ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் ‘சாக்லேட் பாய்’ என ரசிகைகளால் கொண்டாடப்பட்ட நடிகர் அப்பாஸ், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் களமிறங்குகிறார். ஜி.வி. பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் மூலம் அவர் ரீ-என்ட்ரி கொடுப்பது சினிமா வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
1996 ஆம் ஆண்டு கதிர் இயக்கத்தில் வெளியான 'காதல் தேசம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான அப்பாஸ், தனது வசீகரமான தோற்றத்தாலும், இயல்பான நடிப்பாலும் இளைஞர்களின் கனவு நாயகனாக வலம் வந்தார். தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த அவர், ஒரு கட்டத்தில் சினிமா வாய்ப்புகள் குறைந்ததால், வெளிநாட்டில் குடியேறி வேறு பணிகளில் கவனம் செலுத்தினார். நியூசிலாந்தில் வசித்து வந்த அவர், பெட்ரோல் பங்க், மெக்கானிக் எனப் பல்வேறு வேலைகளைச் செய்து வந்ததாக முன்பு செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் நடிக்க வந்திருக்கிறார் அப்பாஸ். ஜெயவர்த்தனன் பியாண்ட் பிக்சர்ஸ் சார்பில் தயாரிக்கும் இப்படத்தை மரியா ராஜா இளஞ்செழியன் இயக்குகிறார். ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக கவுரி பிரியா நடிக்கிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க, மதன் கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த புதிய படத்தில் அப்பாஸ் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறித்த தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை. படக்குழுவினரின் கூற்றுப்படி, இது ஒரு நகைச்சுவை கலந்த குடும்பப் படமாக இருக்கும் என்றும், ஜி.வி. பிரகாஷ் இதுவரை முயற்சிக்காத ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் தெரிகிறது. தற்போது பொள்ளாச்சியில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
அப்பாஸின் இந்த ரீ-என்ட்ரி, 90ஸ் கிட்ஸ்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘சாக்லேட் பாய்’ இமேஜுடன் மீண்டும் திரைக்கு வரும் அவர், எந்த மாதிரியான கதாபாத்திரத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.