சூரியின் வளர்ச்சி குறித்து நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் பேசியுள்ளார்.
நடிகர் சூரி ஒரு கிராமத்திலிருந்து சினிமாவிற்கு வந்து, தனது திறமை மூலம் அனைவருக்கும் பிடித்தமான காமெடியனாக மாறினார். சாதாரணமாக ஒரு காமெடியன், ரசிகர்களுக்கு பிடித்த ஹீரோவாக மாறுவது மிகவும் கடினம். அது கடினம் என்று தெரிந்தும் , அந்தப் பாதையில் பயணித்த சந்தானம் கூட இன்னும் சூப்பர் ஹிட் படங்களைக் கொடுக்கவில்லை. ஆனால், சூரி ஹீரோவாக நடித்த முதல் படமே செம்ம ஹிட்டானது. ஆம்! வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடித்த விடுதலை படம், அவரின் சினிமா வாழ்க்கையில் பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
காமெடியன் ஹீரோவாக முடியாது என்ற விஷயத்தை சுக்கு நூறாக உடைத்தவர் சூரி. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான கருடன் படமும் அவருக்குத் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுக்க வைத்தது. விடுதலை படத்தைவிடவும் இதில் சூரியின் நடிப்பு அசுரத்தனமாக இருந்தது என்று ரசிகர்கள் கூறினர். இனி கதாநாயகனாகவே நடிக்கவும் சூரி முடிவு செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது நடிப்பில் அடுத்ததாக விடுதலை 2, கொட்டுக்காளி, ஏழு கடல் ஏழு மலை உள்ளிட்ட படங்கள் வெளியாகவிருக்கும் நிலையில் அவர் குறித்து பார்த்திபன் பேசியிருக்கிறார்.
அதாவது, “சூரியை இந்த நிலைமையில் பார்ப்பதற்கு சந்தோஷமாக இருக்கிறது. கிராமத்திலிருந்து சென்னைக்கு வந்து சினிமாவில் அவர் அடைந்திருக்கும் உயரம் ஆச்சரியமாக இருக்கிறது. இப்போது சூரிக்கு எட்டு கோடி ரூபாய் சம்பளம். முன்பு சாலிகிராமத்தில் ஒரு இடம் வாங்கினார். இப்போது சாலிகிராமத்தையே வாங்க விலை பேசிக்கொண்டிருக்கிறார்.” என்றார்.
சூரியின் வளர்ச்சி நிஜமாகவே சினிமாத்துறையில் யாராலுமே மறக்க முடியாத ஒன்று என்றே கூற வேண்டும். இவரின் படங்கள் வரிசையாக பல International Film Festival ல் திரையிடப்பட்டு, வென்று வருகிறது. பலரும் அவரைப் பாராட்டுவதும் குறிப்பிடத்தக்கது. இவருடைய படங்கள் உலகம் முழுவதும் அங்கீகாரம் அடைந்துள்ளது என்பதே சூரி உலக (நாயகன்) என்பதற்கான ஆதாரம்.