விமர்சனம்: ஆண்பாவம் பொல்லாதது - ஆண்களுக்கான உரிமை குரல்!
ரேட்டிங்(3 / 5)
"நீ எந்த தப்பும் செய்யலைங்கறது முக்கியம் இல்லை. நீ ஆம்பளையா இருக்கற ஒரு காரணம் போதும் உன்னை உண்டு இல்லைன்னு ஆக்கறதுக்கு" என்று ஆண் பாவம் பொல்லாதது படத்தில் (வக்கீல்) விஜே விக்கி சொல்லும் போது தியேட்டரில் பல ஆண்கள் கை தட்டுவதை கேட்க முடிந்தது. நம் நாட்டில் சட்டங்கள் பெண்களுக்கு சாதமாக உள்ளது. இதை பயன்படுத்தி பெண்களில் சிலர் அப்பாவி ஆண்களை பழி வாங்குகிறார்கள் என்ற கருத்து பலரிடையே உள்ளது. இந்த கருத்தை மையமாக வைத்து வந்துள்ளது 'ஆண்பாவம் பொல்லாதது' திரைப்படம். இந்த படத்தை AGS நிறுவனம் வெளியிட்டுள்ளது. கலையரசன் தங்கவேல் இந்த படத்தை இயக்கி உள்ளார்.
சிவா, சக்தி இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். சக்தி சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். இந்த உணர்வு கணவன் சிவாவுடன் பிரச்னை ஏற்பட வழி செய்கிறது. இந்த பிரச்னையின் விளைவாக சக்திக்கு கருச்சிதைவு நடக்கிறது. தனது கருச்சிதைவுக்கு சிவா தான் காரணம் என்று நினைக்கும் சக்தி, சிவாவை விவாகரத்து செய்ய நினைக்கிறார். நீதிமன்றத்தில் ஏற்கனவே விவாகரத்து பெற்ற வழக்கறிஞர் தம்பதிகள் இவர்கள் சார்பாக வாதாடுகிறார்கள். மனைவி வக்கீல் சக்தி சார்பாகவும், கணவர் வக்கீல் சிவா சார்பாகவும் வாதடுகிறார்கள். கவுன்சிலிங், வாய்தா என ஓராண்டு கடந்து விடுகிறது. இறுதியில் சக்தி விரும்பிய விவாகரத்து கிடைத்ததா? 'ஆண் பாவம் பொல்லாதது' படம் பார்த்தல் தெரியும்!
இரண்டு மணி இரண்டு நிமிட நீளம் உள்ள இப்படம், தொடங்கிய சில நிமிடங்களில் மெயின் பிரச்னைக்குள் வந்து விடுகிறது.
நகைச்சுவை கலந்து எங்கேயும் பிசிறு தட்டாமல் செல்கிறது திரைக்கதை. பெண்களுக்கு ஆதரவாக இருக்கும் சட்டங்கள் அப்பாவி ஆண்களுக்கு எதிராக திரும்பினால் ஏற்படும் விளைவுகளை கொஞ்சம் நகைசுவை கலந்து சொல்லி இருக்கிறார் டைரக்டர்.
காவல் நிலையம் மற்றும் நீதிமன்ற காட்சிகள் மிக சிறப்பாக காட்சி படுத்தபட்டுள்ள. சிவாவாக நடிக்கும் ரியோ, சக்தியாக நடிக்கும் மாளவிகா மனோஜ் இருவரும் கணவன்-மனைவியாகவே வாழ்ந்து இருக்கிறார்கள். மனைவி மீது உள்ள காதலை வெளிப்படுத்தும் போதும், மனைவி உதாசீனம் செய்யும் போதும் நடிப்பை சிறப்பாக தந்துள்ளார் ரியோ. மாளவிகா மனோஜ் முதல் படம் என்று சொல்ல முடியாத அளவில் சிறப்பாக நடித்திருக்கிறார். வக்கீலாக, ஆர் ஜே விக்கி கிளைமாக்ஸ் காட்சியில் பேசும் வசனம் மிக யதார்தம்.
ஆண்பாவம் பொல்லாதது - ஆண்களுக்கான உரிமை குரல்.


