
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் கதாநாயகர்களாக நடிப்பது வழக்கமான ஒன்று தான். இருப்பினும் கதாநாயகனாக ஒரு காமெடி நடிகர் வெற்றி அடைகிறாரா என்பது தான் முக்கியம். நாகேஷ், கவுண்டமணி தொடங்கி சந்தானம், சூரி மற்றும் யோகி பாபு வரை பல காமெடி நடிகர்கள் கதாநாயகர்களாக நடித்து விட்டனர். ஆனால் இதில் சந்தானமும், சூரியும் கொஞ்சம் ஸ்பெஷல். இவர்கள் இருவரும் தான் கதாநாயகர்களாக ஓரளவு நிலைத்து நிற்கிறார்கள்.
சந்தானம் கதாநாயகன் ஆனதும், சூரிக்கு காமெடி பட வாய்ப்புகள் அதிகரித்தன. தற்போது சூரியும் நாயகனாகி வெற்றிப் படங்களைக் கொடுக்கத் தொடங்கி விட்டார். தமிழ் சினிமாவில் சூரியின் வளர்ச்சி பலருக்கும் ஆச்சரியத்தை அளித்தாலும், இந்த நிலைக்கு வர அவர் கடுமையாக உழைத்திருக்கிறார். வெண்ணிலா கபடி குழு படத்தில் பரோட்டா காமெடியின் மூலம் பிரபலமான சூரி, அடுத்தடுத்து காமெடி காட்சிகளில் கலக்கினார். காமெடியனாக நடித்துக் கொண்டிருந்த சூரிக்கு, கதாநாயகன் வாய்ப்பை வழங்கினார் இயக்குநர் வெற்றிமாறன்.
விடுதலை திரைப்படத்தின் 2 பாகங்களும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து கருடன் மற்றும் மாமன் ஆகிய படங்களின் மூலம் தொடர் வெற்றிகளை கொடுத்து விட்டார் சூரி. காமெடியனாக நடித்தாலும் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ அவையனைத்தையும் செய்து விடுவார் சூரி. தீவிர உழைப்பின் காரணமாகத் தான் இன்று கதாநாயகனாகவும் உயர்ந்திருக்கிறார். இதற்கு சீமராஜா படத்தை உதாரணமாக கூறலாம்.
பொதுவாக ஹீரோக்கள் நான் படத்தில் சிக்ஸ் பேக்குடன் நடிப்பார்கள். ஆனால் 2018 இல் வெளியான சீமராஜா படத்தில் சூரி சிக்ஸ் பேக் வைத்திருப்பார். ரசிகர்களுக்கு இது ஆச்சரியமாக இருந்தாலும், சூரி இதற்காக கடுமையாக உழைத்திருக்கிறார். ஆம், சிக்ஸ் பேக் வைப்பதற்காக கிட்டத்தட்ட 6 மாதங்கள் கடினமாக உடற்பயிற்சி செய்துள்ளார்.
சீமராஜா படத்தின் இயக்குநர் பொன்ராம் தான், ஒரு காட்சிக்காக சூரியிடம் சிக்ஸ் பேக் வைக்கச் சொல்லியிருக்கிறார். அதனை ஏற்று உடலைக் கட்டுக்கோப்பாக பராமரித்து சிக்ஸ் பேக் வைத்தார் சூரி. இதற்காக அவரது மனைவியும் உதவியிருக்கிறார். படம் திரைக்கு வந்த போது சூரி குடும்பத்துடன் தியேட்டருக்குச் சென்று ஆவலுடன் படத்தைப் பார்த்திருக்கிறார். படத்தில் சூரியின் சிக்ஸ் பேக்ஸ் காட்சி வெறும் 59 நொடிகளே இருந்தது. இதனால் சற்று ஏமாற்றம் அடைந்த சூரி, மனம் தளரவில்லை. இதுவும் ஒரு அனுபவம் என தன்னை மேம்படுத்திக் கொண்டார்.
இந்த ஏமாற்றம் தான் தன்னுடைய வளர்ச்சிக்கு நம்பிக்கை எனும் விதையை விதைத்தது என்று சூரி ஒருமுறை தெரிவித்திருந்தார். அந்த நம்பிக்கையால் தான் இன்று முன்னணி நடிகர்களுக்கே போட்டியாளராகும் அளவிற்கு வளர்ந்து நிற்கிறார் நடிகர் சூரி.
59 நொடிகள் காட்சிக்காக , 6 மாத உழைப்பைக் கொடுத்துள்ளார் சூரி. பலன் எந்த அளவிற்கு கிடைக்கிறது என்பது முக்கியமில்லை; நாம் எந்த அளவிற்கு முயற்சி செய்கிறோம் என்பது தான் முக்கியம். இது தான் சூரியின் வாழ்க்கையிலும் நிகழ்ந்துள்ளது. இனி சூரி இருக்கப் போவது காமெடி நடிகர்களின் பட்டியலில் அல்ல; கதாநாயகர்களின் பட்டியலில் தான்.