
ஒளிப்பதிவாளராக தெலுங்கு திரையுலகில் பணியாற்றிய சிவா, கடந்த 2011-ம் ஆண்டு ரிலீஸ் ஆன சிறுத்தை படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார். கார்த்தி, தமன்னா நடித்த இந்த படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இந்த படத்தின் மூலம் சிறுத்தை சிவா என்றே அவர் அழைக்கப்படுகிறார்.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரத்தொடங்கிய சிவா, அதனைத்தொடர்ந்து அஜித் உடன் கூட்டணி வைத்து ‘வீரம்' படத்தை இயக்கினார். அப்படமும் சூபபர் ஹிட் ஆனதால் சிவாவுக்கு கோலிவுட்டில் மவுசு அதிகரித்தது. அதனை தொடர்ந்து ‘வேதாளம்', ‘விவேகம்', ‘விஸ்வாசம்' என தொடர் வெற்றி படங்களை இயக்கியதன் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
ரஜினிகாந்தை வைத்து ‘அண்ணாத்த', சூர்யாவை வைத்து ‘கங்குவா' படங்களை இயக்கினார். கங்குவா படத்தில் கார்த்தி சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். சுமார் 2 ஆண்டுகள் கடுமையான உழைப்புக்கு மத்தியில் உருவான ‘கங்குவா' படம் கடந்தாண்டு பான் இந்தியா அளவில் மிக பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்யப்பட்டது.
மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படம் வெளியாகி படுதோல்வியை சந்தித்ததுடன் வசூலிலும் மிகப்பெரிய சரிவை சந்தித்தது. அதுமட்டுமின்றி அப்படம் கடுமையான ட்ரோல்களையும் சந்தித்தது.
கங்குவா படத்தின் தோல்விக்கு பின்னர் சிலகாலம் அமைதியாக இருந்த இயக்குநர் சிவா தற்போது புது படத்தை இயக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் அவரது அடுத்த படத்தில் நடிக்கப்போவது யார் என்கிற எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில், அது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. சிவா-கார்த்தி கூட்டணி தான் மீண்டும் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சிறுத்தை படத்தில் இணைந்த இந்த கூட்டணி 14 ஆண்டுகளுக்கு பிறகு 3-வது முறையாக மீண்டும் இணைவதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். அதுமட்டுமின்றி கார்த்தியை வைத்து அதிரடி ஆக்ஷன் படம் எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.
கார்த்தி தற்போது ‘சர்தார்-2', ‘வா வாத்தியாரே' படங்களில் நடித்து வருகிறார். 2022-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற சர்தார் திரைப்படத்தின் இரண்டாம் பாகமான ‘சர்தார்-2' ஹாலிவுட் தரத்தில் இருக்கும் என சொல்லப்படுகின்றது. இந்த படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜின் 'கைதி-2' படத்தில் நடிக்க போவதாகவும் பேசப்படுகிறது. கடைசியாக அவரது நடிப்பில் வெளியான மெய்யழகன் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
கார்த்தி தன்னுடைய அடுத்தடுத்த கமிட்மெண்டுகளை முடித்த பின்னர் கார்த்தி - சிவா கூட்டணி கைகோர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ரசிகர்களையும் மகிழ்ச்சிப்படுத்தி இருக்கிறது.