கத்தி எடுத்தவர்களுக்கு கத்தியால் தான் சாவு. வன்முறை என்பது இரண்டு புறமும் தீட்டப்பட்ட கத்தி. இது மாதிரி போதனைகளுடன் பல படங்கள் பார்த்திருப்போம். திருச்சூரையே தங்கள் கைகளில் வைத்திருக்கும் ஒரு குடும்பம். போலீஸ், ரவுடிகள், அரசியல்வாதிகள் என அனைவரும் இவர்கள் கைகளில். அதன் முக்கிய புள்ளி கிரி (ஜோஜூ ஜார்ஜ்). இவரது மனைவி அபிநயா. அதே ஊரில் ஒரு மெக்கானிக் கடையில் பணிபுரியும் இரண்டு வாலிபர்கள் (சாகர் சூர்யா, ஜுனைஸ்). பயமென்றால் என்னவென்று தெரியாத எதற்கும் துணிந்த இருவர் குழு.
பணத்திற்காகக் கொலை செய்யும் ஒரு கூலிப்படையாக மாற முடிவு செய்து ஒரு கொலையையும் அரங்கேற்றுகிறார்கள். இவர்கள் இருவரும் ஒரு கட்டத்தில் அபிநயாவிடம் கொஞ்சம் அத்து மீறி நடந்து கொள்கிறார்கள். அதை அறிந்த ஜோஜு ஜார்ஜ் அவர்களைச் சரியானபடி கவனிக்கிறார். பொதுமக்கள் முன்னிலையில் தங்களை அடித்துத் துவைத்த அவரையும் அவர் குடும்பத்தையும் பழி வாங்கியே ஆக வேண்டும் என்று முடிவு செய்து அதற்கான வேலைகளில் ஈடுபடுகிறார்கள். 'சாவு பயத்த காட்டிட்டான் பரமா' என்று சுப்ரமணிபுரத்தில் ஒரு வசனம் வரும். அதுபோல ஒரு தாதாவின் குடும்பத்திற்கே மரண பயத்தைக் காட்டும் இரண்டு வன்முறை இளைஞர்களின் கதை தான் பணி.|
ஒரு படத்தில் வில்லன்கள் வேடம் சரியாக அமைந்துவிட்டால் படம் தப்பித்து விடும் என்பதற்கு இது இன்னொரு உதாரணம். அவர்கள் இருவரும் வரும் காட்சிகளில் எல்லாம் திரைக்கதை பற்றிக் கொண்டு பறக்கிறது. அவர்களைப் பொறுத்தவரை யாரும் அவர்களுக்கு மேல் இல்லை. தங்கள் நோக்கம் நிறைவேற எந்த எல்லைக்கும் போகிறார்கள். ஒரு கட்டத்தில் பார்ப்பவர்களுக்கே அவர்கள்மேல் ஒரு வெறுப்பு வருகிறது. வில்லன் குடும்பத்தைவிட தங்கள் குடும்பங்களையே அவர்கள் அணுகும் விதமும் அதைக் கூட்டுகிறது. சற்று கூடச் சலனமின்றி வன்முறையைக் கட்டவிழ்த்து விடுகிறார்கள் இருவரும்.
ஜோஜு ஜார்ஜின் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் முதல் படம் இது. கதைக்கு முக்கியத்துவம் கொடுத்துத் தன்னை பின்னிருத்திக் கொண்டிருக்கிறார். அமைதியான ஆக்ரோஷத்துடன் அவர் இந்த வாலிபர்களை அணுகும் விதம் சிறப்பு. பெரிதாக வசனங்களே கிடையாது இவருக்கு. கோபமான பார்வை, ஆழ்ந்த மௌனம் என அமைதியாகவே பல இடங்களில் ஸ்கோர் செய்து விடுகிறார். அதே நேரம் இவ்வளவு வலுவான பின்னணி கொண்ட இவர் குடும்பத்தை அந்த இளைஞர்கள் இருவரும் மிகச் சுலபமாக அணுகுகிறார்கள். இவ்வளவு ஆள்படை கொண்ட குடும்பத்தின் வீடுகளில் பாதுகாப்பு இவ்வளவு பலவீனமாகவா இருக்கும் என்ற கேள்வி எழாமல் இல்லை. அது ஒரு குறையாகவே தோன்றியது. படத்தில் ஒரு அடியாள் கதாபாத்திரம் மிக முக்கியமாகக் காண்பிக்கப்படுகிறது. ஆனால் அதன் முடிவு சப்பென்று இருக்கிறது. இவர்களைக் கொடூரமாகக் காட்டுவதில் காட்டிய கவனத்தை தனது பாத்திரத்தின் மீது அவர் வெகுநேரம் காட்டவில்லை. இவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் காவல்துறை அதிகாரியாக வருகிறார். அவருடைய கதாபாத்திரமும் எந்தவிதமான முக்கியத்துவமும் இல்லாமல் தான் இருக்கிறது.
ஜோஜு ஜார்ஜின் அம்மாவாகச் சீமா. இவர் தனது மருமகளுடன் பேசும் ஒரு காட்சியும், அந்த வில்லன்களை எதிர்கொள்ளும் ஒரு காட்சியும் இவரது அனுபவ நடிப்பிற்கு சாட்சி. படத்தின் பெரும்பகுதி இவர்கள் குடும்பத்தில் நடக்கும் இழப்புகள், பிரச்சினைகள் என்றே சுழல்வதால், 'என்னடா தாதா குடும்பம் இது?' என்று தான் தோன்றுகிறது. அதற்குப் பதிலளிக்கும் விதமாக இறுதியில் வரும் ஒரு கார் துரத்தலும், கிளைமாக்ஸ் காட்சிகளும் சபாஷ் சொல்ல வைக்கின்றன.
படம் முழுதும் திருச்சூர், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டுமே படமாக்கப் பட்டிருக்கிறது. சில டாப் ஆங்கிள் காட்சிகளையும் கார் துரத்தல்களையும் மிக அற்புதமாகப் படமாக்கியுள்ளார்கள் ஒளிப்பதிவாளர்கள் ஜின்டோ ஜார்ஜும் வேணுவும். இசையைச் சாம் சி எஸ் மற்றும் விஷ்ணு விஜய் ஆகிய இருவரும் ஏற்றிருக்கிறார்கள். சண்டைக்காட்சிகளும் குறிப்பிட்டுச் சொல்லும்படி அமைந்திருக்கிறது.
மலையாளப் படங்களுக்கே உரிய புகைபிடிக்கும் காட்சிகள், குடிக்கும் காட்சிகள், படம் முழுதும் பரவியிருக்கின்றன. வயது வந்தோர்க்கான காட்சிகளும் இருப்பதால் இந்தப் படம் குழந்தைகளுடன் பார்ப்பதற்கு ஏதுவான படம் இல்லை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். தமிழில் இதே போலச் சுசீந்திரனின் நான் மகான் அல்ல உள்பட சில படங்கள் வந்திருகின்றன. சந்தர்ப்ப வசத்தால் பாதை மாறும் இளைஞர்களால் சமூகம் எதிர்நோக்கும் ஆபத்துகளைச் சொன்னாலும் ஜோஜு ஜார்ஜின் குடும்பமும் அதே போன்ற செயல்களில் தான் ஈடுபடுகிறது. எனவே இறுதியில் இவர்களில் யார் ஜெயித்தது என்றால் ரத்தமும் வன்முறையும் மட்டுமே என்ற முடிவுக்குத் தான் வர வேண்டியிருக்கிறது.
கதை பற்றியெல்லாம் பெரிதாகக் கவலையில்லை. அமர்ந்தால் இரண்டு மணி நேரம் போனதே தெரியக் கூடாது. தேவையற்ற மசாலாக்கள் தேவையில்லை. பரபரவென்று நகர்ந்தால் போதும் என்று நினைக்கும் ரசிகர்கள் இதைப் பார்க்கலாம். சோனி லிவ்வில் பல மொழிகளில் காணக் கிடைக்கிறது.