
அப்புக்குட்டி என்று அறியப்படும் சிவபாலன், மம்முட்டி நடித்த மறுமலர்ச்சி என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவார். அதன் பிறகு படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்கள் மூலம் தனது நடிப்பை வெளிப்படுத்தி வந்த அப்புக்குட்டிக்கு, 'வெண்ணிலா கபடி குழு' படம் தான் திருப்புமுனையாக அமைந்தது என்று சொல்ல வேண்டும். இந்த படத்தில் இவரது கதாபாத்திரம் மூலம் அனைவரும் அறியப்படும் நடிகராக மாறினார். அதன் பின்னர் 'அழகர் சாமியின் குதிரை', 'மன்னாரு' போன்ற திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளார்.
தொடர்ந்து வந்த படங்களில் தனது நகைச்சுவை நடிப்பின் மூலம் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துக்கொண்ட நடிகர் அப்புக்குட்டி, நடிகர் அஜித் குமாருடன் சேர்ந்து ‘வீரம்’ திரைப்படத்திலும் நடித்துள்ளார். நடிகர் அப்புக்குட்டி தமிழை தவிர மலையாளப் படங்களிலும் நடித்து வருகிறார்.
100-ம் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து முத்திரை பதித்துள்ளார் நடிகர் அப்புக்குட்டி. 2011-ம் ஆண்டு வெளியான ‘அழகர்சாமியின் குதிரை’ திரைப்படத்தில் இவரது சிறப்பான நடிப்பின் மூலம் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை பெற்றுள்ளார்.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களான வடிவேலு, சந்தானம், சூரி, யோகிபாபு, சதீஷ் உள்ளிட்ட பலர் நகைச்சுவை நடிகர்களாக அறிமுகம் ஆகிய பின்னர் படிப்படியாக உயர்ந்து கதாநாயகர்களாக மாறி இருக்கிறார்கள். அந்த வரிசையில் நகைச்சுவை நடிப்பால் மக்களை கவர்ந்து வந்த அப்புக்குட்டி தற்போது புரமோஷன் ஆகி கதாநாயகனாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் ‘பிறந்த நாள் வாழ்த்துக்கள்', ‘ஜீவ காருண்யம்', ‘வாழ்க விவசாயி' ஆகிய 3 படங்களில் அப்புகுட்டி கதாநாயகனாக நடித்து வருகிறார்.
சமீபத்தில் ‘பிறந்த நாள் வாழ்த்துக்கள்’ திரைப்படத்தின் டிரெய்லரை நடிகர்கள் விஜய் சேதுபதி, நட்டி நடராஜ், சசிகுமார், துல்கர் சல்மான் மற்றும் பிரபல இயக்குனர்கள் இணைந்து வெளியிட்டனர். மேலும் இப்படம் வரும் 21-ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ராஜு சந்த்ரா இயக்கி உள்ள இந்த படத்தில் அப்புக்குட்டி கதாநாயகனாவும், நாயகியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா அனிலும் நடித்துள்ளனர். இந்த படத்தை, கிராமத்து பின்னணியில், காதலுடன் காமெடி கலந்து, ஜனரஞ்சகமாக கதை எழுதி, ஒளிப்பதிவு செய்து, இயக்கியுள்ளார் ராஜூ சந்ரா.
அதனை தொடர்ந்து ‘ஜீவ காருண்யம்’, ‘வாழ்க விவசாயி’ ஆகிய படங்களும் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன. கதிர் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் பால் டிப்போ கதிரேசன் தயாரித்திருக்கும் 'வாழ்க விவசாயி' படத்தில் நடிகர் அப்புக்குட்டிக்கு ஜோடியாக நடிகை வசுந்தரா நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் பி.எல்.பொன்னி மோகன்.
கதாநாயகனாக அதுமட்டுமின்றி மற்ற கதாநாயகர்கள் படங்களிலும் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார் அப்புக்குட்டி.