

தமிழ் சினிமாவில் பாரதிராஜாவின் 'அலைகள் ஓய்வதில்லை ' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆனவர் நவரச நாயகன் கார்த்திக். 80 மற்றும் 90 களின் காலகட்டத்தில் அவரது மார்க்கெட் உச்சத்தில் இருந்தது , ஏராளமான ரசிகர்களும் அவருக்கு இருந்தனர். தொடர்ச்சியாக வெற்றியை தரும் ஓடும் குதிரையாக இருந்தாலும் , அவரை பற்றி சர்ச்சைகள் எப்போதும் இருந்த வண்ணம் இருந்தது. கார்த்திக் திரைப்படத்திற்கு கால்ஷீட் கொடுத்து விட்டு உரிய நேரத்தில் ஷூட்டிங்கிற்கு வர மாட்டார் என்று பலரும் நீண்ட காலமாக பேசிக் கொண்டு தான் உள்ளனர்.
இந்நிலையில் கண்ணாத்தாள் , திருநெல்வேலி திரைப்படங்களின் இயக்குனரும் , சீரியல் நடிகருமான பாரதிக் கண்ணன் சமீபத்தில் ஒரு யூ டியூப் சேனலுக்கு பேட்டி ஒன்று கொடுத்தார். அந்த பேட்டியில் நடிகர் கார்த்திக்கை பற்றி அவர் பேசியது , தமிழ் சினிமா உலகில் பேசுபொருளாக மாறியது. பலரும் கார்த்திக்கு எதிராகவும் , ஒரு சிலர் ஆதரவாகவும் பேசி வருகின்றனர்.
அந்த பேட்டியில் தான் இயக்க இருந்த ஒரு படத்திற்கு கார்த்திக்கிடம் 10 லட்சம் ரூபாய் , முன்பணம் கொடுத்ததாகவும் , பின்னர் ஒருநாள் அந்த படம் சரிவராது என்று அவர் மறுத்ததாகவும் கூறினார். படத்தில் நடிக்காத அவர் முன்பணத்தை திருப்பி தரவில்லை என்று கார்த்திக் போலவே பேசி நடித்துக் காட்டி இருந்தார். பாரதிக் கண்ணனின் நகைச்சுவையான நடிப்பின் காரணமாக அந்த பேட்டி வைரலானது.
பாரதி கண்ணனின் பேட்டியை தொடர்ந்து பலரும் இது குறித்து கருத்து தெரிவித்தனர். மேலும் இந்த பஞ்சாயத்து , அப்போதைய நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்திடம் வந்துள்ளது. அவர் கார்த்திக்கை அழைத்து விசாரித்த போது, மிகவும் கூலாக கார்த்திக் ஒரு பேப்பரில் சில தேதிகளை குறிப்பிட்டு குடுத்துவிட்டு, அனைவருக்கும் கால்ஷீட் கொடுத்தாச்சு ,பாய் பாய் என்று சொல்லிவிட்டு உடனே கிளம்பி விட்டதாகவும் கூறினார்.
இதன் பிறகு பலரும் கார்த்திக்கின் மறுபக்கம் பற்றி எதிர்மறையாக பேசத் தொடங்கியிருந்தனர். ஒரு சிலர் கார்த்திக்கின் நடிப்பு திறன் , அன்றைய கால அவரது ஸ்டேட்டஸ் பற்றியும் பேசினார்கள்.இந்நிலையில் ஒரு சிலர் தன்னை தொடர்புக் கொண்டு மென்மையாக மிரட்டுவதாக கூறி ,பாரதிக் கண்ணன் கார்த்திக் பற்றி பேசியதற்கு வருத்தம் தெரிவித்தார்.
இது பற்றி கார்த்திக்கின் நெருங்கிய நண்பரும் , நடிகருமான ராதாரவி ஒரு ஊடகத்திற்கு பேட்டி கொடுத்திருந்தார். பாரதி கண்ணன் , கார்த்திக் பற்றி எதார்த்தமாகத்தான் பேசியிருக்கிறார். அதை இப்போது பேச தேவையில்லை.இந்த பேட்டியை வைத்து எல்லாரும் கன்டென்ட்டுக்காகத்தான் பேசிகிறார்கள். அவர்களில் தயாரிப்பாளர் பாலாஜி பிரபு பேசியதுதான் ஓகே , ஏனேனில் அவர் தனக்கு நடந்த அனுபவத்தை பேசி இருந்தார்.
என்னை பொறுத்தவரை கார்த்திக் நல்ல மனிதர். எனது நண்பர் ஒருவரிடம் 'இது நம்ம பூமி' படத்தை ரிலீஸ் செய்ய இரண்டரை லட்சம் ரூபாய் வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தேன். இது எப்படியோ அவரது காதுகளுக்கு சென்றது.
உடனே அவர் தனது மேனேஜரிடம் இரண்டரை லட்சம் ரூபாயை கொடுத்து விட்டிருந்தார். நான் கார்த்திக்கிற்கு நன்றி சொல்ல ஃபோன் செய்தேன். அவரோ ஏன் பார்ட்னர் நன்றியெல்லாம் சொல்கிறீர்கள் என்று கேட்டார். பணம் கொடுத்தது மட்டுமின்றி அந்தப் படத்தின் கோவை உரிமையையும் வாங்கிக்கொண்டார். இப்படி ஏகப்பட்ட நல்ல குணங்கள் அவருக்கு இருக்கின்றன. அதையெல்லாம் பேசலாமே" என்றார்.