
கராத்தே ஹுசைனி என்று அழைக்கப்படும் இவர் கராத்தே பயிற்றுவிப்பாளராக தனது சாதனைகளால் புகழ் பெற்றார். 1986-ல் வெளிவந்த கே. பாலசந்தரின் ‘புன்னகை மன்னன்’ படத்தின் மூலம் ஹுசைனி நடிகராக அறிமுகமானார்.
2001-ம் ஆண்டு வெளியான ‘பத்ரி’ திரைப்படத்தில் நடிகர் விஜய்யின் உடற்பயிற்சியாளராக நடித்திருந்தார். ஹுசைனி பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் ஒரு நடிகராக அவருக்கு பிரபலத்தை தேடி தந்தது என்றால் அது விஜயுடன் நடித்த பத்ரி படம்தான். அதனைத்தொடர்ந்து ஹுசைனி மெகா தொலைக்காட்சியில் நடத்து வந்த ‘அதிரடி சமையல்’ என்ற ஒரு சமையல் நிகழ்ச்சி அவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. இந்நிலையில் கடந்த 2022-ம் ஆண்டில் வெளியான ‘காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தில் இவரது நகைச்சுவை கலந்த நடிப்பு கவனம் ஈர்த்தது.
நடிகர்கள் விஜய், பவன் கல்யாண் மட்டுமின்றி பலருக்கும் ஹுசைனி கராத்தே பயிற்சி அளித்துள்ளார். சினிமா, கராத்தே கலையை தாண்டி வில் வித்தை பயிற்சியாளராகவும் திகழ்ந்த ஹுசைனி, 400-க்கும் மேற்பட்டோருக்கு பயிற்சி அளித்து வந்தார். அவரிடம் பயிற்சி பெற்றவர்கள் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் பரிசுகளை வென்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஷிகான் ஹுசைனி, தான் ரத்தப்புற்றுநோயால் பாதித்திருப்பதாகவும், தனது வாழ்நாள்கள் எண்ணப்பட்டு வருவதாகவும் அவர் பகிர்ந்த வீடியோ அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது. அத்துடன் தினசரி 2 யூனிட் ரத்தம் மற்றும் பிளேட்லெட்ஸ் தேவைப்படுகிறது. இப்படித்தான் தினமும் தனது வாழ்நாள் சென்று கொண்டிருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். அதுமட்டுமின்றி சாவை பார்த்து பயப்படக்கூடாது என்றும், சாவுக்கு நேராக சண்டை போட வேண்டும் என்றும் தைரியமாக கூறிய அவர், புற்றுநோய்க்கு பயப்படவில்லை என்றும் உயிரின் கடைசி நொடியிலும் சிரிப்பேன் என்றும் தைரியமாக கூறியுள்ளார்.
இந்த செய்தி ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வந்தனர். மேலும் அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என பலரும் பிரார்த்தனை செய்தனர்.
சமீபத்தில் மருத்துவம், உடற்கூறியல் மற்றும் ஆராய்ச்சிக்காக தனது உடலை தானம் செய்வதாகவும் அறிவித்தார். ஆனால் இதயத்தை மட்டும் பாதுகாப்பாக கராத்தே மற்றும் வில் வித்தை மாணவர்களிடம் ஒப்படைக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில் மன தைரியத்துடன் சாவினை எதிர்த்து போராடி வந்த 60 வயதான ஹுசைனி இன்று அதிகாலை 1 மணியளவில் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். மறைந்த அவரின் உடல் வில்வித்தை சங்கத்தில் அஞ்சலிக்காக இன்று மாலை 7 மணி வரை வைக்கப்பட்டிருக்கிறது. அதன் பிறகு அவரது சொந்த ஊரான மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதி சடங்குகள் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.
இவரது மறைவுக்கு கராத்தே மற்றும் வில்வித்தை விளையாட்டு வீரர்கள், திரைத்துறையினர் மற்றும் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.