற்றிக் கொடி கட்டு திரைப்படம் உருவான விதமே ஒரு தனிக்கதை தான்.
ஒருமுறை இயக்குநர் சேரனை சந்தித்த பார்த்திபன், ஒரு நல்ல படத்தில் நடிக்க வேண்டும். கதையை உடனே எழுதுங்கள் என்று நெருக்கடி கொடுத்தாராம். இதுகுறித்து சமீபத்தில் மனம் திறந்த சேரன், “மக்கள் ரசிக்கும் படி நல்லதாக ஒரு படம் எடுக்க வேண்டும் சார். நீங்கள் தான் கதையை எழுதி இயக்க வேண்டும் என பார்த்திபன் என்னைக் கட்டாயப்படுத்தினார். அவரது சொல்லைத் தட்ட முடியாமல், நானும் 15 நாட்கள் வெளி உலகையே காணாமல் வீட்டிற்குள்ளேயே இருந்து கதையை எழுதத் தொடங்கினேன். பகல் இரவு என எதையும் பார்க்காமல், கிட்டத்தட்ட ஒரு சிறைக் கைதியைப் போல் வீட்டிற்கு உள்ளேயே இருந்து கதை எழுதினேன். அந்தக் கதை தான் வெற்றிக் கொடி கட்டு திரைப்படம். பல கஷ்டங்களை அனுபவித்து நான் எழுதிய இந்தக் கதை, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுது. அதுமட்டுமின்றி எனக்கு தேசிய விருதையும் வாங்கிக் கொடுத்தது. ஒருவேளை அன்று பார்த்திபன் என்னைக் கட்டாயப்படுத்தாமல் இருந்திருந்தால், இந்தப் படம் வெளியாகி இருக்குமா என்பது சந்தேகம் தான்” என கூறினார்.
நடிகர், இயக்குநர் என பன்முகத்தன்மை கொண்ட சேரனின் சினிமா பயணத்தில் வெற்றிக் கொடி கட்டு, ஆட்டோகிராப் மற்றும் தவமாய் தவமிருந்து ஆகிய 3 படங்கள் தேசிய விருதை வென்றன. சினிமா வேட்கையால் சொந்த ஊரான மதுரையில் இருந்து சென்னைக்கு வந்தார் சேரன். தொடக்கத்தில் சிறுசிறு சினிமா சம்பந்தப்பட்ட வேலைகளைச் செய்து, பிறகு உதவி இயக்குநர், இயக்குநர் மற்றும் நடிகர் என பல அவதாரங்களை எடுத்தார். சமூகத்திற்கு நற்கருத்துகளைக் கூறும் சேரனின் படங்கள் மட்டுமல்ல, இவரது நடிப்புத் திறனும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன.