சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் நடிகர் சிவகார்த்திகேயன் சென்ற கார் விபத்துக்குள்ளாகியுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் தனது காரில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக முன்னால் சென்ற கார் மீது அவரது கார் மோதியது. நடிகர் சிவகார்த்திகேயன் அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து OMR சாலையில் செல்வதற்காக தனது BMW காரில் சென்றுள்ளார். அப்போது இரவு 7:40 மணியளவில் OMR சாலையில் முன்னாள் ராணுவ வீரரின் மனைவி ஒருவர் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 காரில் சென்று கொண்டிருந்துள்ளார்.சரியாக மத்திய கைலாஷ் சிக்னலில் இருவரும் வலது பக்கம் திரும்பும்போது, திடீரென அந்த காரை ஓட்டி வந்த பெண் தனது ஹூண்டாய் காரை OMR சாலையின் நோக்கி வலது பக்கம் திருப்பியதாக கூறப்படுகிறது.அப்போது பின்னால் BMW காரில் சென்ற சிவகார்த்திகேயனின் காரானது, பெண் ஓட்டி சென்ற ஹூண்டாய் காரின் பின்புறம் லேசாக இடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும், இரண்டு கார்களும் லேசாகச் சேதமடைந்தன. விபத்தைத் தொடர்ந்து இரு தரப்பு ஓட்டுநர்களுக்கும் இடையே சாலையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் உண்டானது.
வாக்குவாதம் முற்றியதைக் கண்ட சிவகார்த்திகேயன், உடனடியாகக் காரில் இருந்து கீழே இறங்கி வந்து சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். கார் சேதமடைந்திருந்தால் அதற்கான தொகையை நான் தந்துவிடுகிறேன் என்று அவர் பெருந்தன்மையுடன் கூறியுள்ளார்.
தகவலறிந்த மயிலாப்பூர் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து அவர் அங்கிருந்து புறப்பட்டதும் போக்குவரத்து நெரிசல் சீரானது.