

நடிகர் தனுஷிற்கு பெரியவர்கள் முதல் சிறு குழந்தைகள் வரை ரசிகர்கள் பட்டாளம் அதிகம். குறிப்பாக கர்ணன் படம், நானே வருவேன் படத்தை தொடர்ந்து ரசிகர்கள் தனுஷின் அடுத்த படத்தை எதிர்நோக்கி காத்து கொண்டிருந்தனர்.
அவர்களை மகிழ்ச்சியாக அடுத்த படம் கேப்டன் மில்லர் என அறிவிக்கப்பட்டது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை ‘சாணிக்காயிதம்’, ‘ராக்கி’ படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்க, ஜி.விபிரகாஷ்குமார் இசையமைக்கிறார். பீரியட் படமாக உருவாகும் இந்தப் படத்தில் பிரியங்கா மோகன், ஜான் கொக்கன் உள்ளிட்டோருடன் கன்னட நடிகர் சிவராஜ் குமாரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில், படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்ட படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், போர் சூழலில் சடலங்களுக்கு இடையே கையில் பெரிய துப்பாக்கியுடன் வித்தியாசமான கெட்டப்பில் தனுஷ் நிற்பது அவரது ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
இந்த போஸ்டரே படத்தின் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது என்றே சொல்லலாம். ஆனால் அதே நேரத்தில் 2023 ஆம் ஆண்டு இந்த படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர இந்த போஸ்டரில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ’கேப்டன் மில்லர்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதை அடுத்து அடுத்தடுத்து சில அப்டேட்டுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.