
தமிழில் ‘நாடோடிகள்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அபிநயா. தொடர்ந்து ‘ஈசன், ஏழாம் அறிவு, வீரம், பூஜை, மார்க் ஆண்டனி, குற்றம் 23, தாக்க தாக்க’ உள்ளிட்ட படங்களில் இவரது இயல்பான நடிப்பால் மக்களின் மனதை கொள்ளை கொண்டவர்.
அபிநயாவின் தந்தை இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸின் தெலுங்குத் திரைப்படத்தில் நடித்துள்ளார். அப்படப்பிடிப்பின் போது அபிநயாவை கவனித்த முருகதாஸ், இயக்குநர் சசிக்குமாரிடம் அறிமுகப்படுத்தியுள்ளார். சமுத்திரக்கனி இயக்கத்தில், சசிக்குமார் தயாரிப்பில் வெளியான நாடோடிகள் திரைப்படத்தில் அபிநயாவுக்கு வாய்ப்புகிட்டியது.
தன்னுடைய திரைவாழ்க்கையை நாடோடிகள் திரைப்படத்தின் மூலம் தொடங்கிய இவர் இந்த படத்தில் சசிக்குமாரின் தங்கையாக நடித்திருப்பார். இந்த படத்தில் இவரின் இயல்பான நடிப்பை பார்த்த அவைனவரும் இவரது திறமையை கண்டு வியந்தனர். ஏனெனில் இவரால் சரியாக பேச வராதிருந்த போதும், காது கேட்கும் திறன் குறைபாடு இருந்தபோதிலும், தன்னுடைய திறமையான நடிப்பால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருப்பார்.
அதன்பிறகு, இவர் நாடோடிகள் திரைப்படத்தின் மொழிமாற்றங்களிலும் நடித்து, தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் அறிமுகமானார். ஜோஜு ஜார்ஜ் இயக்கி நடித்த 'பணி' படத்தில் அபிநயா நடிப்பு அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. கடந்த வருடம் வெளியான இந்த படம் வெற்றிகரமாக ஓடியது. தற்போது அவர் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார்.
காது கேட்காமல், வாயும் பேசமுடியாமல் சைகை மொழியால் கதைகளை உள்வாங்கி, தனது இயல்பான நடிப்பால் கடந்த 15 வருடங்களாக சினிமாவில் தனக்கென தனி அடையாளத்தை பெற்று எல்லோருக்கும் பிடித்த நடிகையாக வீர நடை போட்டு வருகிறார் அபிநயா. திரைத்துறைக்கு வந்து இத்தனை ஆண்டுகளை கடந்த பிறகும் எந்த கிசுகிசுக்களிலும் மாட்டாமல் இருந்த அவர் அண்மையில் தன்னுடன் படித்தவரை 15 வருடங்களாக காதலித்து வருவதாகவும், விரைவில் அவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் காதலருடன் தனக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ளதாக சமூக வலைத்தளத்தில் அறிவித்த அபிநயா, நிச்சயதார்த்த மோதிரம் மாற்றிய பிறகு இருவரின் கைகளை மட்டும் புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் வைரலான நிலையில் அபிநயாவுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.