லஞ்சம் வாங்கிய சென்சார் போர்டு.. நடிகர் விஷால் அதிரடி புகார்!

actor vishal and actress lakshmi menon
actor vishal and actress lakshmi menon
Published on

மார்க் ஆண்டனியின் இந்தி பதிப்புக்காக சென்சார் போர்டு லஞ்சம் வாங்கியதாக நடிகர் விஷால் வீடியோ மூலம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா, ரித்து வர்மா, சுனில் வர்மா, செல்வராகவன், ஒய்.ஜி.மகேந்திரன், ரெட்டின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளியான படம் ‘மார்க் ஆண்டனி’. ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்த இந்த படம் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி உலகமெங்கும் வெளியானது.

போன் மூலம் டைம் டிராவல் என்ற விஷயத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. முன்னதாக மார்க் ஆண்டனி படத்தின் ட்ரெய்லர் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்ற நிலையில், ரூ.100 கோடி வசூலைப் பெற்றதாக வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சியில் நடிகர் விஷாலே அறிவித்தார்.

மேலும் படத்தின் ஒவ்வொரு டிக்கெட்டில் இருந்தும் ரூ.1-ஐ விவசாயிகளுக்கு வழங்கப்போவதாக அறிவித்திருந்தார். இந்த படம் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.இந்நிலையில் மார்க் ஆண்டனியின் இந்தி பதிப்பு நேற்று வியாழக்கிழமை வெளியானது. இதற்கிடையில் தனது எக்ஸ் தளத்தில் நடிகர் விஷால் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மார்க் ஆண்டனியின் இந்தி பதிப்பை வெளியிட மும்பையில் உள்ள மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

படத்தின் சான்றிதழுக்காக மூன்றரை லட்சமும், பட வெளியீட்டுக்காக மூன்று லட்சமும் கொடுத்ததாக கூறியதுடன் பணம் அனுப்பப்பட்ட வங்கிக்கணக்கின் விவரங்களையும் குறிப்பிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து விஷால் மேலாளர் ஹரி கிருஷ்ணன் லஞ்சம் தொடர்பாக இடைத்தரகர் மேனகா என்பவரிடம் பேசும் ஆடியோ வெளியானது.

தணிக்கை வாரியத்தில் நடக்கும் ஊழல் தொடர்பாக எதிர்கால திரைப்பட தயாரிப்பாளர்களின் நலன் கருதி பிரதமர் மோடியும், மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நடிகர் விஷால் கேட்டுக்கொண்டுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com