நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான பார்க்கிங் திரைப்படம் தற்போது ஆஸ்கர் வரை சென்று சாதனை படைத்துள்ளது.
ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், இந்துஜா ரவிச்சந்திரன் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் 1-ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘பார்க்கிங்’. இப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஒரு வாடகை வீட்டில் குடுத்தனம் இருக்கும் இரு வீட்டாருக்கு ஏற்படும் பார்க்கிங் பிரச்சனையை இயக்குனர் அழகாக காட்டியிருப்பார். கடைசியில் நடக்கும் பிரச்சனைகளில் எப்படி சமாதானம் ஆகிறார்கள் என்பது தான் கதை.
இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், எம்.எஸ் பாஸ்கர் இடையே ஏற்படும் சின்ன ஈகோ பிரச்சனை எவ்வளவு பெரிய பிரச்சனையாக மாறும் என்பது மிகவும் உணர்வு பூர்வமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். சுமார் 3 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இந்த படம் 17 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது.
இப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து, ஓடிடியில் வெளியாகி பாராட்டுக்களைப் பெற்றது. மேலும், இதன் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இப்படம் 5 மொழிகளில் ரீமேக் செய்யப் பட உள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த சாதனையையே பலரும் கொண்டாடி வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு சாதனை படைத்துள்ளது பார்க்கிங்.
இந்நிலையில், தற்போது ‘பார்க்கிங்’ படத்துக்கு ஆஸ்கர் அங்கீகாரம் கிடைத்துள்ளது. ‘பார்க்கிங்’ படத்தின் திரைக்கதையானது ஆஸ்கர் அகாடமியின் நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஆஸ்கர் அகாடமி ‘பார்க்கிங்’ திரைக்கதை கேட்டு வாங்கி தனது நூலகத்தில் வைத்துள்ளது. இந்த மகிழ்ச்சி செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகர் ஹரிஷ் கல்யாண், "ஒரு நல்ல கதை அதுக்கான இடத்தை தானே தேடிப்போகும்" என்று கூறி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து பலரும் ஹரிஷ் கல்யாணுக்கும், பார்க்கிங் படக்குழுவுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சிறிய படமாக இருந்து பெரிய அளவில் வெற்றி பெற்றிருப்பது பலரிடையே ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.