பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் அயோத்தி கோவிலில் உள்ள குரங்குகளுக்கு உணவளிக்க 1 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியிருக்கிறார்.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்ட ராமர் கோவிலுக்கு இந்த ஆண்டு ஜனவரி மாதம் 22ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கும்பாபிஷேகத்திற்கு திரை உலகினரும், தொழிலதிபர்களும், அரசியல்வாதிகளும் நிறைய பேர் கலந்துக் கொண்டனர். அன்றிலிருந்து இந்தியா முழுவதும் தினமும் ஏராளமான பக்தர்கள் ராமரை தரிசிக்க வருகைத் தருகின்றனர்.
இந்தியாவில் மட்டுமல்ல உலகளவிலிருந்தும் நிறைய மக்கள் இங்கு வருகின்றனர். இங்கு எப்போதும் கூட்டம் அலைமோதிக்கொண்டே இருப்பதால் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக கோவில் வளாகத்தில் மத்திய பாதுகாப்பு படையினர் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
மக்கள் கூட்டம் எப்படி அலைமோதுகிறதோ அதேபோல் ராமரின் தீவிர பக்தர்களான குரங்குகளும் கோவிலில் அதிகம் உலாவுகின்றன.
அன்றாடம் நூற்றுக்கணக்கான குரங்குகள் கூட்டமாக அங்கே சாலைகளில் இருப்பது வழக்கமாகிவிட்டது. அளவுக்கதிகமான அக்குரங்குகளுக்கு தினமும் நேரத்திற்கு உணவு கிடைப்பதில் சிக்கல் உள்ளது. உணவு இல்லாததால் அவை அங்கு செல்லும் பக்தர்களுக்கு தொல்லை கொடுத்து வந்தன.
இதனைக் கருத்தில்கொண்டு அயோத்தி கோவிலில், ஜகத்குரு ஸ்வாமி ராகவாச்சார்யா ஜி மகராஜின் வழிகாட்டுதலின் கீழ் ஆஞ்சநேய சேவா என்ற அறக்கட்டளை ஆரம்பமானது. இந்த அறக்கட்டளை குரங்குகளுக்கு உணவளிப்பது முதல் பக்தர்களை தொந்தரவு செய்யாமல் பார்த்துக்கொள்வதுவரைப் கவனித்துக்கொள்கிறது. இந்த அறக்கட்டளைக்கு உதவி செய்யும் விதமாகதான் தற்போது அக்ஷய் குமார் 1 கோடி ரூபாய் நிதியை வழங்கியுள்ளார். உணவு எடுத்துச்செல்லப்படும் வேனில், அக்ஷய் குமார் தனது பெற்றோர் மற்றும் மாமனார் மறைந்த நடிகர் ராஜேஷ் கண்ணா ஆகியோரின் பெயர்களை எழுதி அவர்களை நினைவுக்கூர்ந்து உள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “இவ்வளவு புனிதமான இடத்தில் குரங்குகள் எதிர்கொள்ளும் பிரச்னைகளைப் பற்றி நான் கேள்விப்பட்டபோது, உடனடியாக எனது பங்களிப்பை வழங்க வேண்டும் என்று உணர்ந்தேன். வேனில் எனது பெற்றோர் மற்றும் மாமனாரின் பெயரை எழுதியது மிகவும் உணர்ச்சிகரமாக இருக்கிறது. எங்கயோ இருந்து அவர்கள் என்னை நினைத்துப் பெருமைப்படுவார்கள் என்று நினைக்கிறேன்.” என்று பேசினார்.