ஒருவனது பசியை ஆற்றுவதை விடவும், அவனுக்கு வாழ்வாதாரத்தை அளிப்பது மிகச் சிறந்த செயல். அவ்வகையில் தனக்கு தொழில் கற்றுக் கொடுத்து வாழ்வாதாரத்தை அளித்தவர் யார் என்பதை சமீபத்தில் தெரிவித்து இருக்கிறார் நடிகர் கவின். இதுகுறித்த கூடுதல் தகவல்களை இப்போது காண்போம்.
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் தடம் பதித்த நடிகர்களில் கவினும் ஒருவர். கல்லூரி சாலை (கனா காணும் காலங்கள்), சரவணன் மீனாட்சி என இவர் நடித்த சின்னத்திரைத் தொடர்கள் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அதன்பிறகு இவரது அடுத்த களம் வெள்ளித்திரையாகத் தான் இருந்தது. இவர் நடிகராவதற்கு முன்பு இயக்குநர் நெல்சன் திலீப்குமாரிடம் உதவி இயக்குநராக பணியாற்றி இருக்கிறார் என்பது பலரும் அறியாத தகவல்.
சரவணன் மீனாட்சி தொடருக்குப் பிறகு, இனி சின்னத்திரை தொடர்களில் நடிக்க மாட்டேன் என முடிவெடுத்து ஒதுங்கியிருந்தார். அதன் பிறகு பிக்பாஸ் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவராக மாறினார். வெள்ளித்திரைக் கதவுகளைத் தட்டிக் கொண்டிருந்த காலத்தில் தான் பீட்சா மற்றும் இன்று நேற்று நாளை போன்ற படங்களில் சிறுசிறு வேடங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு விக்ரம் பிரபு நடித்த சத்ரியன் படத்தில் மருத்துவராகவும், நட்புன்னா என்னன்னு தெரியுமா படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்தார்.
கவினின் தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக அமைந்தது தான் லிஃப்ட் திரைப்படம். இப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமான கவின், அடுத்ததாக டாடா படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் வெற்றிகரமான இளம் நடிகர்கள் பட்டியலில் இணைந்தார். நடப்பாண்டு இவரது நடிப்பில் வெளியான ஸ்டார் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்ற போதிலும் ஓரளவு வெற்றிப் படமாகவே அமைந்தது.
கவின் கதாநாயகனாக அறிமுகம் ஆவதற்கு முன்பாக நெல்சன் திலீப்குமார் இயக்கிய டாக்டர் படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்தார். அப்போது டாக்டர் படத்தில் கவின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப் போவதாகவும் செய்திகள் வெளிவந்தன. இருப்பினும் அவர் அப்படத்தில் நடிக்கவில்லை.
இதுபற்றி சமீபத்தில் மனம் திறந்த கவின், “நான் நெல்சன் அண்ணாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய போது படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்கவில்லை. ஏனென்றால், அவர் எனக்கு ஒரு தொழிலைக் கற்றுக் கொடுத்திருக்கிறார். அதாவது ஒருவனுக்கு மீனைக் கொடுத்தால் அவனது பசியை ஆற்றலாம்; அதுவே மீன் பிடிக்க சொல்லிக் கொடுத்தால் அவனுக்கு ஒரு வாழ்வாதாரத்தை உருவாக்கித் தருவதற்கு சமம். நெல்சன் அண்ணாவும் எனக்கு மீன் பிடிக்க கற்றுக் கொடுத்திருக்கிறார். அவருடன் பணியாற்றிய அனுபவங்கள், தற்போது எனக்கு மிகவும் உதவியாக உள்ளது” எனக் கூறினார்.
கவின் நடிப்பில் 'ப்ளடி பெக்கர்' திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இப்படத்தின் தயாரிப்பாளர் கூட நெல்சன் திலீப்குமார் தான். இதுதவிர்த்து கவின் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுடன் நடிக்கவுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சின்னத்திரையில் தொடங்கி வெள்ளித்திரையில் சாதித்து வரும் கவினுக்கு அடுத்தடுத்த படங்கள் வெற்றிபெற வாழ்த்துகள்.