
பிரபல தமிழ் நடிகர் ஸ்ரீகாந்த் போதை பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நுங்கம்பாக்கத்தில் உள்ள பார் ஒன்றில் தகராறு ஏற்பட்ட வழக்கில் அதிமுக பிரமுகர் பிரசாந்த் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பிரசாந்திடமிருந்து நடிகர் ஸ்ரீகாந்த் போதை பொருள் வாங்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. வெளியான தகவலின் அடிப்படையில் ஸ்ரீகாந்திடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், சென்னை நூங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போதைப் பொருள் பயன்படுத்தியது உறுதியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ரத்த மாதிரி எடுத்து மேற்கொண்ட மருத்துவ பரிசோதனையில் போதைப் பொருள் பயன்படுத்தியது தெரிய வந்துள்ளதாக போலீசார் தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது. கொக்கைன், மெத்தம்பெட்டமைன் போன்ற போதைப் பொருட்களை தொடர்ச்சியாக பயன்படுத்தியவர்களிடம் 45 நாட்கள் வரை மருத்துவ பரிசோதனை செய்யலாம்.
அதன்படி, ஸ்ரீகாந்திடம் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் போதைப் பொருள் உட்கொண்டது உறுதியாகியிருப்பதாக போலீஸ் தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.
பிரசாத் என்பவர் நடிகர் ஸ்ரீகாந்த் வைத்து தீங்கரை திரைப்படத்தை எடுத்து வந்ததாகவும், அப்போது நடிகர் ஸ்ரீகாந்துக்கு போதைப் பொருள் தேவைப்படுவதாக பிரசாத் தன்னிடம் இருந்து வாங்கி சென்றதாக பிரதீப் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள கிளப் மற்றும் பார்ட்டிகளில் இந்த கொக்கைன் போதை பொருளை ஸ்ரீகாந்த் பயன்படுத்தி வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் மற்றும் கொக்கைன் சப்ளை வழக்கில் கைதான பிரதீப் குமார் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், நடிகர் ஸ்ரீகாந்துக்கு போதைப்பொருளை சப்ளை செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ஸ்ரீகாந்திற்கும், இயக்குநர் விஷணுவர்தனின் தம்பியும் நடிகருமான ஸ்ரீ கிருஷ்ணாவுக்கும் போதை பொருள் பயன்படுத்துவதை பார்த்ததாக ஏற்கனவே கைது செய்யப்பட்ட பிரதீப் காவல்துறை இடம் தகவல் தெரிவித்துள்ளார். அந்த அடிப்படையில் நடிகர் ஸ்ரீகாந்திடம் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு காவல்துறை போதைப்பொருள் வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு கிராம் கோக்கைன் 12 ஆயிரம் ரூபாய் ஸ்ரீகாந்துக்கு விற்பனை செய்ததாக பிரதீப் காவல்துறையிடம் தகவல் தெரிவித்துள்ளார். விசாரணை முடிவில் ஸ்ரீகாந்த் சம்பந்தப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.