

தமிழ் திரையுலகில் முன்னனி கதாநாயகனாக வலம் வரும் வருபவர் நடிகர் தனுஷ். கோலிவுட் சினிமாவில் துவங்கிய இவருடைய பயணம் தற்போது ஹாலிவுட் வரை சென்றுள்ளது. தன்னுடைய நடிப்புத் திறமையை வளர்த்துக்கொண்டு, பல வெற்றிப் படங்களைக் கொடுத்து, இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். அது மட்டுமின்றி, நேரடி தெலுங்கு படம், நேரடி இந்தி படங்கள், ஹாலிவுட் படங்கள் என்று தன்னுடைய நிலையை வளர்த்துக்கொண்டிருக்கிறார்.
நடிப்பு மட்டுமின்றி, பாடல்கள் எழுவது, பாடல்கள் பாடுவது, படத்திற்கு கதை-திரைக்கதை எழுதுவது, இயக்கம், தயாரிப்பு என்று சினிமாவின் பல துறைகளிலும் கால் பதித்து, அவை அனைத்திலும் வெற்றியை பதிவு செய்திருக்கிறார்.
தனுஷ் இயக்கி நடித்து கடைசியாக வெளிவந்த படம்'இட்லி கடை'. கிராமத்து கதையம்சத்தில் உருவாக்கப்பட்ட இந்த படம் கடந்த அக்டோபர் 1-ம்தேதி வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தனுஷ் இயக்கி, நடித்த இந்த படத்தை பலரும் பாராட்டினார்கள்.
2013-ல் ராஞ்சனா என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான தனுஷ் தற்போது மீண்டும் பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். 'ராஞ்சனா' மற்றும் 'அட்ராங்கி ரே' போன்ற படங்களை இயக்கிய பிரபல பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல் ராய்யின் படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சனோன் நடிக்கிறார்.
கலர் எல்லோ புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு ‘தேரே இஷ்க் மே’ (Tere Ishk Mein) என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. இதற்கு முன்பே இயக்குனர் ஆனந்த் எல் ராய் மற்றும் தனுஷ் இணைந்து 'ராஞ்சனா', 'அட்ராங்கி ரே'என்ற இரு வெற்றிப்படத்தை கொடுத்திருப்பதுடன் மூன்றாவது முறையாக ‘தேரே இஷ்க் மே’ படத்திலும் இந்த கூட்டணி இணைந்துள்ளதால் ரசிகர்கள் இடையே இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான "ஓ காதலே" என்ற பாடல் வெளியாகி அனைவரையும் கவர்ந்துள்ளது.
மஷூக் ரஹ்மானின் பாடல் வரிகள் மற்றும் ஆதித்யா RK-வின் தனித்துவமான மயக்கும் குரலில் பாடியிருக்கும் இப்பாடலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
காதலை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இந்த படம் தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் வரும் நவம்பர் 28-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.