
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமானவர் தர்ஷன். பிக் பாஸ் மூலம் பிரபலமான இவர் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில் வெளியான கூகுள் குட்டப்பா என்ற படத்திலும் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து விளம்பரங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தர்ஷன் பங்கேற்று வருகிறார். ‘நாடு’ என்ற படத்திலும் கதாநாயகனாக நடித்திருந்தார். தற்போது ‘சரண்டர்’ உள்ளிட்ட சில படங்களிலும் நடித்து வருகிறார். இவர் சென்னை முகப்பேர் கிழக்கு, பாரிசாலை பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் தர்ஷன் வீட்டின் அருகே டீ கடை ஒன்று உள்ளது. சென்னை ஐகோர்ட்டு பெண் நீதிபதியின் மகனும், அவரது மனைவி லாவண்யா மற்றும் மாமியாருடன் தர்ஷன் வீட்டின் அருகில் உள்ள கடையில் டீ குடிக்க சென்றார். அவரது காரை தர்ஷன் வீட்டுக்கு முன்பாக நிறுத்தி இருந்தார்.
இந்நிலையில் கார் நிறுத்துவது தொடர்பான விவகாரத்தில் நீதிபதியின் மகனுடன் தர்ஷனின் தம்பி லோகேஷ்க்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் தர்ஷன் மற்றும் அவரது தம்பி லோகேஷ்ம் சேர்ந்து நீதிபதியின் மகன் மற்றும் 2 பெண்கள் இடையே ஏற்பட்ட வாய்த்தகராறு முற்றி கடைசியில் கைகலப்பில் முடிந்தது.
இதில் காயமடைந்த நீதிபதி மகன், மனைவி மற்றும் மாமியார் ஆகியோர் காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து அவர்கள் தர்ஷனும் மற்றும் லோகேஷ் மீது ஜெ.ஜெ நகர் போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதேபோல் நீதிபதி மகனுடன் வந்த பெண் அவரது கையில் வைத்திருந்த சூடான டீயை தனது தம்பி லோகேஷ் மீது ஊற்றியதுடன், தங்களை தாக்கியதாக தர்ஷனும் போலீசில் புகார் அளித்தார்.
இரு தரப்பினர் அளித்த புகாரின்பேரில் ஜெ.ஜெ.நகர் போலீசார் 2 தரப்பையும் சேர்ந்த 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக நடிகர் தர்ஷன், அவரது சகோதரர் லோகேஷ் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கார் நிறுத்துவது தொடர்பான தகராறு காரணமாக நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டிருப்பது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.