
தந்தை பெரியாருக்கு ‘வெண் தாடி வேந்தர்’ என்று பட்டப் பெயர் உண்டு. ஆனால், அவர் தாடி வளர்த்ததற்கான காரணம் மிகவும் சுவாரஸ்யமானது. ஒரு சமயம் பெரியாருடைய தோழர்கள் கூடியிருந்த இடத்தில், ‘பெரியார் ஏன் தாடி வளர்க்கிறார்’ என்பது பற்றி ஒரு விவாதம் நடந்தது. அதற்கு மாயவன் நடராஜனிடம் தந்தை பெரியார், ‘தாடி வைத்திருப்பது முகத்துக்கு அழகாக இருக்கிறது. அதனால் வளர்க்கிறேன்’ என்று சொன்னாராம். எஸ்.பி.லிங்கம் என்பவர் கேட்டதற்கு, ‘ரஷ்ய நாட்டு அறிஞர்கள் போல தாடி வளர்க்கிறேன். தாடி அறிவுக்கு அடையாளம்’ என்றாராம். மூவலூர் இராமாமிர்தம் அம்மையாரிடம், ‘நாள்தோறும் நாலணா சவரக்கூலி மிச்சம்’ என்றாராம். பட்டுக்கோட்டை அழகிரிசாமி கேட்டதற்கு, ‘இன்னொருவரிடம் போய் தலையை குனிந்து பேசுவது கூடாது என்பதற்காக’ என்றாராம். பூவாளூர் பொன்னம்பலனாரிடம், ‘மேடையில் ஏறி பலரை தாக்கிப் பேசுகிறேன். போறான் கிழவன், பேசிவிட்டுப் போகட்டும் என்று சும்மா விட்டுவிடுவார்கள். அதற்காக தாடி வளர்க்கிறேன்’ என்று சொன்னாராம்.
இப்படி தாம் தாடி வளர்ப்பதற்கு ஒவ்வொருவரிடம் ஒரு காரணம் சொன்னாலும், ‘நாள்தோறும் சவரம் செய்ய பத்து நிமிடங்கள் வீதம் மாதம் முன்னூறு நிமிடங்கள் வீணாகிறது. இந்த நேரத்தை நல்ல காரியத்திற்கு செலவிடலாமே என்று நினைத்தேன். தாடி தானாக வளர்கிறது. வளர்ந்து விட்டுப் போகட்டுமே என்று விட்டுவிட்டேன்’ என்ற உண்மையான காரணத்தை பெரியார் சொன்னாராம்.
நீண்ட தாடி, கையில் தடி, எளிமையான உடையோடு மலேசியா நாட்டில் பெரியாரை கண்ட சிலர், இவரை சாமியார் என்று நினைத்து, அவரது காலில் விழுந்து வணங்கினர். அவரிடம் வரம் கேட்டனர். ஒரு கிராமத்தில் நடந்த பொதுக்கூட்டம் முடிந்து நண்பர்களுடன் உட்கார்ந்து பெரியார் பேசிக் கொண்டிருந்தபோது, ஒரு அம்மாவுடன் இருபது வயது மகளும் வந்திருந்தார். ‘இந்தியாவிலிருந்து வந்திருக்கும் சாமியார் எங்கே?’ என்று கேட்டுத் தேடினாராம். நண்பர்கள் பெரியாரைக் காட்டினர். உடனே அந்த அம்மா பெரியாரின் காலில் விழுந்து வணங்கி, ‘சாமி நான் பத்து மைல் தொலைவிலிருந்து வருகிறேன். என் மகளுக்குக் குழந்தை இல்லை. அவளுக்குக் குழந்தை பிறக்க வேண்டும் என்று வரம் தாருங்கள்’ என்று கேட்டார்.
அதைக் கேட்டு எல்லோரும் சிரித்தனர். பெரியாரும் சிரித்தார். ‘நான் சாமியார் இல்லை. வெறும் ஆசாமிதான். எனக்கே பிள்ளை இல்லை. நம்பாவிட்டால் இந்த அம்மாவை (மனைவியைக் காட்டி) கேட்டுப் பாருங்கள். பிள்ளை இல்லாவிட்டால் என்ன? நன்றாக சம்பாதியுங்கள், சாப்பிடுங்கள், சேமித்து வையுங்கள்’ என்று பெரியார் கூறினார். ஆனால், அந்த அம்மா விடவில்லை. ‘இந்த ஏழை மீது இரக்கம் வையுங்கள்’ என்று பரிதாபமாகக் கெஞ்சியுள்ளார். உடனே பெரியாரும், ‘சரி… உன் மகளுக்கு ஆண் குழந்தை பிறக்கும். சுகமாக இருங்கள்’ என்று சொன்னாராம். அந்த அம்மாவும் திருப்தியுடன் அங்கிருந்து சென்றுள்ளார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு பெரியாரை நண்பர்கள் நன்றாக கேலி செய்தனர்.
பெரியார் ஈ.வே.ரா. மிகவும் சிக்கனமாக செலவு செய்வதில் புகழ் பெற்றவர். ஒரு சமயம் கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் தொழிலதிபர் ஜி.டி. நாயுடு பிரயாணம் செய்வதற்காக வந்தார். அப்போது ஈ.வெ.ரா.வும் பயணம் செய்வதற்காக மூன்றாவது பெட்டியில் அமர்ந்திருந்தார். அந்தக் காலத்தில் ரயில் பெட்டிகளில் மூன்று வகுப்புகள் உண்டு. ஜி.டி.நாயுடு பெரியார் இருக்கும் இடம் சென்று சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தபோது தமது ஆளை விட்டு முதல் வகுப்பிற்கு ஒரு டிக்கெட் வாங்கி வரச் செய்து, பெரியாரிடம் கொடுத்து, ‘வசதி குறைவாக ஏன் மூன்றாம் வகுப்புப் பெட்டியில் பயணம் செய்கிறீர்கள்? இறங்கி முதல் வகுப்புக்குச் சென்று விடுங்கள்’ என்று கூறிவிட்டு ஜி.டி. நாயுடு சென்று விட்டார்.
மற்றொரு ரயில் சந்திப்பில் வண்டி நின்றபோது, தாம் அமர்ந்த பெட்டியை விட்டு கீழே இறங்கிய ஜி.டி. நாயுடு, பெரியார் மீண்டும் மூன்றாம் வகுப்புப் பெட்டியிலேயே பயணம் செய்வதைக் கண்டு அவரிடம் சென்று, ‘நான் முதல் வகுப்பு டிக்கெட் வாங்கிக் கொடுத்தேனே, அது என்ன ஆயிற்று?’ என்று வினவினார். எந்த வகுப்பில் உட்கார்ந்தால் என்ன? ரயில் போக வேண்டிய இடத்திற்குக் கொண்டு போய் இறக்கிவிட்டு சென்று விட்டுப் போகப் போகிறது. அதற்காகத்தான் நீங்கள் கொடுத்த முதல் வகுப்பு டிக்கெட்டை ரயில் நிலைய அதிகாரியிடம் கொடுத்து பணமாக்கிக் கொண்டேன்’ என்றாராம். ஜி.டி.நாயுடுவுக்கு பெரியார் சொன்னதைக் கேட்டு சிரிப்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை.