சினிமா மூலம் சவுக்கடி கொடுத்த மாபெரும் சிந்தனையாளர்!

Director Manivannan
Director Manivannan
Published on

சினிமாவில் நடிக்கும் ஒவ்வொரு நடிகருக்கும் ஒவ்வொரு விதமான தனித்துவம் இருக்கும். அப்படி தனித்துவமான நடிகர்களில் ஒருவர்தான் நடிகரும் இயக்குனருமான மணிவண்ணன். ஆழ்ந்த அரசியல் ஞானம் உள்ளவர்.

மூடநம்பிக்கைகள், சாதி மத வேறுபாடுகள், அந்தந்த காலகட்டங்களில் நிலவும் அரசியல் நிகழ்வுகள் இப்படி சமூகம் சந்தித்து வரும் எவ்வளவோ அவல நிலைகளை தன் நடிப்பாலும் உடல் மொழியாலும் மிக அழகாக வெளிப்படுத்தி இருப்பார் நடிகர் மணிவண்ணன். 

பெரும்பாலும் இவருடைய கதாபாத்திரங்கள் நக்கல், நையாண்டி, குசும்பு நிறைந்ததாகவே இருக்கும். ஒரு படத்தின் வெற்றிக்கு இவருடைய நடிப்பும் அவர் பேசும் வசனங்களும் மிகுந்த பக்க பலம் என்று சொன்னால் அது மிகையாகாது. சமூக அவலங்களில் எந்த ஒன்றையும் வெறும் மேடைப் பேச்சாக பேசாமல் ஒவ்வொன்றையும் வாழ்வியலோடு இணைத்து அனுபவித்து வசனங்களை கடத்தி இருப்பார். 

நடிகராக மட்டுமில்லாமல் ஒரு இயக்குனராகவும் வலம் வந்தவர். எந்த ஒரு முன் தயாரிப்புகளும் இல்லாமல் படப்பிடிப்பு நடக்கும் இடத்திலேயே வசனங்களை கூறி படப்பிடிப்பை முடித்துக் கொள்வாராம். நடிகர் எம்.ஆர் ராதாவின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர் இயக்குனர் மணிவண்ணன். எம் ஆர் ராதாவிடம் இருக்கும் அதே நக்கலும், நையாண்டியும், உடல் மொழியும் மணிவண்ணனிடமும் இருக்கும். தான் வாழ்ந்த காலகட்டங்களில் மக்களுக்கு இருந்த நடைமுறை சிக்கல்களை தனது படங்களில் மிகவும் அற்புதமாக காட்டியிருப்பார். 

இயக்குனர் மணிவண்ணனுக்கும் சத்யராஜ்குமான நட்பு அவர்களது சினிமா வாழ்க்கையிலும் எதிரொலித்தது. இவர்களது கூட்டணியில் உருவான படங்கள் பெரும்பாலும் வெற்றி படங்களாகவே அமைந்தன. நாகராஜசோழன் M. A, MLA, அமைதிப்படை இப்படி பல படங்கள் இவர்களது வெற்றிக் கூட்டணியில் உருவாகின.

இதையும் படியுங்கள்:
அலுத்துப்போச்சே சாமி! எத்தனை முறைதான் இதையே பார்ப்பது? கேட்பது? ஸ்ஸ்ஸ்ஸ்..!
Director Manivannan

அரசியல் ரீதியாக இவர் வைத்த கருத்துக்கள் திரைப்படங்களில் மிகுந்த வரவேற்பை பெற்றன. " நாம் அனைவரும் கடவுளால் படைக்கப்பட்டவர்கள் என்றால் நாம் அனைவரும் கடவுளின் குழந்தைகள் தானே, அப்படி இருக்கும் போது எப்படி ஒரு குழந்தை உயர்வென்றும் இன்னொரு குழந்தை தாழ்வென்றும் சொல்ல முடியும்?" - இப்படி எத்தனையோ வசனங்கள் அந்தந்த காலகட்டங்களில் நிலவிய சமூகப் பிரச்சினைகளை எதிர்த்து மணிவண்ணன் மூலம் திரைத்துறையின் ஊடாக மக்கள் மனதில் எழுப்பப்பட்டன. 

குணச்சித்திர நடிகராகவும் மணிவண்ணன் தனது நடிப்பை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தி இருப்பார். பெரும்பாலான திரைப்படங்களில் இவரைக் கொண்டுதான் படத்தின் திருப்புமுனையே அமைத்திருப்பார்கள்.

வில்லன் வேடங்களில் தனது நடிப்பை மிக அற்புதமாக வெளிப்படுத்திய மணிவண்ணன் தனது தந்திரமான செயல்பாடுகளால் மிக அருமையாக காட்சிகளை கடத்தி இருப்பார். ஒரு அரசியல்வாதியின் மனநிலை என்னவாக இருக்கும், அரசியல்வாதியின் ஒவ்வொரு நகர்வும் எதை நோக்கியதாக இருக்கும் என்பதை தனது படங்களில் அப்பட்டமாக வெளிச்சம் போட்டு காட்டி இருப்பார்.

இதையும் படியுங்கள்:
ஆயிரம் கோடி வசூல் தமிழ்படங்களுக்கு எட்டாக்கனியா? ஏன்?
Director Manivannan

தான் வாழ்ந்த காலங்களில் எழுந்த சமூக அவலங்களுக்கும், நிகழ்த்தப்பட்ட அரசியல் நகர்வுகளுக்கும் தனது கை தேர்ந்த நடிப்பாலும், உடல் மொழியாலும், வசனங்களாலும் சமூகத்திற்கு மிகப்பெரிய சவுக்கடி கொடுத்த மாபெரும் சிந்தனையாளர் இயக்குனர் மணிவண்ணன் என்று சொன்னால் அது நிச்சயம் மிகையாகாது.  

மணிவண்ணன் இயக்கிய / இயக்கி நடித்த, உங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படங்களை கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்களேன்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com