விமர்சனம்: ஆரோமலே - கதைக்கு மேல்...கதைக்கு மேல்...கதை! கதை என்ன?
ரேட்டிங்(2 / 5)
கடந்த 1989 ஆம் ஆண்டு 'இதுதாண்டா போலீஸ்' என்ற படம் தமிழ்நாட்டில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படத்தில் ஹீரோவாக நடித்த டாக்டர் ராஜசேகரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. தற்போது ராஜசேகரின் மகள் ஷிவாத்மிகா பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். ஷிவாத்மிகா நடிப்பில் ஆரோமலே என்ற படம் வெளியாகி உள்ளது. படம் எப்படி? பார்ப்போம்.
ஆரோமலே என்றால் அன்பே என்று அர்த்தம். ஷிவாத்மிகா ஒரு மேட்ரிமோனியல் கம்பெனியில் உயர் பதவியில் இருக்கிறார். இந்த கம்பெனியில் கிஷன் தாஸ் வேலைக்கு சேர்கிறார். டார்கெட்டை முடிக்காமல் ஷிவாத்மிகாவிடம் திட்டு வாங்கி கொண்டிருக்கிறார். திருமணம் ஆகாமல் இருக்கும் ஐம்பது வயதை கடந்த உடலில் பிரச்னை இருக்கும் VTV கணேஷ் தனக்கு திருமணம் செய்து வைக்க மேட்ரிமோனியல் உதவியை நாடுகிறார். இவருக்கு உதவி செய்ய முயலும் போது ஷிவாத்மிகாவிற்கும், கிஷனுக்கும் கருத்து வேறுபாடு வருகிறது. இந்த கருத்து வேறுபாடு சரியானதா? கிஷனின் காதலை ஷிவாத்மிகா புரிந்து கொண்டாரா? என்று சொல்கிறது இப்படம்.
மேட்ரிமோனியல் திருமணங்களை விட புரிந்து கொண்டு செய்யும் காதல் திருமணங்கள் தான் சிறந்தது என்று இப்படம் சொல்ல போகிறது என்று நாம் யோசிப்பதற்குள் கிஷனுக்கு மூன்று காதல் என்று ஒரு கதை வருகிறது. சரி இதுதான் கதை என்று நாம் பார்க்க துவங்கும் போது, ஷிவாத்மிகா காதலை வெறுப்பதற்கு காரணம் பழைய மோசமான காதல் அனுபவம் என்று ஒரு கதை வருகிறது. VTV கணேஷ் தன் பங்குக்கு ஒரு கதை சொல்கிறார். இப்படி ஒரே படத்தில் பல கதைகளை சொல்ல முயன்று குழப்பதை தந்துள்ளார் டைரக்டர் சரங் தியாகு. ஏதேனும் ஒரு கதையை முழுமையாக வடிவம் தந்து சொல்லி இருந்தால் கூட படம் தப்பித்திருக்கும்.
படத்தில் பாராட்ட பட வேண்டிய விஷயம் ஷிவாத்மிகாவின் நடிப்பு தான். புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்பதை போல் இவரின் நடிப்பு சிறப்பாக உள்ளது. காதல், கம்பெனியின் தலைமை அதிகாரி என கேரக்டரை உள் வாங்கி நடித்துள்ளார். கிஷன் சுமாரான நடிப்பை தந்துள்ளார். VTV கணேஷ் செய்யும் காமெடிக்கு சிரிப்புக்கு பதில் கொட்டாவிதான் வருகிறது.
சித்தார்த் இசையில் காதல் காட்சிகள் சிறிது ரசிக்கும் படி உள்ளன. ஒரு கதையை மட்டும் சரியாக சொல்லி இருந்தால் ரசித்திருக்கலாம். பல கதைகள் சொல்லியதால், ஆரோமலே சொதப்பல்.

