

நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படம் ஒத்திவைக்கப்பட்டிருப்பதைப் படத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விரைவில் புதிய வெளியீட்டுத் தேதி தொடர்பான அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை திரையரங்குகளில் முதல் காட்சிக்கு முன்பதிவு செய்தவர்களுக்கு இன்று (ஜனவரி 8) பணம் திருப்பி அளிக்கப்படுகிறது எனத் திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் 'ஜனநாயகன்' படத்திற்கு டிக்கெட் முன்பதிவு செய்த ரசிகர்களுக்குப் பணம் திருப்பி அனுப்பும் பணியில் திரையரங்கு நிர்வாகங்கள் ஈடுபட்டுள்ளன. இத்திரைப்படம் வருகிற 9-ஆம் தேதி திரைக்கு வருவதாகக் கூறி டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டிருந்தன. கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திராவில் காலை 6 மணிக் காட்சிக்காகத் திட்டமிடப்பட்டிருந்தது. தமிழ்நாட்டில் காலை 9 மணிக்குத்தான் முதல் காட்சி என்பதால், ஆர்வமிகுதியில் விஜய் ரசிகர்கள் அண்டை மாநிலங்களில் காலை 6 மணிக் காட்சிக்கு முன்பதிவு செய்திருந்தனர்.
ஆனால், படம் சில சிக்கல்கள் காரணமாகத் தள்ளிப் போயிருப்பதால், திட்டமிட்டபடி ஜனவரி 9-ஆம் தேதி வெளியாக வாய்ப்பில்லை. இதனால் முன்பதிவு செய்திருந்த டிக்கெட் கட்டணம் திருப்பித் தரப்பட்டு வருகிறது. 'ஜனநாயகன்' தணிக்கைச் சான்று வழக்கில் 9-ஆம் தேதிதான் தீர்ப்பு வெளியாக வாய்ப்புள்ளது. ஏற்கனவே இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட ஐரோப்பிய நாடுகளில் 'ஜனநாயகன்' திரைப்படம் நாளை வெளியாகாது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
விஜய்யின் கடைசிப் படமான 'ஜனநாயகன்' ரிலீஸ் தள்ளிப் போனதால் ரசிகர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். விஜய்க்கு ஆதரவாகக் கோலிவுட்டிலும் குரல்கள் எழுந்துள்ளன. "தமிழ் சினிமாவே ஆபத்தில் இருக்கிறது" என்று இயக்குனர் ரத்னகுமார் தெரிவித்துள்ளார். இயக்குனர் அஜய் ஞானமுத்து, நடிகர்கள் சிபிராஜ், கிஷன்தாஸ், நடிகை சனம் ஷெட்டி ஆகியோரும் ஆதரவாகப் பேசியுள்ளனர்.
இயக்குநர் ரத்ன குமார் :
"தமிழ் சினிமா ஆபத்தில் இருக்கிறது" என்று கவலை தெரிவித்துள்ள இயக்குநர் ரத்ன குமார், "விஜய் சார் வலிமையாக இருங்கள். கொரோனா காலக்கட்டத்தில் சரிந்திருந்த தமிழ் சினிமாவை மீட்டெடுத்தவர் நீங்கள். இந்தப் படமும் வெளியாகும் நாள் அன்று தான் எங்களுக்குத் திருவிழா" என உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.
நடிகர் சிபிராஜ் :
"இப்போது நடப்பதைப் பார்த்தால், இது 'ஜனநாயகன்' படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறுவதற்கான ஒரு முன்னோட்டமாகவே தெரிகிறது. நம்பிக்கையுடன் இருங்கள், வெற்றி நிச்சயம்" என்று ஊக்கமளித்துள்ளார்.
நடிகை சனம் ஷெட்டி :
"அநியாயத்தின் உச்சகட்டம் இது எல்லாம். ஆனால் நீங்க பண்ணுங்க.. நீங்க இப்படி பண்ண.. பண்ண.. விஜய் உயர்ந்து கொண்டே தான் போவாங்க. பொங்கல் அன்று படம் வரவில்லை என்றால் என்ன? படம் வெளியாகும் நாள் தான் நமக்கு பொங்கல். என்னமோ நினைத்து நீங்கள் செய்த வேலையால், இப்போது சினிமா வரலாற்றிலேயே யாருமே எதிர்பார்க்காத, யாருமே செய்யாத சம்பவத்தை நாங்கள் செய்து காட்டுவோம். காத்திருங்கள். காத்திருக்க நாங்கள் ரெடி, அதற்கு அது தகுதியானதும் கூட. நீ வா தல நாங்க இருக்கோம்" என்று பேசி உள்ளார். அவரது இந்த பேச்சு தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.