பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர், படப்பிடிப்பு தளத்தில் திடீரென மயங்கி விழுந்ததைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சின்னத்திரை மூலம் புகழ்பெற்ற ரோபோ சங்கர், தற்போது பல்வேறு படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். நேற்று மதியம் ஒரு படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்தபோது, அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. படக்குழுவினர் உடனடியாக அவரை மீட்டு, அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
மருத்துவர்கள் அவரைப் பரிசோதித்ததில், அவருக்கு நீரிழப்பு (dehydration) மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் (low blood pressure) காரணமாக மயக்கம் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.
உடனடியாக அவருக்குத் தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு, தற்போது அவர் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார். மேலும், சில தினங்கள் மருத்துவமனையில் தங்கி ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
நடிகர் ரோபோ சங்கரின் மனைவி, "தொடர்ச்சியான படப்பிடிப்புகளின் காரணமாக அவருக்கு உடல் சோர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் ரத்த அழுத்தம் குறைந்துள்ளது. டாக்டர்கள் அவரை 2 நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும்படி கூறியுள்ளனர்" என்று தெரிவித்தார்.
முன்னதாக, சில ஆண்டுகளுக்கு முன்பு ரோபோ சங்கர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு உடல் எடை குறைந்து காணப்பட்டார். அப்போது அவர் குணமடைந்த நிலையில், மீண்டும் தற்போது உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அவருக்குப் பலரும் சமூக வலைதளங்களில் நலம் பெற வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.