

நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படமான ஜனநாயகன் நாளை ஜனவரி 9 ஆம் தேதியன்று திரைக்கு வர இருந்த நிலையில், தணிக்கை சான்று விவகாரம் தொடர்பாக படத்தின் ரிலீஸ் தள்ளிப் போனது. தணிக்கை குழுவில் உள்ள உறுப்பினர்கள் ஜனநாயகன் திரைப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்க முன்வந்த நிலையில், சான்றிதழை வழங்காமல் காலதாமதம் செய்வதாக தயாரிப்பு நிறுவனம் நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிட்டது.
இந்நிலையில் படத்தை மறு தணிக்கை செய்வது அவசியமென தணிக்கை குழு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் திட்டமிட்டபடி நாளை திரைப்படம் வெளியாகாது என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் விஜய்க்கு ஆதரவாக பல்வேறு சினிமா பிரபலங்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் விஜய்க்கு ஆதரவாக பேசியுள்ளார்.
ஏற்கனவே காங்கிரஸ் நிர்வாகியான பிரவீன் சக்கரவர்த்தி விஜய்க்கு ஆதரவாக பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில், தற்போது மற்றொரு காங்கிரஸ் எம்.பி. விஜய்க்கு ஆதரவு தெரிவித்து இருப்பது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜனநாயகன் திரைப்படத்தின் தணிக்கை சான்று விவகாரத்தில் நாளை தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனதால், டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு டிக்கெட் கட்டணம் திருப்பி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஆன்லைன் டிக்கெட் புக்கிங் தளங்களில் ஜனநாயகன் படமும் நீக்கப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னர் தணிக்கை சான்று கிடைத்த பிறகு, மீண்டும் டிக்கெட் முன்பதிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், நடிகர் விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே அரசியல் வட்டாரத்தில் விஜய்க்கு காங்கிரஸ் தரப்பிலிருந்து பல்வேறு ஆதரவுகள் பெருகி வரும் நிலையில், மாணிக்கம் தாக்கூரின் இந்த கருத்து முக்கியத்துவம் பெறுகிறது. சினிமாவுக்கு அரசியல் அனுமதி தேவையில்லை என நடிகர் விஜய்க்கு ஆதரவாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “சிபிஐ, வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை வரிசையில் தற்போது தணிக்கை துறையும் சேர்ந்து விட்டது. தணிக்கைத் துறையை மத்திய அரசு தவறாக வழி நடத்துகிறது. சினிமாவுக்கு அரசியல் அனுமதி தேவையில்லை. அதற்கு அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாப்பே தேவை. அதிகாரத்தின் முன் கலைத்துறை மண்டியிடத் தள்ளப்படும் போது, ஜனநாயகம் உயிர்வாழ முடியாது” என மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
தீவிர அரசியலில் இறங்கியுள்ள விஜய், சட்டமன்றத் தேர்தலுக்கு தனது கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். ஏற்கனவே தவெக - காங்கிரஸ் இடையே கூட்டணி குறித்த பேச்சுகள் நடப்பதாக இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் தரப்பினர் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து வருவது, அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
தமிழகத்தின் புதிய சக்தியாக விஜய் உருவெடுத்துள்ளார் என நேற்று காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்திருந்தார். இந்நிலையில் விஜய்க்கு காங்கிரஸ் தரப்பில் இருந்து தொடர் ஆதரவுகள் வருவதால், தவெக மற்றும் காங்கிரஸ் இடையே சுமூக உறவு இருப்பதாக தெரிகிறது. சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் இருப்பதால், கூட்டணியில் மாற்றங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.