ஹரா படத்தின் புரமோஷனுக்காக பல்வேறு பேட்டிகளை அளித்து வரும் நடிகர் மோகன், தன்னைப்பற்றிய வதந்திகள் குறித்து மனம்திறந்து பேசி உள்ளார்.
80களில் காதல் நாயகனாக கொடிகட்டிப் பறந்தவர் தான் மோகன். 1980-ல் வெளிவந்த மூடுபனி படம் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார் மோகன். இதையடுத்து மகேந்திரன் இயக்கத்தில் அவர் நடித்த நெஞ்சத்தை கிள்ளாதே திரைப்படம் ஓராண்டுக்கு மேல் ஓடி வெற்றி கண்டதோடு, அப்படத்துக்கு தேசிய விருதும் கிடைத்தது. இதையடுத்து இவர் நடித்த படங்கள் அனைத்தும் வரிசையாக ஹிட் அடித்ததால் வெள்ளி விழா நாயகனாக கொண்டாடப்பட்டார் மோகன்.
இவர் பெரும்பாலான படங்களில் மைக் வைத்து பாட்டுப் பாடி நடித்ததால் இவரை மைக் மோகன் என்று செல்லமாக அழைக்கப்பட்டார். இவரின் வா வெண்ணிலா பாடல், மௌன ராகம் படம் என பல படங்கள் இன்றளவும் ரசிகர்களின் ஃபேவரைட் லிஸ்ட்டில் உள்ளது. 80களில் டாப் ஹீரோக்களாக இருந்த ரஜினி, கமலுக்கு நிகராக மோகன் நடித்த படங்களும் ஓடி வெற்றிகண்டதால், டாப் ஹீரோவாக உயர்ந்தார் மோகன். ஆனால் இவரது வெற்றிப்பயணம் 10 ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. அதன் பின்னர் சினிமாவில் வரிசையாக சறுக்கலை சந்தித்த மோகன், ஒரு கட்டத்தில் நடிப்புக்கு எண்ட் கார்ட் போட்டார்.
தற்போது GOAT படத்தில் நடித்து மீண்டும் சினிமா பக்கம் திரும்பிய நடிகர் மோகன் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். 1990-களில் மோகன் சினிமாவில் இருந்து விலகி இருந்த சமயத்தில் அவருக்கு எய்ட்ஸ் பாதிப்பு ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. ஆனால் அது பற்றி எந்த ஒரு இடத்திலும் மனம்திறக்காமல் இருந்த மோகன், தற்போது ஹரா பட புரமோஷனுக்காக அளித்த பேட்டியில் அந்த வதந்தி பற்றி வெளிப்படையாக பேசி இருக்கிறார்.
அதில், 90-களில் எனக்கு எய்ட்ஸ் நோய் வந்து நான் இறந்துவிட்டதாக சொன்னார்கள். அந்த செய்தி கேட்டு என்னுடைய ரசிகர்கள் பதறியடித்து என் வீட்டிற்கு வந்தார்கள். எனக்கு மட்டுமில்ல என்னுடைய குடும்பத்தினருக்கும் அது அதிர்ச்சியாக இருந்தது. பின்னர் என்னை பேட்டி எடுக்க வந்தவர், எய்ட்ஸ் இல்லைனு சொல்லுங்க சார்னு சொல்ல சொன்னாங்க. டேய் இது போங்கா இருக்கேடானு சொன்னேன். ஏனென்றால், நீங்களே இருக்குனு சொல்வீங்க, இல்லைனு நான் சொல்லனுமானு கேட்டேன்.
அப்புறமா நண்பர்களிடம் சொன்னேன், இதுலயும் நான் தான் ஒரு டிரெண்ட் செட்டரா இருந்திருக்கேன். உண்மை என்னனு எனக்கு தெரியும், என் நண்பர்களுக்கு தெரியும், என் குடும்பத்தினருக்கு தெரியும். அது உண்மையா இருந்தா தான் ஃபீல் பண்ண முடியும். அதுனால எனக்கு எந்த ஃபீலிங்கும் இல்லை என தெரிவித்துள்ளார். அவர் நடித்துள்ள ஹரா திரைப்படம் நாளை ஜூன் 7ஆம் தேதி திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.