படம் 1; கெட்டப் 12! ஒரே படத்தில் 12 கெட்டப்பில் அசத்திய நடிகர் ரவிகாந்த்!

நடிகர் ரவிகாந்த்
நடிகர் ரவிகாந்த்
Published on

வெள்ளித்திரையில் கதாநாயகன் நாயகியாக மட்டும் இல்லாமல் துணைப் பாத்திரங்களாக வருபவர்கள் மீதான கவனமும் நம்மிடையே எப்போதும் இருக்கும். யார் இவர் என்று அந்த கதாபாத்திரம் பேச வைக்கும். அப்படி ஒரே படத்தில் பலவித கெட்டப்புகளை அதாவது கதாபாத்திரங்களைத் தாங்கி, ரசிகர்களைப் பிரமிக்க வைத்த நடிகர்தான் ரவிகாந்த்.

1962 மே 28ம் தேதி தமிழ்நாட்டில் பிறந்து தற்போது வரை தமிழ் நடிகராக சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் அறியப்படுபவர் ரவிகாந்த். வசீகரிக்கும் அமைதியான தோற்றமும் இனிய குரலும் இவரின் பிளஸ்.
2010 ல் வெளிவந்த ஹிட் படமான ‘கோவா’ திரைப்படம் பார்த்தவர்களுக்கு ஒரே நடிகர் வெவ்வேறான கெட்டப்களில் படம் முழுக்க வந்து அசத்தியது நிச்சயம் நினைவில் இருக்கும். படத்தின் முதல் காட்சியில் தொடங்கி க்ளைமேக்ஸ் வரை வாத்தியார், லாரி டிரைவர், போலீஸ், ஃபாரினர், பஞ்சாயத்துத் தலைவர், பைலட், கசினோ மேனேஜர், ஜோக்கர், சர்ச் ஃபாதர், பார்ட்டி ஆர்கனைசர்னு மொத்தம் 12 கெட்டப்களில் வந்து அசத்தியிருப்பார். படத்தில் பஞ்சாயத்தை வேடிக்கை பார்க்கிற கேரக்டரில் துவங்கி பஞ்சாயத்துத் தலைவரா வந்து முடிக்கிறது வரை நடித்திருப்பார். அனைத்து கெட்டப்புகளிலும் பொருந்தி அனைவரிடமும் பாராட்டுகளைப் பெற்றார்.

இவருக்கு ரவிகாந்த் என்ற பெயரை சூட்டி தன் திரைப்படைப்புகளில் வலம் வரும் வாய்ப்பு தந்தவர் இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் என்பதால் அவரை தனது குருவாகக் கருதிப் புகழ்வார். அதற்கு சான்றாக பாலச்சந்தர் விருப்பத்தை ஏற்று படப்பிடிப்புக்காக தனது பங்களாவில் நீச்சல் குளத்தில் இருந்த நீரை வெளியேற்றி காட்சிகள் எடுக்க சம்மதித்தார். பாலச்சந்தரின் மறைவுக்குப்பின் அவர் நினைவாக  நீச்சல் குளத்தைப் பயன்படுத்தாமல் அப்படியே வைத்திருப்பதாக பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

 ரவிகாந்த்...
ரவிகாந்த்...

நட்புக்கு மரியாதை தருபவர் என்பது இவரின் பங்களிப்பு பார்த்தே அறியலாம். ஆம்… சவுண்ட் பொறியாளராக வாழ்வைத் துவங்கிய இவருக்கு சாருஹாசன் தந்த அறி்முகத்தால் 1987ல் வந்த இயக்குனர் பாலச்சந்தரின் ‘மனதில் உறுதி வேண்டும்’ திரைப்படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது.

அதன்பின் பல படங்களில் நடித்தாலும் ஆசான் பாலச்சந்தர் இயக்கிய தொலைக்காட்சி தொடர்களான ‘சஹானா’, ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ உள்பட அவரின் ஆறு தொடர்களில் நடித்ததைப் பெருமையாக எண்ணும் இவர் இன்றளவும் சின்னத்திரை நடிகராக வலம் வருகிறார். தமிழ் மட்டுமின்றி மலையாளம்,  கன்னட சீரியல்களிலும் இடம் பெறுகிறார்.

இதையும் படியுங்கள்:
உங்கள் கனவுகளை நனவாக்குவது எப்படி?
நடிகர் ரவிகாந்த்

அதேபோல் இயக்குனர் வெங்கட்பிரபு உடனும் நல்லதொரு நட்பில் இருக்கும் இவர், அவர் இயக்கிய ‘சரோஜா’வில் துவங்கி நகைச்சுவை படமான ‘கோவா’, ‘மங்காத்தா’, ‘பிரியாணி’ போன்ற படங்களிலும் தொடர்ந்து நடித்து வருவது நட்புக்கு இவர் தரும் மதிப்பைக் காட்டுகிறது.

உயிரில்லாத ஜீவன்களிடம் மிகுந்த அன்பு கொண்டவர் என்பது இவரின் தனிச்சிறப்பு. தனியார் சேனல் ஒன்றில் இவர் பங்களா குறித்த கேள்விக்குப் பதில் அளிக்கையில், தனது வீடு பாம்பு, தேள், உடும்பு போன்ற வாயில்லா ஜீவன்கள் வாழும் கோயில் எனப் பேசியது அனைவரையும் கவர்ந்து, இவர் மீதான மதிப்பை அதிகப்படுத்தியது எனலாம்.

மிக அழகான பசுமை கொஞ்சும் இயற்கை சூழலில் கட்டப்பட்டுள்ள இவரின் வீடும் இதுவரை மங்காத்தா க்ளைமாக்ஸ், பஞ்சதந்திரம், பிரியாணி உள்ளிட்ட 25 க்கும் மேற்பட்ட படங்களில் தோன்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவரின் குடும்ப வாழ்க்கை குறித்து விவரமானத் தகவல்கள் இல்லை. ஆனால், 2000ம் ஆண்டு தனது முதல் மனைவியை விவாகரத்து செய்தபின், நடிகை அம்பிகாவை மணந்ததும் 2002லேயே இருவரும் விவாகரத்து செய்ததும் அனைவரும் அறிந்ததே.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com