
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக ஜொலிப்பவர் நடிகை காஜல் அகர்வால். இவர் 2004-ம் ஆண்டு பாலிவுட் திரைவுலகிலும், பின்னர், 2007-ம் ஆண்டு லட்சுமி கல்யாணம் என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்குத் திரைத்துறையில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து 2008-ம் பழனி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைவுலகில் அறிமுகமானார்.
திரைத்துறையில் நுழைந்து 5 வருடங்கள் ஆன நிலையிலும் அவர் நடித்த படங்கள் சரியாக ஓடாத நிலையில், 2009-ம் ஆண்டு ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண் ஜோடியாக இவர் நடித்த ‘மகதீரா’ திரைப்படம் மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்ததுடன் சினிமாவில் இவருக்கான ஒரு அங்கீகாரத்தையும் கொடுத்தது.
அதனை தொடர்ந்து அவர் நடித்த படங்கள் வெற்றி பெற முன்னனி நடிகைகளில் பட்டியலில் இணைந்தார். மகேஷ் பாபு, கமல்ஹாசன், விஜய், கார்த்தி, சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள காஜல் தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். இந்நிலையில் 2020-ம் ஆண்டு தொழில் அதிபர் கவுதம் கிட்சுலு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்துக்கு பிறகு நல்ல கதையம்சம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வந்த இவர், சமீபத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு ஜோடியாக இவர் நடித்த ‘சிக்கந்தர்’ படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன்-3' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் இந்த வருடம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனை தொடர்ந்து மோகன் பாபு தயாரிப்பில் முகேஷ் குமார் சிங் இயக்கும் ‘கண்ணப்பா' என்ற தெலுங்கு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சினிமா பிரபலங்கள் நடிப்பு தாண்டி ரியல் எஸ்டேட், ஹோட்டல், துணிக்கடை போன்ற பல தொழில்களில் முதலீடு செய்து பணம் ஈட்டி வருவதை போல நடிகை காஜல் அகர்வாலும் படங்கள் தாண்டி நகைகள் தயாரிப்பு தொழில் மற்றும் அழகு சாதனை பொருட்கள் தயாரிப்பு தொழிலிலும் நண்பர்களுடன் இணைந்து பணம் சம்பாதித்து வருகிறார். அதுமட்டுமின்றி விளம்பரங்கள் மூலமாகவும் கல்லா கட்டி வருகிறார்.
தற்போது புதிய படங்கள் எதையும் ஒப்புக்கொள்ளாமல் தவிர்த்து வரும் காஜல் அகர்வால், சினிமாவுக்கு முழுக்கு போடப்போவதாக தகவல்கள் காத்து வாக்கில் வந்த நிலையில், ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் இயக்குனர் அவதாரம் எடுக்க போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதுவும் தமிழில் இல்லீங்க.. அவர் முதன் முதலில் அறிமுகமான பாலிவுட் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாக உள்ளார்.
இவர், பாலிவுட்டின் முன்னணி கதாநாயகன் நடிக்கும் படத்தை இயக்கப்போவதாக கூறப்படுகிறது. பக்கா கமர்ஷியல் படமாக உருவாகும் அந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் காஜல் அகர்வால் நடிக்கப்போவதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகை, தொழிலதிபர்... தற்போது இயக்குநராக அவதாரம் எடுக்கும் காஜல் அவர்வாலுக்கு ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.