‘அஜித்தால் என் மனைவியிடம் திட்டு வாங்கினேன்’ - நடிகர் ஷாம்!

ஷாம்
ஷாம்

விஜய் நடிப்பில் முதன் முறையாகத் தெலுங்கு, தமிழ் என ஒரே சமயத்தில் உருவாகியுள்ள படம் வாரிசு. ஏற்கனவே தமிழில் ‘தோழா’ என்ற படத்தைக் கொடுத்த இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இந்த முறை விஜய்க்கும் அதேபோன்று படத்தை கொடுத்துள்ளார். இந்தப் படத்தைப் பிரபலத் தெலுங்குத் தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்துள்ளார்.

விஜய்யின் படங்களை பொறுத்தவரை அவருடன் அந்த படத்தில் இணைந்து நடிக்கும் அத்தனை நட்சத்திரங்களும் ரசிகர்களிடம் கவனம் பெறுவார்கள். வாரிசு படத்தில் சரத்குமார், பிரபு, ஷாம், பிரகாஷ்ராஜ், தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், யோகிபாபு என பல முக்கிய நட்சத்திரங்கள் இதில் இணைந்து நடித்துள்ளனர்.

படத்தில் விஜய்யின் அண்ணன் கதாபாத்திரத்தில் படம் முழுவதும் அவருடன் இணைந்து பயணித்துள்ள நடிகர் ஷாமின் நடிப்பிற்கும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

நடிகர் ஷாம், வாரிசு படத்தில் விஜய்யுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் குறித்துப் பல சுவாரசியமான செய்திகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

ஷாம்
ஷாம்

“20 வருடங்களுக்கு முன்பு குஷி என்ற படத்தில் அவருடன் ஒரே ஒரு காட்சியில் இணைந்து நடித்து இருந்தேன். அதன் பிறகு இப்போது வாரிசு படத்தில் படம் முழுவதும் அவருடன் பயணிக்கும் விதமாக அவரது சகோதரர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். இந்தப் படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, ஸ்ரீகாந்த் என பல சீனியர்கள் நடித்திருப்பதால் வாரிசு குடும்பத்தில் நான் தான் ஜூனியர் என்று கூட சொல்லலாம்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பில் நிறைய விஷயங்களை விஜய் சாரிடம் இருந்து கற்றுக்கொண்டேன். படப்பிடிப்பில் உடன் நடிக்கும் எந்த நடிகர்களையும் ஈகோ இல்லாமல் பார்த்துக்கொண்டார். எந்த ஒருவரைப் பற்றியும் தவறாக ஒரு வார்த்தைகூடப் பேச மாட்டார். படப்பிடிப்பின்போது அவர் போன் பயன்படுத்தவே மாட்டார். அப்படியே யாரிடமாவது பேசவேண்டும் என்றாலும் உணவு இடைவேளையில் மட்டுமே பேசுவார். அதைப் பார்த்துவிட்டு நானும் படப்பிடிப்பு சமயங்களில் எனது போனைப் பயன்படுத்தவில்லை.

விஜய் - ஷாம்
விஜய் - ஷாம்

படப்பிடிப்பு சமயத்தில் எல்லோருடனும் கலகலப்பாக பேசுவார். மற்ற நேரங்களில் பெரும்பாலும் அடுத்து நடிக்கக் கூடிய காட்சிகளைப் பற்றியேதான் அவர் மனதில் அசை போட்டுக்கொண்டிருப்பார். எந்த ஒரு காட்சிக்கும் ரிகர்சல் பார்க்க மாட்டார். என்னுடன் இணைந்து நடிக்கும் காட்சிகளில் என்னிடம் அதுபற்றிக் கலந்துரையாடுவார். அதன்பிறகு நேரடியாக டேக் போய்விடுவார் அப்போது ஒரு மேஜிக் நடத்துவார் பாருங்கள், நிச்சயம் நம்மால் பிரமிக்காமல் இருக்க முடியாது.

கதாநாயகி ராஷ்மிகாவைப் பொருத்தவரை அவர் தேசிய அளவில் பிரபலம் ஆனவர். படப்பிடிப்பில் எப்போதுமே எனர்ஜிடிக்காக சுறுசுறுப்பாக இருப்பார். ஆனால் அவர் ஆரம்பத்தில் இருந்தே தீவிரமான விஜய் ரசிகை என்பதால். படப்பிடிப்பு தளத்தில் பெரும்பாலான நேரங்களில் அவர் விஜய்யையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருப்பார். அந்த அளவிற்கு விஜய்யுடன் இணைந்து நடிப்பதையே நம்ப முடியாதது போலத்தான் காட்சியளித்தார்.

பிரகாஷ்ராஜூடன் படப்பிடிப்பு இருக்கும் சமயங்களில் அவர்தான் அனைவருக்கும் தன் வீட்டிலிருந்தே சாப்பாடு வரவழைத்துத் தருவார். அவருக்குப் பெரும்பாலும் கண்களாலேயே பேசும் பவர் இருக்கிறது. அதேபோல சரத்குமாரும் நானும் ரெகுலராக ஜிம் செல்பவர்கள் என்பதால் படப்பிடிப்பின்போது காலையில் நான்கரை மணிக்கே எழுந்து ஒன்றாகவே ஜிம்முக்குச் சென்று விடுவோம். இந்தப் படத்தில் பிரபு சாருடன் நடித்தது புதிய அனுபவம் என்றாலும் அவருக்கும் எனக்குமான காட்சிகள் கொஞ்சம் குறைவுதான்.

விஜய் சாரிடம் பேசும்போது, எப்படி அண்ணா நாளுக்கு நாள் இளமை ஆகிக்கொண்டே போகிறீர்கள், இதற்காக என்ன உணவு கட்டுப்பாடு மேற்கொள்கிறீர்கள் என கேட்டால், தினசரி பூரி, பொங்கல்தான் சாப்பிடுகிறேன், எப்பவாவது உடற்பயிற்சி செய்கிறேன் எனச் சொல்லி ஆச்சரியப்படுத்தினார்.

படப்பிடிப்பு முடிவடைந்ததும் எங்களை எல்லாம் அவரது வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுத்து அசத்தினார். ஒவ்வொருவருக்கும் அவர்களுக்குப் பிடித்தமான உணவு அயிட்டங்களை அந்த விருந்தில் சேர்த்து இன்னும் ஆச்சர்யப்படுத்தினார். அப்போது தன் கையாலேயே அனைவருக்கும் பார்த்துப் பார்த்து பரிமாறினார்.

ஷாம்
ஷாம்

அஜித் சாருடன் இணைந்து நான் நடிக்கவில்லை என்றாலும் அவருடன் நெருங்கிய நட்பில் தான் இருக்கிறேன். அவரது மகளும் எனது மகளும் ஒரே பள்ளியில்தான் படிக்கிறார்கள். அதனால் அடிக்கடி பள்ளி சம்பந்தமான நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது அவரைப் பல முறை சந்தித்துப் பேசி இருக்கிறேன். அவர் தனது குழந்தைகள் சம்பந்தப்பட்ட பள்ளி நிகழ்வுகள் எதையுமே தவிர்க்க மாட்டார்.

ஒரு பெற்றோர் எப்படி தனது குழந்தைகளின் கல்வி விஷயத்தில் இருக்க வேண்டும் என்பதற்கு முன்மாதிரியாக இருப்பார். நான் கூட சிலமுறை பள்ளிக்கு செல்வேன். சில நேரங்களில் எனது மனைவி மட்டுமே குழந்தைகள் விஷயமாக பள்ளிக்குச் சென்று வருவார். அப்போது அங்கே அஜித் வந்திருப்பதை பார்த்துவிட்டு வந்து, அஜித் சாரே அனைத்து வேலைகளையும் ஒதுக்கிவிட்டு தனது குழந்தைகளுக்காக வருகிறார். நீங்கள் ஏன் வரமாட்டேன் என்கிறீர்கள்?” என என்னை திட்டுவார். அஜித் சாரால் அப்படி பலமுறை என் மனைவியிடம் திட்டு வாங்கி உள்ளேன்.

அடுத்ததாக இயக்குநர் விஜய் மில்டனின் டைரக்‌ஷனில் நடித்து வருகிறேன். அதைத் தொடர்ந்து சோலோ ஹீரோவாக நடிக்கவுள்ள ஒரு படமும் தயாராக இருக்கிறது” என்று கூறியுள்ளார் நடிகர் ஷாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com