
தமிழ் சினிமாவின் 2000 ஆம் காலக் கட்டத்தில் சாக்லேட் பாயாக வலம் வந்து, அன்றைய முன்னணி நாயகர்களுக்கு கடும் போட்டியாக விளங்கியவர் நடிகர் ஶ்ரீகாந்த். இயக்குனர் சசியின் 'ரோஜாக்கூட்டம்' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிய இவர், முதல் படத்திலேயே மாபெரும் வெற்றியைப் பெற்று முன்னணி கதாநாயகர்களின் பட்டியலில் இணைந்து கொண்டார். ஆயினும் ஶ்ரீகாந்தின் அறிமுகம் எளிதாகக் இருக்கவில்லை.
முதலில் இயக்குனர் கே.பாலச்சந்தரின் 'ஜன்னல் - மரபுக் கவிதைகள்' என்ற தொலைக்காட்சி தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான இவர், மாடலிங் துறையிலும் கால் பதித்தார். சினிமா முயற்சிக்காக இவர் மிஷ்கின், வெற்றிமாறன் போன்றோரை நம்பி இருந்தார். அப்போது இருவரும் இயக்குனர் கதிரிடம் உதவி இயக்குனர்களாக வேலை செய்து வந்தனர். இவர்கள் பரிந்துரையில் 'காதல் வைரஸ்' திரைப்படத்தில் ஶ்ரீகாந்த் அறிமுகமாக இருந்தார். ஆனால், அவருக்கு பதில் நடிகை ஷாலினியின் அண்ணன் ரிச்சர்ட் கதாநாயகனாக அறிமுகமானார். அடுத்ததாக ஒளிப்பதிவாளர் ஜீவாவின் '12 B' திரைப்படத்தில் அறிமுக வாய்ப்பை எதிர்பார்த்தார், அந்த வாய்ப்பும் நழுவிப் போனது.
ஶ்ரீகாந்த்தின் கடும் முயற்சிக்கு பலனாக ரோஜாக்கூட்டம் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. முதல் படமே பெரிய வெற்றிப் படமாக அமைந்ததால் அடுத்தடுத்து அவருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்தது. அடுத்ததாக 'ஏப்ரல் மாதத்தில்' திரைப்படத்தில் சினேகாவுடன் ஜோடி சேர்ந்தார். இந்த திரைப்படமும் பெரிய வெற்றியைப் பெற தனது சம்பளத்தையும் அதிரடியாக ஶ்ரீகாந்த் உயர்த்தி விட்டார். இந்த திரைப்படத்திலிருந்து ஶ்ரீகாந்த் சினேகா காதலிப்பதாக வதந்திகள் பரவின. அதற்கு பின் இருவரும் மீண்டும் இணைந்து நடித்த 'பார்த்திபன் கனவு' திரைப்படமும் நல்ல வெற்றியை பெற்றது.
அறிமுகமாகிய 2002 ஆம் ஆண்டிலேயே மூன்று வெற்றி திரைப்படங்கள் கொடுத்த ஶ்ரீகாந்த், அடுத்த ஆண்டில் தெலுங்கு திரையுலகிலும் அறிமுகமானார். 'ஓகாரிகி ஒக்காரு' என்று பெயரிட்ட இந்த படத்தில் முதல்முறையாக ஶ்ரீகாந்த் இரட்டை வேடத்தில் நடித்தார். இந்த திரைப்படமும் பெரிய வெற்றியை பெற தெலுங்கிலும் முன்னணி நடிகராக உயர்ந்தார். தெலுங்கை பொறுத்தவரை ஏற்கனவே ஶ்ரீ காந்த் பெயரில் ஒரு நடிகர் இருந்ததால், இவர் அங்கு ஶ்ரீராம் என்று பெயரை மாற்றிக் கொண்டார்.
வேகமாக மேலே ஏறிக் கொண்டிருந்த அவரது கிராப் ஒரே இடத்தில் இருக்க தொடங்கியது. இந்த தருணத்தில் மணிரத்னம் இயக்கத்தில் 'ஆயுத எழுத்து' திரைப்படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை ஶ்ரீகாந்த் தவற விட்டார். அப்போது பெரிய வெற்றியை பெற்ற 'ரன்' திரைப்படத்திலும் முதலில் நடிக்கும் வாய்ப்பும் ஶ்ரீ காந்திற்கே கிடைத்துள்ளது. அதன் பிறகு எம்.குமரன் சன் ஆப் மஹாலட்சுமி, பிச்சைக்காரன் போன்ற படங்களில் நடிக்க கிடைத்த வாய்ப்புகளை தவற விட்டதால், அவரது சினிமா வாழ்க்கை சறுக்கலுக்கு உள்ளானது. அவர் தேர்ந்தெடுத்து நடித்த படங்கள் பெரும்பாலும் தோல்வியை தழுவின.
இதற்கிடையில் ஶ்ரீகாந்த் காதல் விவகாரம் ஊடகங்களில் சூடு பிடித்தது. வந்தனா என்ற பெண்ணை காதலித்த ஶ்ரீகாந்த் அவரை திருமணம் செய்ய மறுத்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் அந்தப் பெண் அவர் வீட்டு வாசலில் பல போராட்டங்கள் செய்ய, ஶ்ரீகாந்திற்கு பெண்களுக்கு மத்தியில் இருந்த இமேஜ் கெட்டுப் போனது. அதன் பிறகு வந்தனாவை திருமணம் செய்து கொண்டார். 2008 ஆம் ஆண்டிற்கு பிறகு 'பூ' மற்றும் 'நண்பன்' திரைப்படம் தவிர அவர் நடித்த எந்த திரைப்படமும் வெற்றி பெறவில்லை. சரியான கதைகளை தேர்வு செய்யாததால் பெரிய வாய்ப்புகள் கிடைத்ததும் தவற விட்டு விட்டார்.