
இன்று தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் ஒவ்வொருவரும், தொடக்க காலத்தில் வாய்ப்புக்காக ஏங்கியவர்கள் தான். அப்படியே ஒரு வழியாக வாய்ப்பு கிடைத்தாலும், அதனை சரியாகப் பயன்படுத்தி, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற நடிகர்கள் ஒருசிலர் தான். இவ்வரிசையில் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் ஒருவர், தொடக்கத்தில் சீரியலில் நடிக்க வாய்ப்புத் தேடினாராம். கேட்கவே விந்தையாக இருக்கிறது அல்லவா! ஆனால் நிதர்சனம் இதுதான். அந்த ஹீரோ யார் தெரியுமா? வாங்க தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு வெற்றியாளனுக்கும் தொடக்கப் புள்ளி என்று ஒன்று இருக்கும். பட வாய்ப்புகளுக்காக காத்திருப்பவர்கள், வாய்ப்பு கிடைக்கும் வரை சினிமா சார்ந்த ஏதாவது ஒரு வேலையை செய்து கொண்டே இருப்பார்கள். அவ்வகையில் சின்னத்திரை நடிகர்கள் மற்றும் ரியாலிட்டி ஷோ பங்கேற்பாளர்கள் வெள்ளித்திரையில் மிளிர்வது வழக்கமான ஒன்று தான். இருப்பினும் தொலைக்காட்சியில் நடனம் ஆடியவர், ஆங்கராக பணிபுரிந்தவர் இன்று தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக உயர்ந்திருக்கிறார். அவர் தான் குழந்தைகளுக்கு மிகப் பிடித்தமான நடிகர் சிவகார்த்திகேயன்.
அப்படி என்றால் சிவகார்த்திகேயன் தான் சீரியலில் நடிக்க வாய்ப்பு தேடினாரா என்று நீங்கள் நினைப்பது சரிதான். ஆனால், சீரியலில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் என்ன! வெள்ளித்திரையில் தான் கலக்குகிறாரே! சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் ரூ.300 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனைப் படைத்துள்ளது. இவரது சினிமா பயணத்தில் அதிக வசூலைக் கொடுத்த படமும் இதுதான். இப்படத்தின் வெற்றியின் மூலம் முன்னணி நடிகர்கள் பட்டியலில் இணைந்து விட்டார் சிவகார்த்திகேயன்.
சின்னத்திரை சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோ மூலம் பிரபலமானவர் தீபக். இவர் சீரியலில் நடித்துக் கொண்டிருந்த சமயம், சிவகார்த்திகேயன் இவரிடம் நடிக்க வாய்ப்பு கேட்டதாக சமீபத்தில் கூறியிருந்தார். இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், “சிவா என்னிடம் சீரியலில் நடிக்க வாய்ப்பு கேட்டார். இதெல்லாம் உனக்கு செட் ஆகாது; நீ நல்லா படி எனக் கூறினேன். ஏனெனில் சீரியலில் நடித்து விட்டால், அதன் பிறகு சினிமாவில் நடிப்பது கடினம். அதனால் தான் நான் அப்படிக் கூறினேன். இதனை சமீபத்தில் சிவகார்த்திகேயன் ஒரு மேடையில் நினைவு கூர்ந்து எனக்கு நன்றி தெரிவித்தார். ஒருவேளை அன்று அவர் சீரியலில் நடித்து இருந்தால், இன்று சினிமாவில் இவ்வளவு பெரிய நடிகராக மாறி இருப்பாரா என்பது சந்தேகம் தான்” என தீபக் கூறினார்.