தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் தங்களுக்கென ஒரு இடத்தைப் பிடிக்கப் போராடி வருகிறார்கள். ஆனால், அது அவ்வளவு எளிதாக இருக்காது. பல வருட உழைப்பு, வெற்றி தோல்வி என பலவற்றைத் தாண்டித் தான் ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்க முடியும். பாய்ஸ் படத்தில் அறிமுகமான நடிகர் நகுல் இன்று வரையிலும் தனக்கென ஒரு தனியிடத்தைப் பிடிக்கப் போராடிக் கொண்டிருக்கிறார். பாய்ஸ் படத்தில் பப்ளிமாஸ் மாதிரி குண்டாக நடித்திருந்தாலும், அதற்குப் பின் எடையைக் குறைத்துக் கொண்டு, நடிகராக தன்னை மேம்படுத்திக் கொண்டார்.
சங்கர் இயக்கிய காமெடி திரைக்கதையான பாய்ஸ் படத்தில் நண்பர்களுடன் இணைந்து நடித்திருந்தார் நகுல். அதன் பிறகு 2008 ஆம் ஆண்டு வெளியான காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தனியாக நடிகர் அவதாரம் எடுத்தார். இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதால், அடுத்தடுத்து மாசிலாமணி, தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும், வல்லினம் மற்றும் நான் ராஜாவாகப் போகிறேன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். அதன் பிறகு பெரிதாக பட வாய்ப்புகள் ஏதும் கிடைக்காத நிலையில், வெகு நாட்களாக ரிலீஸ் ஆகாமல் இருந்த வாஸ்கோடகாமா திரைப்படம் இந்த ஆண்டு திரைக்கு வந்தது. இத்திரைப்படம் ரசிகர்களை ஈர்க்க தவறி விட்டது என்றே சொல்ல வேண்டும்.
தற்போது 'தி டார்க் ஹெவன்' படத்தில் நடித்துள்ளார். வெகு விரைவில் இப்படம் திரைக்கு வர இருக்கிறது. நடிப்பில் தனது திறமையை வெளிப்படுத்தினாலும், தமிழ் சினிமாவில் கோலோச்ச முடியாமல் திணறுகிறார் நகுல். இந்நிலையில், இவர் சினிமாவுக்கு நடிக்க வந்து 20 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன.
நடிகர் நகுல் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு, இராணுவத்தில் சேர ஆசைப்பட்டு இருக்கிறார். ஆனால், அது நடக்காமல் போனது. இதுகுறித்து சமீபத்தில் பேசிய நகுல், “காவல் மற்றும் இராணுவ உடையின் மீது எனக்கு ஒரு ஈர்ப்பு இருக்கிறது. இருப்பினும் அதனை அடைய நல்ல உடற்தகுதி அவசியம்; இலட்சியம் இருக்க வேண்டும்; தேசப்பற்று இருக்க வேண்டும். நான் ஆசைப்பட்ட காலத்தில் உடலளவில் நான் அதற்கு தகுதியாக இல்லை. அதன்பிறகு சினிமாவுக்குள் நுழைந்து விட்டேன். இத்தனை வருடங்கள் ஆகியும், நான் இன்னும் இங்கு எதையும் செய்யாததைப் போல் உணர்கிறேன். இருப்பினும் நான் 20 ஆண்டுகள் சினிமா துறையில் இருக்கக் காரணமே ரசிகர்கள் தான்.
சினிமா தான் எனக்கு வாழ்க்கை. கடந்த காலத்தையும், எதிர்காலத்தைப் பற்றியும் நான் சிந்திப்பதில்லை. இன்றைய தருணத்தை மட்டும் தான் விரும்புகிறேன். போலீஸ் உடையின் மீது இருந்த ஈர்ப்பு 'தி டார்க் ஹெவன்' படத்தின் மூலம் நிறைவேறியுள்ளது. அந்த உடையை அணியும் போது ஒரு கம்பீரம் வரும். அதனை இந்தப் படத்தில் நான் உணர்ந்தேன்.”