தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் மறைந்த நடிகர் விஜயகாந்த் நினைவஞ்சலி பேசிய நடிகர் சரத்குமார், புலன் விசாரணை படம் சண்டை காட்சியில் விஜயகாந்தை நிஜமாக அடித்ததாக கூறினார்.
கேப்டன் விஜயகாந்த்திற்கு நடைபெற்ற நினைவஞ்சலி நடிகர் சரத்குமார் பேசும்போது, “இப்படி ஒரு நினைவேந்தல் நிகழ்ச்சியில் நாம் கலந்து கொள்வோம் என்று வாழ்நாளில் நினைத்துப் பார்க்காத தருணம் இது. கேப்டனின் மறைவு தமிழ் திரையுலகத்திற்கு மட்டுமல்ல தமிழ் சமுதாயத்திற்கே மாபெரும் இழப்பு. 1990ல் நான் தொடர்ந்து சரிவை சந்தித்து வந்த சமயத்தில் தான் அவரை முதன்முறையாக சந்தித்தேன்.
புலன் விசாரணை படம் எடுத்துக் கொண்டிருந்த நேரம். அப்போது அவரது அலுவலகத்தில் இயக்குநர், ஆர்.கே செல்வமணி, விஜயகாந்த், இப்ராஹிம் ராவுத்தர் ஆகியோர் இந்த படத்திற்கான வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு நான் பொருத்தமாக இருப்பேனா என விவாதித்துக் கொண்டிருந்தனர். அதில் நான் மீசை எடுத்தால் எப்படி இருப்பேன் என்று அவர்கள் பேசிய பேச்சு அவர்களை அறியாமல் என் காதில் விழுந்தது.
உடனடியாக அருகில் இருந்த சலூனுக்கு சென்று மீசையை எடுத்துவிட்டு வந்து இப்படித்தான் இருப்பேன் என அவர்களிடம் கூறினேன். மீசை எடுத்த நாளில் முதன் முதலாக அவரை சந்தித்தேன். தற்போது மீசை எடுத்த பிறகு அவரை சந்திக்க வேண்டிய சூழல் வந்துவிட்டது. வெளிநாட்டில் இருந்ததால் அவருக்கு நேரில் வந்து இறுதி அஞ்சலி செலுத்த முடியவில்லை. அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள முடியாமல் போய்விட்டது. அவரை இழந்துவிட்ட இந்த சூழலில் அவருடைய குணம், பழகுகின்ற விதம், வள்ளல் குணம் என அவரிடம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளம்.
புலன் விசாரணை படத்தில் அவருடன் மோதும் இறுதி சண்டைக் காட்சியில் தொடர்ந்து நான் அவரை அடிக்க வேண்டி இருந்தது. இயக்குநர் செல்வமணியிடம் அவரை இப்படி அடிக்க வேண்டுமா என கேட்டேன். அப்போது விஜயகாந்த் என்னை அழைத்து, சரத் அவர் சொல்வதை செய்யுங்கள் சரியாக இருக்கும் என்று கூறினார். நான் அவரை அந்த அளவிற்கு அடித்தால் தான், திருப்பி அவர் என்னை அடிக்கும் போது அந்த காட்சி சிறப்பாக இருக்கும் என்று சொன்னவர் விஜயகாந்த்.
அந்த காட்சி எடுக்கும் போது எனக்கு அடிபட்டு மூன்று நாட்கள் ஓய்வெடுக்க சொன்னார்கள். கேப்டனும் நான் குணமாகி வந்தபின் படப்பிடிப்பு நடத்தலாம் என கூறினார். ஆனால் நான் அன்றைய தினமே சிகிச்சை எடுத்துக் கொண்டு உடனே படப்பிடிப்பிற்கு திரும்பி வந்தேன். ஏன் இவ்வாறு செய்கிறீர்கள் என்று என்னை கடிந்து கொண்டார். அந்த படம் முடிந்ததும் படத்தின் ஃபர்ஸ்ட் காபி பார்த்துவிட்டு என்னை அழைத்து, சரத் இந்த படத்தில் உங்களுக்கு தான் பெரிய பெயர் என்று சொன்ன ஒரு பெருந்தன்மை வேறு எந்த ஒரு கதாநாயகனுக்கும் இருக்க முடியாது.
அதேபோல கேப்டன் பிரபாகரன் படம் முடிந்ததும் இந்த படத்தின் மூலம் மன்சூர் அலிகானுக்கு மிகப்பெரிய பெயர் கிடைக்கும் என்றும் என்னிடம் சொன்னார். அந்த மாதிரி குணம் கொண்ட ஒரு மனிதன் தான் புரட்சி கலைஞர் விஜயகாந்த். கேப்டன் பிரபாகரன் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த சமயத்தில் எனக்கு அடிபட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்தேன் அந்த சமயத்தில் என்னால் படப்பிடிப்பு நிற்கும் நிலை இருந்தது.
இயக்குநர் செல்வமணி முதற்கொண்டு செல்வது அறியாது கையை பிசைந்த சூழ்நிலையில், எனக்காக காத்துக்கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லாத போதும், சரத் குணமடைந்து வந்தபின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கும் அதன்பிறகு தான் படம் வெளியே வரும் என்று சொன்ன மாமனிதர் தான் விஜயகாந்த். நடிகர் சங்கத்தில் அவருடன் ஒரு பொதுச்செயலாளராக இணைந்து பயணித்திருக்கிறேன் அவருடைய நிர்வாகத் திறமை சிறப்பாக இருக்கும்.
அவர் கோபப்படுவார் என்றாலும் அந்த இடத்தில் குணம் இருக்கும். ஆனால் கோபத்தை மறந்து விட்டு அடுத்த கட்ட வேலையை பார்க்க துவங்கி விடுவார். வடிவேலு கூட இறுதி அஞ்சலிக்கு வரவில்லை என்று சொன்னார்கள் ஆனால் அவர் கேப்டனின் மறைவு கண்டு வீட்டிலேயே கண்கலங்கி அழுதிருக்கலாம். ஏனென்றால் மறப்போம் மன்னிப்போம் என்று குணம் கொண்டவர் விஜயகாந்த்.
சங்க தலைவராக இருந்தபோது அனைத்து நட்சத்திரங்களையும் ஒருங்கிணைத்து நட்சத்திர கலை விழாவை நடத்திய ஒரு மாபெரும் சக்தி என்றால் அது கேப்டன் தான். நிச்சயமாக இந்த தமிழ் சமுதாயத்தில் காலம் உள்ளவரை வாழ்ந்து கொண்டிருப்பார் என்பது உறுதி. ஏனென்றால் வள்ளல்களை நாடு மறப்பதில்லை. தமிழ் சமுதாயம் மறப்பதில்லை. நாமும் மறக்க மாட்டோம். கேப்டன் விஜயகாந்த்தை மறக்காமல் அவர் விட்டுச் சென்ற சமுதாய மற்றும் சமூகப் பணிகளை அவருடைய குணத்துடன் மேற்கொள்ள வேண்டும் என்று எண்ணுகிற இடத்தில் தான் அவர் இருக்கிறார். அவரை எந்த காலத்திலும் மறக்க மாட்டேன்” என்று கூறினார்.