
பொதுவாக, இயக்குநர் ராம் திரைப்படங்கள் என்றால் ஒரு வித சோகமும் வலியும் இருக்கும். ஆனால் இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ள 'பறந்து போ' திரைப்படம் முழுக்க, முழுக்க நகைச்சுவை படமாக வந்திருக்கிறது. இப்படம் ரோட்டர்டாம் திரைப்பட விழாவில் திரையிட பட்டு பார்வையாளர் மத்தியில் வரவேற்பை பெற்றது. அகில உலக சூப்பர் ஸ்டார் 'மிர்ச்சி' சிவா படத்தின் ஹீரோவாக நடித்திருக்கிறார். கற்றது தமிழ் படத்தில் ராம் அறிமுகம் செய்து வைத்த அஞ்சலி இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்
பறந்து போ படத்தின் ட்ரைலரில் ஒரு இடத்தில் சூரியகாந்தி பூவை கையில் வைத்திருப்பார் சிவா. இவரை பார்த்து அஞ்சலி "நான் ஐந்தாவது படிக்கும் போது உன்கிட்ட சூரியகாந்தி பூ கேட்டேன். இப்ப என் மகன் ஐந்தாவது படிக்கும் போது சூரியகாந்தி பூ கொண்டு வந்திருக்க " என்று ஒரு வசனம் வருகிறது.
இதை நினைவூட்டும் வகையில் 'பறந்து போ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் மேடை முழுவதும் ஆயிரக் கணக்கான சூரியகாந்தி பூக்களால் அலங்காரம் செய்திருந்தார்கள். இதை பார்த்த அஞ்சலி, "நான் ஒரு சூரிய காந்தி பூ தான் கேட்டேன். இங்கே ஆயிரம் பூக்களை கொண்டு வந்துட்டாங்க" என்று மகிழ்ச்சியுடன் சொன்னார்.
நிகழ்ச்சியில் பேசிய மிர்ச்சி சிவா "நான் படத்தில் அஞ்சலியை லவ் பண்றேன். ஆனால் எனக்கு ஜோடி அஞ்சலி அல்ல. அஜூ வர்கீஸ் தான் ஜோடி" என்று கொஞ்சம் வருத்தத்துடன் சொல்கிறார்.
"காதல், சோகம், நகை சுவை, தாய்மை எப்படி கதாபாத்திரம் தந்தாலும் இயல்பாக பொருந்தி போகக்கூடியவர் அஞ்சலி" என்கிறார் ராம்.
"நான் எத்தனை வருடம் கழித்து நடிக்க வந்தாலும், தமிழ் நாட்டு மக்கள் அவர்கள் வீட்டு பெண்ணாக என்னை பார்க்கிறார்கள். இந்த அன்புக்கு நன்றி" என்று நெகிழ்வுடன் சொல்கிறார் அஞ்சலி. (இந்த அன்புக்கு கட்டு பட்டு அஞ்சலி தெலுங்கு பக்கம் பறந்து போகாமல் தமிழ் படங்களில் நடிப்பாரா?)
தெலுங்கில் நடித்து கொண்டிருந்த அஞ்சலியை குருநாதர் ராம் அவர்களே கடந்த 2019 பேரன்பு படத்தில் நடிக்க வைத்தார். இப்படம் விமர்சன ரீதியாக பலரின் வரவேற்பை பெற்றது. இருந்தாலும் 2019 க்கு பிறகு இந்த ஐந்தாண்டுகளில் அஞ்சலி தெலுங்கில் மட்டுமே கவனம் செலுத்தி நடித்தார். இந்த இரண்டாவது முறையும் 'குரு' அவர்களே தனது மாணவி அஞ்சலியை 'பறந்து போ' படத்தில் நடிக்க வைத்துள்ளார்.
இந்த படம் வரும் ஜூலை 4 அன்று திரைக்கு வர உள்ளது.