திரிஷா இல்லனா நயன்தாரா திரைப்படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமானவர் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். இவரது இயக்கத்தில் வெளியான, மார்க் ஆண்டனி, குட் பேட் அக்லி திரைப்படங்கள் வணிக ரீதியில் வெற்றி பெற்றது.
அஜித் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் 'குட் பேட் அக்லி'. இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருந்தார். ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் அஜித் கூட்டணியில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. அதிலும் அந்த படத்தில் அஜித் உடைய கெட்டப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்றது. அதுமட்டுமின்றி அஜித்தின் திரை வாழ்க்கையில் அதிக வசூல் செய்த படம் என்கிற சாதனையையும் படைத்தது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்த இப்படத்தில் திரிஷா, அர்ஜுன் தாஸ், பிரபு, பிரசன்னா, சுனில், பிரியா வாரியர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்திருந்தனர்.
இந்த படத்தை நடித்து கொடுத்து விட்டு அஜித் கார் ரேசில் கவனம் செலுத்தி வருகிறார். அதுமட்டுமின்றி ஒருவருடத்திற்கு படங்களில் நடிக்க மாட்டேன் என்று கூறியிருந்தார்.
நடிகராக மட்டுமில்லாமல், கார், பைக் ரேஸ், துப்பாக்கிச்சுடுதல் உள்ளிட்ட போட்டிகளில் விளையாடி வரும் அஜித் சமீபத்தில் துபாயில் நடைபெற்ற கார் ரேஸ் பந்தயத்தில் பங்கேற்றார்.
அடுத்து வர உள்ள சர்வதேச கார் ரேஸ் போட்டியில் அஜித் பங்கேற்க உள்ள நிலையில், அவரின் அடுத்த படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்க உள்ளார் என்று பரவலாக பேசப்பட்டு வந்தது.
இந்நிலையில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 'குட் பேட் அக்லி' படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து மீண்டும் அஜித்- ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி இணைந்து படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாக உள்ளது. அஜித் குமாரின் 64-வது திரைப்படமான அந்த படத்திற்கு ஏகே - 64 எனத் தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், படத்தின் ஷூட்டிங் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார் இயக்குனர் ஆதிக். இதில், ‘குட் பேட் அக்லி படத்துக்குப் பின் மீண்டும் அஜித் சாருடன் இணைந்துள்ளது எனக்கு சிறப்பு அனுபவமாக இருக்கிறது. கிட்டதட்ட படத்தின் முன் தயாரிப்பு பணிகள் முடிவுக்கு வந்துவிட்டது. பிப்ரவரி மாதம் முதல் ஷூட்டிங் ஆரம்பம்’ என கூறியுள்ளார். ஆதிக்கின் இந்த அப்டேட் அஜித் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
அஜித்தின் சில கார் பந்தயங்கள் முடிவடைந்ததும் படத்தின் படப்பிடிப்பு துவங்கும் எனத் தெரிகிறது. இந்த நிலையில், அஜித் - ஆதிக் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு படத்தின் வெளியீட்டுத் தேதியுடன் வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.